உன்னை விடமாட்டேன் – பகுதி 51

 அடுத்த நாள் அவளை வலுக்கட்டாயமாக எல்லா கடமைகளையும் செய்ய வைத்தவன் படிப்பதற்கு இன்னும் சில எழுத்துக்களை கொடுத்துவிட்டு தன் அன்றாட அலுவலை கவனித்தான் ரிஷி.

தங்கையின் அழைப்பு வந்தது அவளிடம் ‘நாளை மறுநாள் வந்து விடுவேன்’ என்றான். அவள் அண்ணா, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அம்மாவிடம் உன்னுடைய செயலாளர், “முக்கியமான தொழிலதிபர் ஒருவர் சின்ன முதலாளியை சந்திக்க விரும்புகிறார். அப்பாயின்மென்ட் கொடுக்க வேண்டும். சின்ன முதலாளி எப்பொழுது வருவார் என தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு அம்மா, “பெற்ற தாய் எனக்கே அவனுடைய அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை. நீ என்னடாவென்றால் மற்றவர்களுடைய அப்பாயின்மென்ட் பற்றி கேட்கிறாய்” என்று போனை வைத்து விட்டார்கள்.” என்று கூறி கல கலவெனச் சிரித்தாள். “அண்ணா அங்கு என்ன பிரச்சனை என்று கேட்டாள்.

“ஏன்? ஏன் இப்படி கேட்கிறாய் சூர்யா.”

“உன் குரலில் சற்று சோகம் தெரிகிறதே!” என்றாள்.

‘தேனரசி விசயத்தில் தான் சோர்ந்து உள்ளதை தன் தங்கை கண்டுபிடித்துவிட்டாளே!’ மனதில் வியந்தவன் அதை மறைத்து , ‘ஒன்றுமில்லையே’ என்று சிரித்தான். “என் அண்ணனின் உண்மையான சிரிப்பு எனக்குத் தெரியும். நீ ஒன்றும் ஏமாற்ற வேண்டாம். சீக்கிரம் வீட்டிற்கு வா!” என்று போனை வைத்து விட்டாள்.

தேனரசியும் காலையிலிருந்து ரிஷி சற்று சோகமாக இருப்பதை உணர்ந்தாள். அதை தங்கை எங்கேயோ இருந்து கண்டுபிடிப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தாள். ‘இதனால்தானோ தன் தங்கையை புத்திசாலி என்கிறான் இவன்’ என்று நினைத்துக்கொண்டாள்.

மலையரசனுக்கு சுனில் தன்னை ஏமாற்றுவதாக பட்டது. ஏனெனில் நான்கு நாட்களாக சுனில் அங்குள்ள செக்யூரிட்டிகளிடம் நன்றாகப் பேசுகிறான். ஆனால் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. "ரிஷியைப் பற்றி கேள்” என்று கூறிதான் பார்க்கிறான் மலையரசன். “அப்படியெல்லாம் கேட்டுவிட முடியாது. நம் மேல் சந்தேகம் வந்தால் ஒன்றையும் கிழிக்க முடியாது.” என்றான் சுனில். கடைசியாக "சின்ன முதலாளி எங்கு இருக்கிறார்? என்றும் தெரியவில்லை. எப்பொழுது வருவார்? என்றும் தெரியவில்லை” என்று ஒரு செக்யூரிட்டி சொன்னான்.

மலையரசன் சுனிலிடம், “ரிஷி வீட்டிற்குச் செல்லலாம்“ என்று கூறினான். சுனில் முதலில் அங்கு சென்று பங்களாவை நோட்டமிட்டான். பிறகு அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தான் சுனில். பிறகு மலையரசனிடம், நீ பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருக்கிறாய். அதனால் செக்யூரிட்டி வேலை எனக்கு கொடுத்தால் நான் பார்ப்பேன் என்று கூறு. அது மட்டும் போதாது. ஊரில் எங்களுடைய சொந்த நிலம் கடனில் உள்ளது. அதை மீட்க எனக்கு வருமானம் அதிகமாக தேவைப்படுகிறது. சின்ன முதலாளி எங்கள் ஊர் பக்கமாக பார்த்தேன். அவர் நல்லவராக தெரிவதால் அவர் உதவுவார் என்று இங்கு வந்துவிட்டேன். என்னுடைய குடும்பம் கஷ்ட நிலையில் உள்ளது என பொய் கூறி செக்யூரிட்டியின் பரிதாபத்தை சம்பாதி. அந்த செக்யூரிட்டி கோபக்காரர் என்றாலும் இளகிய மனசுள்ளவர். அங்கு வேலைக்கு சேர முயற்சி செய். என்று வழி காட்டினான் சுனில்.

