ஏப்ரல் 1

     காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் கணவனுக்கு மதிய உணவை அரக்க பரக்க சமைத்துக் கொண்டிருந்தாள் வெண்மதி. “மதி! உங்கப்பாவுக்கு ஆக்ஸிடெண்டாம்” பதற்றத்துடன் கைபேசியை கையில் வைத்தபடி சொன்ன வசீகரனிடம், “ஐயோ! என்னவாயிற்று? எந்த ஹாஸ்பிடல்?” என்று அதைவிட பதற்றத்துடன் வினவினாள் மதி. “ஹேய்! கூல் மா. இன்னைக்கு ஏப்ரல் 1. முட்டாள் ...” என்று அவன் பேசி முடிக்கும் முன் வெடித்தாள் வெண்மதி. “மண்ணாங்கட்டி! எதில்தான் விளையாடுவது என்று இல்லை”

    “இன்னைக்கு நீதான் எச்சரிக்கையா இருந்திருக்கனும். நீ முட்டாளாயிட்ட. நல்லா ஏமாந்துட்ட. கோபம் வரத்தான் செய்யும்”. இப்படி கிண்டலடிப்பவனிடம், கோபப்பட்டால் சமையல் வேலை பாதிக்கும் என்று மனதினில் முடிவு கட்டியவள், மீண்டும் வேலையில் ஈடுபடலானாள்.

    “யாரை வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் ஏமாத்தலாம். ஏமாறாம புத்திசாலித்தனமா இருக்கனும். ஏமாந்துட்டா கோபம் வரக்கூடாது என் ராணி!” தொடர்ந்து தன்னை கலாய்த்தவனின் கரங்களில் சூடான மதிய உணவுப்பையை திணித்தாள். "சரி! சரி! இன்று உங்கள் அலுவலகத்தில் யாரிடமும் ஏமாறாமல் இருந்தால் சரி. என்றாள் புன்னகையுடன். “என்னை யாரும் ஏமாற்ற முடியாது. ஏன் தொியுமா? இப்போ நான் இந்தப் பையை வாங்கும்போதுகூட வெயிட்டாவும், சூடாவும் இருக்கிறதை உணர்கிறேன். இப்படி ஒவ்வொரு செயல்களிலும் கவனமாக இருந்தால் எப்படி ஏமாறமுடியும் சொல்லு. நீ கூட நான் பொய் சொன்னப்....” என்றவனை பேசவிடாமல், “ஆபிஸிற்கு லேட்டாச்சு” என்று அனுப்பி வைத்தாள்.

    மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவன் கோபத்துடன், “அறிவிருக்கா? சாப்பாடு விஷயத்தில் இப்படியா நடந்துப்ப?” என்றான் வசீகரன்.

    வெண்மதி அவனிடம், “எல்லோர் முன்னாடியும் டிபன் பாக்ஸில் அரிசியோட ஏப்ரல் 1ன்னு காகிதம் இருந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்? மதியம் எவ்வளவு பசியோட இருந்திருப்பீங்க? நண்பர்களெல்லாம் வற்புறுத்தி அவர்களுடைய சாப்பாட்டை பகிர்ந்து உங்களுக்கு கொடுக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? இதெல்லாம் எனக்குத் தொியும். உண்மையிலேயே சாரிடா. ரொம்ப ரொம்ப சாரி" கெஞ்சினாள்.

அவனுக்கு மிகவும் ஆத்திரம்தான். ‘எதிர்த்து பேசினாலாவது கன்னத்தில் இரண்டு வைக்கலாம். இவள் பழி வாங்கவென்று இப்படி செய்கிறாள் என்று நினைத்து வந்தால் இவளோ பதிலே வித்தியாசமாய் உள்ளது,’ என படுக்கையறையில் போய் அமர்ந்து காலையில் நடந்ததை சிந்திக்க ஆரம்பித்தான்.

    இரவு படுக்கையறைக்கு மதி வரும் வரை மௌனமாக இருந்தவன் அவளிடம், “ஸாரிம்மா! உன் அப்பாவுக்கு என்னவோ? ஏதோ என்று அந்த நிமிடம் உன் மனநிலை எப்படியிருந்திருக்கும்? உண்மையிலே ஸாரிம்மா” என்றான். புன்னகையுடன் நின்றவளிடம், அரிசியை நிரப்பி டிபன் பாக்ஸை சூடான குக்கரின் மேல் வைத்தியாக்கும்” என்று கேட்டான். “ம்.. என் கணவனை ஏமாற்ற நானும் புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டியிருந்தது” என்று கூறி நகைத்தவளிடம் கூட இணைந்து நகைத்தான் துளி கோபமில்லாமல் வசீகரன்.


Comments

  1. Nalla iruku ....next time koncham comedy story எழுதுங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31