உன்னை விடமாட்டேன் – பகுதி 4
மலையரசன் கண் பார்வையிலிருந்து மறைந்த ரிஷி சாவதானமாக ஒரு கிளையை பிடித்து திரும்ப பாறாங்கற்களை பிடித்து மலை ஏற ஆரம்பித்தான். பின் சிறிது யோசித்தான். ‘ஏதோ மலை ஏற விரும்புவன் போலவும், ஆனால் இப்பொழுதுதான் மலை ஏறக் கற்றுக் கொள்பவன் போல மலையரசனிடம் நடித்து இப்பொழுது நன்றாக மலையேறி அவனிடம் சென்றால் காறி உமிழ்ந்து விடுவான். சரி சிறிது நேரம் இப்படியே நிற்போம்’ என்று நினைத்தான் ரிஷி. அப்பொழுது மலையரசனின் அரற்றிய அழுகுரல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. “ஒரு உசிர எடுத்துட்டு நான் மட்டும் வாழனுமா? மாட்டேன் சாமி மாட்டேன். என் உசிரையும் எடுத்துக்கோ” என்ற மலையரசனின் கூக்குரலைக் கேட்ட மறுவிநாடி “மலையரசா! என்னைக் காப்பாற்று” என்று ரிஷி எதிர்க்குரல் கொடுத்தான்.
மலையரசன் குரல் வந்த திக்கை நோக்கி ஓடி வந்து ரிஷியை காப்பாற்ற முனைந்தான். அவனை காப்பாற்றி விட்டோம் என்ற மகிழ்ச்சியும் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற மகிழ்ச்சியும் மலையரசன் முகத்தில் அப்பட்டமாக தொிந்தது.
மலையரசன் தற்கொலை செய்யாமல் மறைமுகமாக தடுத்த திருப்தி ரிஷியின் முகத்தில் புன்னகையாய் விரிந்தது. மலையரசன் “சாமி என் உசிருபோயி உசிரு வந்திடுச்சி சாமி” என்றான். ரிஷி தன்மேல் கோபப்படாமல் இருந்ததும், முகத்தில் துளி பயவுணர்வு தொியாமல் இருந்ததும் மலையரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், மலையரசன் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில், மலையேற கொஞ்சம் மட்டும் தொிந்தவர்கள் “நீ பிடித்து இழுத்ததால்தானே இப்படியாயிற்று.” என்று கோபப்படுவார்கள். மலையேறி பழக்கமில்லாதவர்கள் முகத்தில் பயவுணர்ச்சி தொியும். இதில் எந்த வகையையும் சேராமல் ‘இதெல்லாம் சர்வ சாதாரணம்’ என்று நினைக்கும் அனுபவசாலி போல் நடந்து கொண்டான் ரிஷி. மேலும் அனுபவசாலியால் மட்டுமே சர்வ சாதாரணமாய் இம்மாதிரி அபாயமான சறுக்கலில் இருந்து தப்பிக்க இயலும். இவன் அசாதாரணமானவன். மேலும் இவன் தன்னிடம் எதையும் மறைக்கிறானா என ஆராய வேண்டியிருந்தது.
மலையரசன் ரிஷியிடம், “சரி சாமி! நல்லவேளையா உங்களுக்கு ஒன்னும் ஆகல. நாம இப்ப காட்டு அதிகாரிகிட்ட போகலாமா சாமி?” என்றான்.
விடாப்பிடியாய் இருந்த மலையரசனிடம், “மலையரசா! தயவு செய்து என் வேலைக்கு ஆப்பு வைத்து விடாதே! பல பேரை அனுப்பிய என் முதலாளி அவர்கள் இங்கே நடந்து கொண்ட முறை பற்றியும், அவர்கள் கூறிய தகவல்கள் உண்மையா? என்பது பற்றியும் விசாரிக்க சொன்னார்தான். அந்த வன அதிகாரி சொன்னது உண்மைதான். நான் உங்களுடைய கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும் தொிந்து கொள்ளவே விரும்பி வந்தேன்” என்று கூறினான் ரிஷி.
தான் கூறுவதைக் கேட்டு மௌனமாக இருந்த மலையரசனிடம், “நீ என்னை விடாப்பிடியாக அனுப்பிவிட்டால் என் முதலாளி ஈவு, இரக்கம் இல்லாமல் என்னை வேலையிலிருந்து நீக்கி விடுவார். அதனால் என் மேல் கருணை காட்டு.” என்று மீண்டும் ரிஷி வேண்டிக் கொண்டாலும் ‘அவனுக்கு கெஞ்சக் கூடத் தொியவில்லை’ என எண்ணிக் கொண்டான் மலையரசன்.
தன்னுடைய ஊகம் சரி எனில் ‘இவன் வேலைக்கு உண்மையில் ஆபத்தில்லை’. அப்படியில்லை என்றால் ‘தான் கண்டிப்பாக இவனை நம் இருப்பிடத்திற்கு அழைத்து செல்வோம்’ என்ற நம்பிக்கையாக இருக்கலாம் என எண்ணினான் மலையரசன்.
Comments
Post a Comment