மலையரசனுக்கு கெஞ்ச வராது. அது மட்டுமல்ல தன் கஷ்டத்தை யாரிடமும் கூறமாட்டான். தானேதான் தீர்வைக் காண்பான். அவர்கள் கூட்டத்திற்கே உரிய குணம் அது. கிட்டத்தட்ட இதே குணத்துடன் ரிஷியைக் கண்டதால்தான் அவனுக்கு பிடித்து போயிற்று. அவனைப் போய் பரிதாபப்படும்படி பேசச்சொன்னால் வருமா? சுனிலிடம் “வேறு வழியைக் கூறு” என்றான். சுனில் கேட்டால் தானே.? “வழியைச் சொல்லிவிட்டேன். வேறு வழிபைக் கண்டுபிடிக்க இன்னும் ஒரு வாரம் ஆகலாம் அதுவரை பொறுமையாக காத்திருக்கிறாயா?” என்றான்.

வேறுவழியில்லாமல் மலையரசனும் சிறிது பயிற்சி எடுத்துக் கொண்டு, ‘பேச்சில் மாலுச்சாமி நீ துணைக்கு வா’ என மனதில் நினைத்துக்கொண்டு சென்றான். மலையரசன் அந்த செக்யூரிட்டியின் நம்பிக்கையை பெற்றான். அந்த செக்யூரிட்டி, “நீ சர்டிபிகேட் வைத்துள்ளாயா?" என்று கேட்டார். “சர்டிபிகேட்டா? அப்படி என்றால்” என்றான் மலையரசன். உடனே அவர் “தகுதிக்கான சான்றிதழ் இல்லாமல் இங்கே சேர்க்கமாட்டார்கள் அதுவும் பெரிய முதலாளி கண்டிப்பாக சேர்க்கவே மாட்டார். உன் குடும்ப கஷ்டநிலை மனவருத்தமளிக்கிறது இந்தா 1000 ரூபாய் இருக்கிறது. இதை வைத்துக்கொள்” என்று கொடுத்தார்.

“என்ன இது நான் என்ன பிச்சையா கேட்டேன்?” என்றான் தன்னை மீறிய கோபத்துடன். பிறகு “ஐயோ அவசரப்பட்டு விட்டோமே” என்று நினைத்தான். ‘கீழே விழுந்த அரிசியைக் கூட பொறுக்கிவிடலாம். விட்டவார்த்தையை...... மாலுச்சாமி அவசரப்பட்டு அவரை கோபித்துவிட்டேனே!’ என மனம் பதறினான் ஆனால் அதுதான் அவனுக்கு பெரிய வாய்ப்பைக் கொடுத்தது.

“சரி சரி கோபித்துக்கொள்ளாதே. சின்ன முதலாளி கொஞ்சம் தயைக்காட்டுவார். ஆனால் அவர் இப்பொழுது இங்கு இல்லையே! அவரிடம் உன் குடும்ப நிலையைச் சொன்னால் பரங்கிமலையில் இருக்கும் காட்டு பங்களாவில் உனக்கு வேலை போட்டுத் தருவார். அது ரகசியமான இடம். உன்னைப் பார்த்தால் மிக்க திறமைசாலியாய் தெரிகிறாய். அங்கு இருப்பவர்கள் நம்பகமானவர்கள் நாணயமானவர்கள். உன்னை பார்த்தாலும் அதே போல் தான் தெரிகிறது.

நீ பணத்திற்கு கஷ்டப்பட்டாலும் பணத்திற்கு மயங்காமல் தன்மானத்துடன் உழைத்து பிழைக்க எண்ணுகிறாய். அதனால் உன்னை அவர் கண்டிப்பாக சேர்த்துக் கொள்வார். அவருடைய தங்கை சின்னம்மா, நாளை மறுநாள் அவருடைய அண்ணன் வருவதாக கூறினார்கள். அவர் ஒரு 12 மணிக்கு வருவார் என நினைக்கிறேன். முன்கூட்டியே 11 மணிக்கு இங்கு வந்து விடு. நானே உனக்கு சிபாரிசு செய்கிறேன்.” என்றார்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31