உன்னை விடமாட்டேன் – பகுதி 10

 "இந்த சாப்பாட்டை எடுத்துக் கொள் ரிஷி”. என்று தன் தட்டில் ரிஷி கொட்டிய உணவைக் காட்டி மலையரசன் கூறினான். “வேண்டாம். எச்சில் தட்டில் விழுந்தது எனக்கு வேண்டாம்.” என்றான் ரிஷி. ‘தன்னை அரிசி உணவை சாப்பிட வைக்க இவ்வாறு செய்கிறான்’ என்பதை புரிந்து கொண்ட மலையரசன், “ஏண்டா! அந்த கிழங்கு எச்சில் கிடையாதா? இந்த சாப்பாடு எச்சிலா?” என்று கேட்டான். அதற்கு ரிஷி “பசி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் தொியாதா? இப்போது பசி தீர்ந்து விட்டது. எச்சில் தொிகிறது.” என்றபடி இலையை கையோடு எடுக்கப் போனான். “டேய்! நீ இலையை எடுக்க வேண்டாம். கையை மட்டும் கழுவு” மலையரசன் காற்றோடுதான் பேசிக் கொண்டிருந்தான். ரிஷி இலையை எடுத்து போட்டுவிட்டு கையையும் கழுவி விட்டு “இன்னுமாடா சாப்பிடுற. ஆமைக்கு பிறந்தவனே! சீக்கிரம்டா! தூக்கம் வருது.” அதட்டினான் ரிஷி.

மலையரசனை சிங்கராசா தாத்தாவையும், அப்பாவையும் தவிர யாரும் அதட்டியதில்லை. அவ்வாறு அதட்டினால் அவனுக்கு கோபமும் வரும். சர்வசாதாரணமாக தன்னை அதட்டியவனைப் பார்த்தான். அவனோ கால் மேல் கால் போட்டு சுவரில் சாய்ந்தபடி கண்களை மூடிக் கொண்டிருந்தான். ‘சரி,சரி! நீ போய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கிழங்கை எடுத்துக் கொண்டு வா! ஒன்றாக சாப்பிடலாம். சீக்கிரம். பசி உயிர் போகிறது.’ என்று ரிஷி விரட்டியது நினைவுக்கு வந்தது. பார்த்து முழுதாய் ஒருநாள்கூட ஆகவில்லை. இந்த பாடுபடுத்துகிறான். அவனுக்கு சிரிப்பு வந்தது.

‘வா! ராசா! வா! இங்கேதானே ஒரு மாதம் இருக்கப் போகிறாய். உன்னை நான் என்ன செய்கிறேன், பார்.’ என மனதிற்குள் கூறிக் கொண்ட மலையரசன் சாப்பிட்டு முடித்து ரிஷியை தன்னுடன் அழைத்துச் சென்று உறங்க வைத்தான். ரிஷியையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

ராசாளி, மலையப்பனின் பொியப்பாவுடைய பேரன். “சித்தப்பா! சிங்கம் தாத்தா உங்கள கூப்பிடுறாங்க” என்று தன் மழலை மொழியில் கூறிவிட்டு குடு, குடுவென ஓடிப் போனான்.

மலையரசனுக்காக அங்கே சிங்கராசா தாத்தாவும், காட்டுராசா தாத்தாவும். அப்பா, பொியப்பா முதற்கொண்டு அண்ணன். தம்பி என படர்ந்து விரிந்த பங்காளி கூட்டமும் காத்திருந்தது. மலையரசன் வந்து அமர்ந்ததும் அவனிடம் “ஏன் மலையரசா! வெளியாளை உள்ள கூட்டிவரக் கூடாதுன்னு கட்டுப்பாடு போட்டுருக்கோம்ல. நீ பாட்டுக்கு கூட்டி வந்தா என்னடா அர்த்தம்?” சிங்கராசா தாத்தா கேட்டார். “அந்த காட்டு அதிகாரி ரொம்ப கெஞ்சாத குறையா கேட்டுக்கிட்டாரு. அவர பகைச்சிகிட்டா என்ன ஆகும்னு தொியும்ல. முடிஞ்ச மட்டும் மறுத்து பாத்துட்டேன். கடைசில வெறும் துணிமணி மட்டும்தான் கொண்டுவரணுமுன்னு சொல்லி எல்லாத்தையும் அங்கேயே போட வைச்சுட்டுத்தான் கூட்டி வந்தேன்.“ என்று விளக்கம் கொடுத்தான் மலையரசன்.

“அதுவும் சரிதான். இல்லைன்னாக்க அரசாங்கம், சட்டமுன்னு வேணுமுன்னே எதுனா பண்ணுவாரு. ஆனா முதல்ல இருந்த காட்டதிகாரிக்கு இவரு எவ்வளவோ தேவல” என்றான் பொியப்பா மகன் சிற்றரசு. “இப்போ கூட்டி வந்தவன் குணசாலியா? இல்ல முன்னாடி வந்தவன்க மாதிரி மோசமானவனா?” என்று விசாரித்தான் பொியப்பாவின் மூத்தமகன் மாயவன். மலையரசன் தன் தாத்தாவைப் பார்த்தபடி”தாத்தா! பேரு ‘ரிஷிகேஷ்’ அப்படி்னு சொன்னான். ஆர் அன்ட் ஆர் கம்பெனி முதலாளி வரிசையா ஆளுங்கள அனுப்பிகிட்டு இருக்கிறான்ல. இப்ப இவன அனுப்பி இருக்கான் போல. வந்தவன்கிட்ட ஏதோ மர்மம் இருக்கிறதா எனக்கு படுது. காட்டு அதிகாரி, இதைப் பத்தி சொல்லாம மூடி மறைச்சு, ‘உங்க வாழ்க்கை, கலாச்சாரம், சாமித் திருவிழா, கல்யாணம் இதப் பத்தி தொிஞ்சிகிட்டு ஒரு பாட்டில்ல தேன வாங்கிட்டு போயிடுவாரு.’ அப்படின்னு சொன்னாரு.

பின் நடந்தவற்றையெல்லாம் விவரித்த மலையரசன், “இவன் நல்ல திறமைசாலியா, நல்லவனா தொிஞ்சாலும் உண்மையிலேயே அப்படித்தானான்னு தொியல. அதனால இவன்கிட்ட நாம எச்சரிக்கையாத்தான் இருக்கணும்.” என்றான். “ஏன் அந்த கம்பெனி முதலாளி இப்படி ஆள அனுப்பிக்கிட்டே இருக்கான். தொியலியே” என்ற தாத்தா “சரி! நேரமாச்சு. எல்லோரும் தூங்கப் போங்க. மலையரசா! இன்னைக்கு நீ காவலுக்கு போக வேண்டாம். அந்த ரிஷி சாமி கூட படுத்துக்க. எப்பவும் அவன கவனமா கண்காணி.” என்று கூறிவிட்டு காவலுக்கு போகிறவர்களிடம் எதையோ பேச நகர்ந்து சென்றார்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31