உன்னை விடமாட்டேன் – பகுதி 71
தனக்கு பதிலாய் தந்தையை மலேசியா அனுப்ப முயற்சித்தான் ரிஷி. “வேறு யாரையும் அனுப்பினால் சொதப்பி விடுவார்கள் அப்பா.”
“உண்மைதான் ரிஷி. நாம்தான் பொறுப்புடன் கவனிப்போம். ஆனால் சூர்யகலாவைப் பார்க்காமல் எப்படி போவது? இங்கு இப்படி ஒரு பிரச்சினை ஓடும்போது நான் அங்கே என்ன செய்ய முடியும்.”
“அப்பா! தொழில் வேறு. குடும்பம் வேறு. என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே' அவள் என் தங்கை. நான் பார்த்துக் கொள்கிறேன்.”
“எனக்குத் தெரியும் ரிஷி, நீ மிக்க திறமைசாலி என்று. நீ நினைத்தால் சூர்யகலாவையும், மாப்பிள்ளையையும் அழைத்து வந்திருக்கலாம். ஆனால் நடுவில் நீ என்ன கோல்மால் செய்கிறாயோ? யாருக்குத் தெரியும்? திறமை இருந்து படிப்பு...”
“அப்பா இதில் நீங்கள் கையெழுத்திட வேண்டுமே. நான் படித்துவிட்டேன். எல்லாம் சரியாக இருக்கிறது. ஒரு முறை நீங்களும் படித்து விடுங்களேன்.”
“இப்படியே பேச்சை திசைதிருப்பி என்னை ஏமாற்றுடா!”
“இல்லையப்பா. நீங்கள் கையெழுத்திட்டால்தான் மேற்கொண்டு நமது செயலாளர்கள் செய்யவேண்டியதைச் செய்ய முடியும். இப்பொழுதே தாமதம்தானேப்பா”
வேறு வழியின்றி தொழிலில் கவனம் பதித்தார் தந்தை.
தேனரசி ரிஷியின் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். இரவு 9 மணியளவில் வந்தவன் குளித்து விட்டு உடை மாற்றி கம்யூட்டர் மற்றும் பைலுடன் போராட ஆரம்பித்தான். அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. 'திருமணத்திற்கு முன் உரிமையில்லாமல் தொட்டவன் இன்று தாலி கட்டி உரிமையாக்கி தள்ளிவைக்கிறானோ?' அவள் மனம் துயரத்தில் வெந்தது. அருகே வந்து “தூங்கவில்லையா?” என்றாள். “வேலை இருக்கிறது” என்றான் ரத்தினச் சுருக்கமாய். 'ரிஷிக்கு தன்னைப் பிடிக்கவில்லை போலும்' என எண்ணியவள் கண்களில் கண்ணீர் வந்தது. 1 மணியளவில் வேலையை முடித்தவன் களைப்புடன் தேனரசி அருகில் படுத்து தூங்கினான்.
காலையிலும் எழுந்து விரைவில் அலுவலகம் கிளம்பிவிட்டான். தேனரசிக்கு உணவு கொண்டுவந்த ரிஷியின் தாயார் அவள் சோர்ந்துள்ளதை கவனித்து விசாரித்தார். அவளின் மன உணர்வுகளை புரிந்துகொண்டவர் “நாளை காலை உன் மாமா மலேசியா சென்றுவிடுவார். ஓரளவு ரிஷிக்கு வேலை குறையும். ஆனால் மாமா வரும்வரை குறையாது. ஒரு வாரம் கழித்து மாமா வந்துவிட்டால் ரிஷிக்கு நிறைய வேலைப்பளு குறைந்துவிடும். நீ இதற்கெல்லாம் கவலைப்பட்டால் வயிற்றில் இருக்கும் குட்டிப் பாப்பாவும் கவலைப்படும்தானே! சந்தோஷமாக இருக்க வேண்டும் சரியா?” என்றார். “சரி அத்தை” என்றாள் தேனரசி.
இரவு பத்துமணிக்கு வந்த ரிஷியை கண்டித்தார் தாயார். “என்னம்மா நீங்க! நான் என்ன நைட்ஷோவுக்கா போயிட்டு வரேன்.”
“வாயும் வயிறுமா ஒருத்தி இருக்காளே. கவனிக்க வேண்டாமா?”
“அதான் நீங்க இருக்கீங்களேம்மா.”
“உனக்குத் தெரியுது. ஆனால் அவள் உன்னைத்தானே தேடுகிறார்.”
“உண்மையாகவா?” வியந்தான் ரிஷி.
“உதைக்கவா உன்னை? பொண்டாட்டினா தேட மாட்டாளா?”
