உன்னை விடமாட்டேன் – பகுதி 27
தாத்தாவிடம் தன் மனக்குழப்பத்தை தொிவித்தான் மலையரசன். “மலையரசா! மிளகு, உப்பை ரிஷி எடுத்திருக்கான். ஆனால், அசைவம் சாப்பிடறதுக்காக இல்லை. வேறு விஷயம் எதற்காகவோ எடுத்திருக்கான். அதுதான் எதுக்காக அப்படின்னு தொியல. ஆனா தேனரசி பாத்துட்டு தப்பா புரிஞ்சிகிட்டு, இப்படி நடந்துகிட்டா. ஆனா ரிஷிக்கு கோபம் வந்து மிளகு, உப்பை அவதான் எடுத்து அரைச்ச மாதிரியான வார்த்தைகளை சொல்ல ஆரம்பிச்சிட்டான். இளரத்தம். சட்டுன்னு கோபப்படுறான். ஆனா, எனக்கு எல்லோரும் குழந்தைங்கதானே? உன் தங்கை மேலதான் முதல் குத்தம். ஆராயாம ஒருத்தர அபாண்டம் சொல்லக்கூடாது.
ரிஷி புத்திசாலி மட்டுமில்ல, நல்லவனும்தான். ஆனா அவன் போ்ல தப்பு இல்லாம குத்தம் சொன்னா அவன் நிச்சயமா சும்மா விட மாட்டான். அதான் அவள சந்தேகப்படும்படியான வார்த்தைகளை சொன்னான். அவன் கோபம் தீரட்டும்னுதான் தேனரசியக் கடுமையா பேசினேன். அவளும் குழந்தைதானே! அவளுக்கு அனுபவம் பத்தல. சட்டுன்னு சந்தேகப்பட்டுட்டா. ரிஷி கோபம் தீராமதான் நீ தங்கையை ஒருவழி பண்ணனுமின்னு உன்னய தூண்டி விட்டிருக்கான். வேற பயப்பட ஒண்ணுமில்ல.
உன் தங்கை முட்டை எப்ப குஞ்சு பொரிச்சி வெளிய வருமுன்னு தினமும் அங்க போய் பாத்திருக்காளே தவிர முட்டைய சாப்பிட இல்ல. சரியா? ரிஷியை எதுவும் கேட்காதே. அவன் கோபம் இரண்டு நாள்ல சரியா போயிடும். ஆனா அதுக்குள்ள உன் தங்கை வேற எந்த பிரச்சினையையும் அவன் கிட்ட கிளப்பி விடாம இருந்தா சரி. அம்புட்டுத்தான்” என்று முடித்து விட்டார் தாத்தா.
தேனரசியிடம் மலையரசன், “இனி அவன் இருக்கும் பக்கமே நீ போகக் கூடாது” என்று கட்டளையிட்டு சென்று விட்டான். தேனரசிக்கோ கோபம், கோபமாய் வந்தது. எவனோ ஒருவன் அவனை நம்பி நம்மை இவ்வாறு பேசுகிறார்களே! அவன் தன்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தது நினைவுக்கு வந்தது. ‘நேற்று வந்த என்னைத்தான் நம்புவார்கள். இங்கேயே பிறந்து வளர்ந்த உன்னை அல்ல' என்று அவளுக்கு தன் சிரிப்பால் உணர்த்துவதுபோல் தோன்றியது. அவன் பணக்காரன், புத்திசாலி, சாமர்த்தியசாலி, எல்லாவற்றிற்கும் மேல் அவன் கெட்டவன். நாம் இருக்கும் இடத்திற்கே அவனால் கேடு வரலாம். அவனை விரட்டியே ஆக வேண்டும். எப்படியாவது, எந்த முறையிலாவது’ என்று யோசித்தாள் .
ரிஷி தன்னிடம் வந்து தங்கையை நன்றாக அடித்து விட்டு வந்ததாக கூறிய மலையரசனை கூர்ந்து நோக்கினான். “என்னடா” என்றான் மலையரசன். “உண்மையில் அடித்தாயா?” என்றான் ரிஷி. “ஆம்” என்றான் மலையரசன். “எதற்காக” என்றான் ரிஷி. “இது என்னடா கேள்வி? முட்டையை சாப்பிட நினைத்ததற்காகத்தான்” என்றான் மலையரசன். “அவள் அதை ஒப்புக் கொண்டாளா?” என்று கேட்டான் ரிஷி. “அவள் கடைசிவரை உப்பையும், மிளகையும் நீதான் திருடியதாக கூறுகிறாள்.” என்றான் மலையரசன். “அப்படியா? அதற்கு நீ என்ன சொன்னாய்?” என்று கேட்டான் ரிஷி.
“நான் என்ன சொல்வது? என் நண்பன் நிச்சயம் அசைவம் சாப்பிடுவதற்காக உப்பு, மிளகை எடுத்திருக்க மாட்டான்னு சொன்னேன்.” என்று மலையரசன் ரிஷியை கூர்ந்து நோக்கினான். ஆனால் ரிஷி எந்தவித முகபாவனையையும் காட்டாமல் மென்சிரிப்புடன், “உன்னை நிச்சயமாக நம்பக் கூடாது மலையரசா! நீ உன் தங்கையைத்தான் நம்புவாய். என்னை அல்ல. ஆனால், தாத்தாவை நான் நம்பலாம்.” என்றான். “அப்படியா? நீ தாத்தாவை நம்புவது இருக்கட்டும். தாத்தா உன்னை நம்புவாரா?” என்று வாய்விட்டு சிரித்தபடி கேட்டான் மலையரசன்.
Comments
Post a Comment