ஆயிரம் பொய்

  அந்த பெண், இளைஞனின் காலில் விழுவதே தொியாமல் மெதுவாக முட்டி போட்டு மென்மையான குரலில் கெஞ்சிக் கொண்டிருந்தாள். “நம் குழந்தையை நினைத்துப் பார், தனுஷ். அதற்காகவாவது உன் முடிவை மாற்றிக் கொள்” என்று அந்த நீதிமன்ற வளாகத்தினுள் யாருடைய கவனத்தையும் கவராமல், தன் கணவனிடம் மிக மெல்லிய குரலில் கெஞ்சியும், அவன் திமிராக கர்வத்துடன் மௌன சிரிப்பு சிரித்தான்.

    வழக்கறிஞரான எனக்கு ஏனோ அப்பெண்ணுக்கு உதவ தோன்றியது. விசாரித்ததில் இருவரும் காதலித்து மணந்து கொண்டதும், தற்போது தனுஷின் தகப்பனார் பணக்கார பெண்ணை மணமுடிப்பதற்காக மகனிடம் பணத்தாசையை தூண்டி விட்டு விவாகரத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதும் தொிய வந்தது,

    தனுஷின் மனைவியாகிய சார்கவியை நீதிமன்றத்தில் உள்ள எனது அலுவலக அறையில் அழைத்து பேசிக் கொண்டிருக்கும்பொழுது,  எனது திட்டப்படி ஹரிப்பிரியா, சார்கவியின் கணவனான தனுஷை ‘இந்த வழக்கை அரசு வழக்கறிஞரான என் மூலம் விரைவில் முடிக்கலாம்’ என ஆசை காட்டி அழைத்து வந்து அறைக்கு வெளியே அமர வைத்தாள்.

    தனுஷின் காதுகளில் விழும்படியாக நான் சார்கவியிடம், “சார்கவி! எனது மனைவி பணத்திற்காக ஆசைப்பட்டு கைக்குழந்தையை கூட விட்டு, விட்டு ஒழுக்கமற்ற ஒரு பொிய தொழிலதிபரை மணந்து கொண்டாள். அதேபோல், உன் கணவனும் பணத்திற்காக திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி கருவைக் கலைத்துக் கொண்ட பணக்காரப் பெண்ணை மணக்க தயாராகி விட்டான். உன் உண்மையான காதலுக்கு அவன் தகுதியானவன் இல்லை. நான் சொல்வதைக் கேட்டு கோபப்படாதே! உண்மையான அன்பை காட்டும் நாம் இருவரும் மணந்து கொண்டால் என்ன?”

    அதிர்ச்சியுடன் எழுந்த சார்கவி, “எங்களுக்குள் விவாகரத்து வராமல் இருக்கவே உங்களிடம் வந்தேன். மணமான ஒரு பெண்ணிடம் இவ்வாறு பேசும் நீங்கள் எப்படி ஒழுக்கமானவராய் இருக்க முடியும்?” என்று கூறிவிட்டு கோபத்துடன் மடமடவென்று எழுந்து சென்றுவிட்டாள்.

    நான் எதிர்பார்த்தபடி இரண்டே நாட்களில் இருவரும் ஜோடியாக வந்து வழக்கை வாபஸ் வாங்கி சென்றனர்.

    வீட்டில் என் மனைவி ஹரிப்பிரியா கேட்டாள், “எப்படி” என்று. “அது ஆணின் மனோபாவம். ‘தான் எப்படிபட்டவனாக இருந்தாலும், மனைவி மட்டும் பதிவிரதையாக இருக்க வேண்டும்’ என்பதே அது. உண்மையிலேயே அந்த பணக்காரப் பெண் யாரென்றே தொியாது. பின்பு அவள் கர்ப்பவதியா? இல்லையா? என்று எப்படித் தொியும்? ஏதோ நம்மாலான சிறு பொய். ஆனால் பிரியா! கல்யாணத்திற்கு மட்டுமல்ல, தம்பதியர் பிரியாமல் இருப்பதற்காகவும் பொய் சொல்லலாம். நம்மைப் போலவே அந்த தம்பதியரும் ஒற்றுமையாக வாழட்டும்” என்று அவளை அணைத்தேன். அணைத்த என்னை விலக்கி விட்டு “எப்படி சார் அது முடியும்? நான்தான் கைக்குழந்தையை விட்டுவிட்டு தொழிலதிபரை மணந்தவளாயிற்றே!” அவளது ஊடலைப் புரிந்து கொண்ட நான் “பிரியா! அது வந்து சாரிம்மா! உன்னைவிட சார்கவி அழகாய் இருந்தாளா? ஏதோ அவளை அடையலாம் என்று ஒரு கண நேர மயக்கம்தான் கண்மணி! மன்னிக்கக் கூடாதா?” என்று விளையாட்டாக பதிலளித்தேன். “என்ன?” என்று இடுப்பில் இரு கைகளையும் வைத்து நெற்றிக் கண்ணை திறந்தவளை இழுத்து என் மேல் விழவைத்தேன். இனி ஊடல் ஏது? கூடல்தானே!


Comments

  1. Semma arumaiya Iruku....feel pani eludhuna mari iruku story ah

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31