உன்னை விடமாட்டேன் – பகுதி 31
மலையரசன், தன் கோபம் முழுவதையும் தங்கை தேனரசி மீது காட்ட முயல அனைவரும் பெரும்பாடுபட்டு அவனை தடுத்தனர். மலையரசன் அவளிடம், “இனி என்னை ‘அண்ணா!’ என்று அழைக்காதே! நான் உன் அண்ணன் கிடையாது. உன்னிடம் எனக்கு பேச்சும் கிடையாது.” என்று கூறி சென்று விட்டான். அனைவரும் அவளைக் கரித்துக் கொட்டினர்.
தேனரசி தன் தாயிடமாவது ரிஷியைப் பற்றி கூறலாம் என்று பார்த்தால் “உன்னை ஏன் பெற்றேன் என்றே தொியவில்லை. இம்மாதிரியாக, தானே ஆடையைக் கலைத்து நாடகம் ஆடுபவள் இன்னும் என்னென்ன பொய்களை சொல்வாளோ? உன்னால் எனக்கும் சோ்த்தல்லவா கெட்ட பெயர். நீ உயிரோடு இருப்பதை விட சாகலாம்.” என்று தாய் அவளை வாட்டி எடுத்தாள். அங்கு ரிஷி, தாத்தாவைத் தவிர யாரிடமும் பேசவில்லை. இங்கோ, தேனரசியிடம் யாருமே பேசவில்லை.
தாத்தாவும் ‘சீ’ என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின் தேனரசியை பார்க்கவில்லை. ஏனெனில், ரிஷியை அவர்தான் கவனிக்க வேண்டி இருந்தது. தாத்தா, “ரிஷி நீ ரொம்ப கோவக்காரனா இருக்கியே. உன்ன உங்க வீட்டுல எப்படி சமாளிக்கிறாங்களோ? மன்னிக்கவும் கத்துக்கணும் ரிஷி.” விளையாட்டாய் பேசி அவன் கோபத்தை தணிக்க முயன்றார். “நான் மன்னிப்பேன் தாத்தா! அந்த மன்னிப்புக்கு தகுதியானவர்களை மட்டும்.” என்றார் ரிஷி. “மலையரசன் மன்னிப்புக்கு தகுதியற்றவனா?” என்று நேரடியாக கேட்டார் தாத்தா.
அதற்கு ரிஷி, “தாத்தா! நான் இப்போது உடனே மலையரசனிடம் பேசினால் அவனுக்கு திரும்பவும் தீர விசாரிக்காமல் தண்டனை தரும் புத்தி அவனை விட்டு போகுமா? நான் பேசாமல் இருந்தால்தானே அவன் இனி இதுமாதிரி அவசரப்பட்டு எதையும் செய்ய மாட்டான். எனக்கு கோபம் வருகிறது என்றீர்கள். மலையரசனைப் பற்றியும், மாயச்சாமி, தென்னரசு, மாயவன் என இவர்களைப் பற்றியும் தவறான தகவல் வந்தது. நான் அனுப்பிய அத்தனை பேருமே அச்சு பிசகாமல் புளுகினார்கள். நான் அந்தப் பொய்யை நம்பி கோபப்பட்டு விசாரிக்காமல் மலையரசனுக்கும், மற்றவர்களுக்கும் தண்டனை கொடுக்க முற்பட்டேனா? ஒரே மாதிரி அத்தனை பேரும் பொய் சொன்னால்கூட நான் நேரடியாக வந்து பார்த்து உண்மையை அறிந்துகொண்டேன் அல்லவா?” என்றான் ரிஷி.
ரிஷி பேசியதை ரசித்த கேட்ட தாத்தாவுக்கு ரிஷியை சீண்ட ஆவல் பிறந்தது. அவனுடைய நிலைப்பாடு மற்றும் பலம் என்ன? என அறியும் ஆவலும் இருந்தது. ஆகவே அவனிடம், “ரிஷி மலையரசன் மேலும், மற்றவர்களும் மேல் தவறில்லை என்பதால் நீ விட்டு விட்டாய் என்கிறாய். நான் என்ன சொல்கிறேன் என்றால் தவறு இருந்தாலும் உன்னால் என்ன செய்திருக்க முடியும்? ஒன்றுமே செய்திருக்க முடியாதல்லவா?” என்றார் தாத்தா. ரிஷி, சிரித்தபடி, “தாத்தா! பணம் பாதாளம் வரை பாயும். மலைத்தேனை கொண்டு வந்து தருகிறோம் என பணத்தை வாங்கிவிட்டு மலைத்தேனை தராமல் ஏமாற்றி இருந்தால் இங்குள்ள அனைவரையும் நாசமாக்கி இருப்பேன். என்னால் முடியும் என்பதற்காக, எதையும் செய்பவன் நான் அல்ல. என் தந்தைக்குக் கூட தொியாமல் ஏன் வந்தேன் தொியுமா? என் தந்தை இந்த ஏமாற்றுக்காரர்களின் பேச்சை நம்பி ஒரு சமூகத்தை அழித்துவிடக் கூடாது என்றுதான்.
என்னால் இங்கிருந்து மலைத்தேனை தினமும், கொண்டு வரும்படி செய்ய முடியாது என்று நினைத்தால் அது தவறு. இங்கேயே மலைச்சாதி என்று இன்னொரு சாதி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் பணத்திற்கு மயங்குவார்கள். என்னால் அவர்களை வைத்து இங்கு குழப்பத்தை ஏற்படுத்த முடியாதா? விற்பயிற்சி எடுத்து நீங்கள் பலமாக இருந்தாலும் துப்பாக்கியுடன் ஒரு படை வந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? எப்படி பணத்திற்கு ஆசைப்படாமல் மலைத் தேனை கொண்டு தராமல் இருக்கலாம் என்று நான் கோபப்பட்டால் நியாயம் இல்லை. நியாயமில்லாத கோபத்தை என்னுள் நான் அனுமதிப்பதில்லை. அநியாயமாக நான் கோபப்பட்டால்தான் என்னை கோபக்காரன் என்று சொல்லலாம். தவறு செய்பவர்களை நான் தண்டிக்காமல் விடுவதில்லை. அதற்காக என்னை தாங்கள் கோபக்காரன் என்று சொல்லக்கூடாது தாத்தா” என்று பேசினான்.
Comments
Post a Comment