“சரிம்மா. போய் பார்க்கிறேன்.”
வேலை இருந்தாலும் ஒதுக்கிவிட்டு தேனரசியை கவனித்தான்.
“வேலை இல்லையா?”
“இருக்கிறதே!”
“அப்போ அதைப் பார்க்க போயிடுவீங்களா?” என்றாள் சோகத்துடன்.
“என்னடா”
“என்னை பிடிக்கலியா உங்களுக்கு?” கண்களில் நீர் ததும்ப கேட்டாள் தேனரசி.
“நீதான் என்னைக் கல்யாணம் பண்ண பிடிக்காமல் அழுதாயாமே பிரதீபா சொன்னாள்.”
“அப்படி இல்லையே உங்களுக்கு என்னை பிடிக்காம கல்யாணம் பண்ணிறீங்கனுதான் அழுதேன்.”
“லூசு! பிடிக்கலன்னா எப்படி உன்னைக் கல்யாணம் பண்ணிப்பேன்.”
“நீங்க அன்னிக்கு என்கிட்ட பேசவே இல்லை. முன்னாடி நாளும் பிரதீபா கூட படுக்கச் சொல்லிட்டீங்க.”
வாய் விட்டு சிரித்தான் ரிஷி. “ஹேய் இதென்ன கூத்து. நான் உன்னைத் தொடக்கூடாதுன்னு விழுந்து விழுந்து படித்ததாய் ஞாபகம். உனக்குத்தான் என்னை பிடிக்காதுன்னு நினைச்சேன். நீ என்னடான்னா என் கூட படுக்க வைக்காம பிரதீபா கூட படுக்க வைச்சேன்னு சண்டைபோடுற? என்னை எப்போ பிடிக்க ஆரம்பிச்சுது?” என்று அவளை அணைத்தபடி விசாரித்தான் ரிஷி.
“தெரியல. ஆனா ரொம்ப பிடிச்சிருச்சு” என்று தானாகவே மார்பில் சாய்ந்தவளை வியப்புடன் மனதுள் மாலுச்சாமிக்கு நன்றி சொல்லியபடி அவளின் உச்சந்தலையில். முத்தமிட்டான் ரிஷி.
“சாரிம்மா. அன்னைக்கு ரொம்ப டென்ஷனா இருந்தேன். அதான் பேசல.”
“கல்யாணம் முடிஞ்ச பிறகு உங்க நண்பர்கள் கிட்ட மட்டும்தான் பேசினீங்க. என்கிட்ட பேசவேயில்ல.”
“சாரிடா, ரியலி சாரி.”
“நேத்துதான் நமக்கு கல்யாணம் ஆச்சு. ஆனா அன்னிக்கு முழுக்க என் கூட இல்லை. ஆபிஸிற்கு போயிட்டீங்க. இரவு வந்த பிறகும் வேலையத்தான் பார்த்தீங்க.”
“சாரிடா, ரியலி சாரி. வேலை அதிகம் தான். ஆனால் அதை உன்கிட்டே சொல்லியிருக்கணும். உனக்குத்தான் என்னைப் பிடிக்காதே! சரி ஏன் சொல்லி உன்னை தொந்தரவு செய்யணும்னு நினைச்சிட்டேன். சாரிடா. இனிமே இது மாதிரி நடக்காம பாத்துக்கிறேன் சரியா?” மன்னிப்பு கேட்டவனை வியப்புடன் பார்த்தாள் தேனரசி.
“என்ன” என்றான்.
“இல்ல. ரொம்பவே திமிர் பிடிச்ச ஆளுன்னு நினைச்சேன். சர்வசாதாரணமா மன்னிப்பெல்லாம் கேட்கிறீங்க.”
“தப்பு பண்ணாமத்தான் மன்னிப்பு கேட்க மாட்டேன். தப்பு பண்ணா, தெரியாம பண்ணாலும் மன்னிப்பு கேட்பேன். அதே தப்பை மீண்டும் பண்ணாமலும் பார்த்துப்பேன். சரியா!”
“என்னை மன்னிச்சிடுங்க. நான் தான் உண்மையில் திமிர் பிடிச்சவ. உங்க மேல தப்பு இல்லாம குற்றஞ்சாட்டி இதுவரைக்கும் மன்னிப்பு கேட்கல்ல.” காலில் விழப் போனவளை விழவிடாமல் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான் ரிஷி. மீண்டும் அவன் மனதில் மாலுச்சாமி உருவமே வந்து நின்றது. பிரச்சினை அனைத்தும் பனிபோல் உருகி காணாமல் போய்விடும் என்ற நம்பிக்கை உருவாயிற்று.
Comments
Post a Comment