உன்னை விடமாட்டேன் – பகுதி 12

 ஏண்டா! வெளிய வந்த.” மலையரசன் கத்தினான். ரிஷி நிதானமாக அவனிடம் “உள்ளேயே இயற்கை உபாதையை கழித்தால் நன்றாயிராது” என்றான். ஆனாலும் மலையரசன் கோபமாக “என்னை எழுப்ப வேண்டியதுதானே. அதுல வேற வெளிய தாழ்பாள் போட்டுட்ட. புலி வந்து உன்னய அடிச்சு போட்டா யார்டா பதில் சொல்றது.” என்று கத்தினான். அக்கம்பக்கத்தில் எல்லோரும்கூடி ‘என்ன’ என்று கேட்டு வர, ரிஷி, தலையில் அடித்துக் கொண்டு, “நல்லா பப்ளிசிட்டி பண்றடா” என்றான். மலையரசனுக்கு ‘பப்ளிசிட்டி’ என்ற வார்த்தை புரியாமல் திரும்பவும் கேட்க, “நல்லா தண்டோரா போட்டன்னு சொன்னேன்” என்றபடி உள்ளே சென்றான். மலையரசனுக்கு சிரிப்பு வந்தது.

வந்தவர்களை சமாளித்து அனுப்பி வைத்து விட்டு உள்ளே மலையரசன் வருவதற்குள் பையை திறந்து துணிகளுக்கு மத்தியில் ரேடியோ டிரான்ஸ்மிட்டரை வைத்து விட்டான் ரிஷி.

“இனிமேல் என்னைக் கேட்காமல் இரவில் வெளியே போகக் கூடாது.” என்று கடுமையாக கூறிய மலையரசனைப் பார்த்து, “போடா! போ! புலிக்கிட்ட போய் ‘வெளியே வரக் கூடாது’ என்று உத்தரவு போடுடா” என்றான் ரிஷி கடுப்புடன். “அது எம் பேச்சை கேட்டால் நான் ஏண்டா உனக்கு உத்தரவு போடுறேன்” என்றான் மலையரசன். “ஐந்தறிவு இருக்கிற புலியே உன் பேச்சை கேட்கவில்லை என்றால் ஆறறிவு படைத்த நான் எப்படி கேட்பேன்?” என்றான் ரிஷி. “ஆறறிவு உனக்கு உண்மையிலேயே இருக்குன்னுதாண்டா உங்கிட்ட சொல்றேன்.” என்றான் மலையரசன். “மாட்டேன். போடா” என்றபடி போர்வையை போர்த்தி உறங்க போனான் ரிஷி. மலையரசனுக்கு கோபம் வந்தது. போர்வையை பிடித்திழுத்து, “ரிஷி! விளையாடாதே. நீ இரவில் தனியாக வெளியே போகக் கூடாதுன்னா கூடாதுதான்” என்றான். “ஏய்! நான் என்ன குழந்தையா? உனக்கு வெளியே போக பயமாயிருந்தா என்னை எழுப்பு. நான் துணைக்கு வரேன்.” என்றான் ரிஷி.

மலையரசன் ஏதும் பேசாமல் படுத்துக் கொண்டான். மலையரசன் அமைதியாக இருந்ததும், “என்னடா! கோபமா?” என்று கேட்டான் ரிஷி. உடனே, “புலி வந்தால் அவ்வளவு சுலபத்தில் தொியாது. அவ்வளவு சத்தம் வராமல் பதுங்கி திடீரென்று பாயும்.” என்று சொல்லும்போது அவனை இடைமறித்து “ஆனால், மலையரசா! உன்னை துணைக்கு அழைத்துச் சென்றால் பதுங்காமல், ‘இதோ! நான் வந்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு பாயும்.” என்றான் ரிஷி பலத்த சிரிப்புடன்.

மலையரசனுக்கும் சிரிப்பு வந்தது. அவனும் கூட சேர்ந்து சிரித்துவிட்டு, “டேய்! எங்களுக்கு அனுபவம் நிறைய இருப்பதால அது பதுங்கி இருந்தா கண்டுபிடிப்போம். அது பாயும் போது எப்படி சமாளிக்கணும்னு தொியும்” என்றான். ரிஷியும், “சரிடா! இனி உன்னை எழுப்புகிறேன்.” என்றான் சமாதானமாக. ‘தனக்கும் புலியை சமாளிக்கத் தொியும்' என்ற உண்மையைக் கூறாமல்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31