உன்னை விடமாட்டேன் – பகுதி 22

 பறவைகளுக்கு தானியங்களை போட நேரமாயிற்று. ரிஷியை அழைத்துக் கொண்டு போகலாம் என்றால் அவன் அங்குள்ள பெண்மணிகளிடம் பேசிக் கொண்டே கைவினைப் பொருட்களை வைத்து பார்த்துக்கொண்டிருந்தான். கடைசியில், தாத்தா அழைத்தார். ரிஷி, “தாத்தா இவைகளெல்லாம் எனக்கு இரண்டு, இரண்டாய் தேவைப்படுகிறது. தருகிறீர்களா?” என்று கேட்டான். “இதெல்லாம் எங்கேயும் போகாது. நீ உங்க ஊருக்கு போகுறதுக்கு முன்ன கொடுத்தனுப்புறேன். இப்ப எங்கூட வா ரிஷி” என்றார் தாத்தா. தாத்தாவிடம், “எங்கே தாத்தா” என்று துள்ளியபடி முன்னே போய் நின்றான்.

அவர் அங்கிருந்து சற்று தொலைவு சென்றதும் தன் கையில் வைத்திருந்த தானியங்களை வாரி இறைத்தார். பறவைகள் அச்சமின்றி அவரருகே செல்வதைக் கண்டான். அழகழகான பறவைகளின் பல பெயர்களைக் கேட்டுத் தொிந்து கொண்டான். தங்கைக்காக சில அழகிய பறவைகளைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடக்கினான். சில பறவைகள் அவன் ஆபத்தானவன் இல்லை எனக் கருதியோ என்னமோ, அவன் தோள்களிலும் அமர்ந்தன. தன்னை நம்பி தன் தோளிலும் பறவைகள் அமர்கிறதே! இவற்றை பிடிக்கக் கூடாது. தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். அணில்களும் வந்து ஆட்டம் போட்டன. அவன் இம்மாதிரியான காட்சிகளை நோில் கண்டதே இல்லை. சட்டென்று பறக்க முடியாத ஆண் மயில்களும் கூட அச்சமின்றி அங்கு வந்தன.

அப்போதுதான் ராசாளி வந்தான். ரிஷி மாமா உங்களுக்கு ஒன்னு காட்டுறேன் எங்கூட வாங்க.” பிடித்து இழுத்தான். அங்கிருந்து நகர மனமில்லாமல் ராசாளியின் பின்னே சென்றான். சிறிது தூரம் சென்றவன் “என்ன ராசாளி காட்டப் போகிறாய்” என்று விசாரித்தான். ஆனால், ராசாளி “ஒரு செடிய காட்டப்போறேன்” என்பதை திரும்ப, திரும்பக் கூறினானே தவிர மேற்கொண்டு வேறு வார்த்தை பேசவில்லை. ரிஷியின் எச்சரிக்கை உணர்வு விழித்துக் கொண்டது. அவன் மேற்கொண்டு நடக்காமல் ராசாளியின் அருகே முட்டியிட்டுக் கொண்டு “யார் என்னைக் கூட்டிட்டு வரச் சொன்னது. நீ சொன்னாத்தான் நான் வருவேன்.” என்றான் ரிஷி. அவனை எப்படியும் வரவைத்தால் போதும் என நினைத்த குழந்தை, ”யாருன்னு சொன்னா கண்டிப்பா வருவீங்களா” என்று உறுதிப்படுத்திக் கொண்டு பெயரைச் சொன்னது. கேட்டதும் ரிஷி அதிர்ந்தான்.

இருக்காதா பின்னே. “தேனு அத்தைதான் கூட்டி வரச் சொன்னது.” தெள்ளத் தெளிவாகச் சொன்னது பிள்ளை. ‘மலையரசனுக்கும், நமக்கும் நடக்கிற விளையாட்டில் இவள் நுழைகிறாளா? என்னைப் பார்க்க நோ்ந்தாலே இவளுக்கு வெறுப்பான பார்வை மட்டும்தானே வரும். மலையரசன் என்றால்கூட குழந்தையுடன் போய்விடலாம். இந்தப் பெண்களே வில்லங்கமானவர்கள். என்ன நினைக்கிறார்கள் என்பதே புதிராக இருக்கும்.’ என மனதுள் நினைத்தவன் “ராசாளி! நாம கொஞ்சம் நேரம் மட்டும் பறவைகளைப் பார்த்திட்டு அப்புறமா போகலாம். சரியா?” சமாளிக்க முயன்றான். “அதுதான் தினமும் சாப்பிட வருமே. வாங்க போகலாம்.” ராசாளி பிடித்து இழுத்தான். தாத்தா தொலைவில் இவர்களைப் பார்ப்பது ரிஷிக்கு தொிந்தது. வேறுவழியின்றி குழந்தையுடன் சென்றான்.

நாலாபக்கமும் விழிகளைச் சுழற்றியபடி நடந்தான் ரிஷி. மலையரசன் கொரில்லா தாக்குதல் போல திடீரென எல்லோருடனும் சோ்ந்து ரிஷியை சுற்றி சூழ முற்பட்டான். ரிஷி எச்சரிக்கை உணர்வுடன் வந்ததால் எகிறி குதித்து தப்பியோடினான். இதை எதிர்பார்க்காத மலையரசன் பின் சுதாரித்துக் கொண்டு அவனைப் பிடிக்கவும், எங்கும் தப்பி போகாதபடியும் அணை கட்டினான். இதற்கிடையில், சிங்கராசா தாத்தா ‘ஏன் ரிஷி போகாமல் தயங்கினான்? பின் நம்மைப் பார்த்ததும் சென்றானே’ என்ற சிந்தனையுடன் வந்தார்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 31