உன்னை விடமாட்டேன் - பகுதி 2

 உங்கள் இடத்திற்கு வரும் நாங்கள் விருந்தாளிகள்தானே மலையரசன்! எங்கள் மேல் ஏதோ கோபம் போல் தொிகிறதே! என்னவென்று தொிந்து கொள்ளலாமா?" என்று கூறி நட்புடன் புன்னகைத்தான் ரிஷி. மலையரசனோ பாகற்காயை பச்சையாக கடித்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு, "ஏன்? அந்த ஆபிசரு சொல்லலியா?" என்றான். வாய்விட்டு சிரித்த ரிஷி "ஏன்? நீதான் தெளிவாக சொல்லேன்." என்றான். "என்னத்த சொல்ல? சொன்னாக்க நாங்க என்னமோ முட்டாளுங்க மாதிரியும், நீங்களெல்லாம் வானத்திலிருந்து குதித்த அதிபுத்திசாலிங்க மாதிரியுமில்ல பார்வையும், பேச்சும் இருக்குது," என்றான் மலையரசன். "எனக்கு முன்பு வந்தவர்கள் அதிபுத்திசாலியா இருந்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், நான் சரியான முட்டாள்தான் மலையரசன். என் மண்டையும் எம்டியாத்தான் அதாவது காலியாத்தான் இருக்கு. நீ சொல்வதை கண்டிப்பாக மண்டையில் நிரப்பிக் கொள்கிறேன்." என்று ரிஷி கூற இப்பொழுது மலையரசன் வாய்விட்டுச் சிரித்தான்.

“அது இருக்கட்டுஞ் சாமி. நீங்க இங்கன எதுக்கு வந்திருக்கிறீங்க?” என்றான் மலையரசன். ‘இவன் புத்திசாலி. இவனிடத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.’ என மனதில் எண்ணிய ரிஷி, “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறுபேசுவது போல் தெரிகிறதே!” என்றான்., “முதல்ல எனக்கு பதில் சொல்லிட்டு வந்தீங்கன்னாலே நீங்க தெளிவாகிறதுக்கு வாய்ப்பிருக்கே.” என்றான் மலையரசன்.

“அப்போ நான் தெளிவில்லாம இருக்கிறேனா?” என்று துளி கோபம் முகத்தில் தொியவிடாமல் அழகாக புன்னகைத்தான் ரிஷி. “இப்போ நீங்கதான் பேச்சை திசை திருப்புராப்ல இருக்கு” என்றான் மலையரசன். “சரி!சரி!” என்று ஆதாரத்திற்கு பாறை நடுவே வளர்ந்த மரத்தில் சாய்ந்து தோல்வியை ஒப்புக் கொள்பவன் போல இரு கைகளையும் சிறிது மேலே உயர்த்தினான். பின் “இந்த இயற்கை அழகை ரசிக்கலாம். அப்புறம் இந்த அடர்ந்த காடு, மலைகளை தாண்டி உங்கள் இருப்பிடத்திற்கு வருவது ஒரு வீரசாகசம் போலவும் இருக்கும். அதனால்தான் இங்கு வந்தேன்” என்றான் ரிஷி. அதைக் கேட்டு சற்று அதிக நேரம் சிரித்த மலையப்பன், நக்கலாக “அதென்ன சாமி? வெளியிலிருந்து வர்ற ஒருத்தருக்கும் உண்மைய சொல்ல திராணியக் காணும்” என்றான்.

ரிஷிக்கு இம்முறை ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. மலையப்பன் பேசுவது தன்னை அயோக்கியன் என்று சொல்வதைப் போல் உணர்ந்தான். தான் ஒன்றும் அயோக்கியன் அல்லவே! மேலும், தான் செய்ய நினைக்கும் காரியம் ஒன்றும் தவறானவை அல்லவே. அது அவனுக்கு இலாபகரமாக இருந்தாலும் பலருக்கும் நன்மை கொடுக்கக் கூடியதே! இவர்கள்தான் வீணாக தடையாக இருப்பதோடு உதவவும் மறுக்கிறார்கள்.’ என்று நினைத்த ரிஷி சற்று கோபத்துடன் வெளிப்படையாக பேசினான்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31