உன்னை விடமாட்டேன் – பகுதி 13
விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்த மலையரசனுக்கு ரிஷி நன்றாக உறங்குவது தொிந்தது. வேண்டுமென்றே சீண்டும் ஆவல் ஏற்பட ஒரு சொம்பு நீரை அவன் முகத்தில் ஊற்றினான். முகத்தில் விழுந்த நீரால் நல்ல உறக்கத்தில் இருந்து எழும்பிய ரிஷிக்கு கோபம் உண்டாகி மலையரசனை அடிக்க எழும்ப அவன் அழகு காண்பித்து ஆட்டம் காட்டினான். ரிஷி மேலும், கோபம் உண்டாகி முற்றிலும் உறக்கம் கலைந்து முழுமூச்சாய் துரத்த ஆரம்பிக்க மலையரசன், தான் இருக்கும் குடிலைவிட்டே ஓடினான். ஆனாலும் ரிஷி துரத்த அவன் வேறொரு குடிலில் புகுந்தான். ரிஷி அதில் நுழைய தயங்கி வேப்பங்குச்சியை எடுத்து பல் துலக்க ஆரம்பித்தான்.
ரிஷிக்கு மிகுந்த ஒரு ஒழுங்கு முறையுடன் அமைக்கப்பட்ட குடில்கள் அழகாக தொிந்தன. அவன் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கினான். மிக அழகிய வேலைப்பாடுடன் கூடிய கலைப்பொருட்கள் அவர்களின் சொந்த உபயோகத்திற்காக வைத்திருக்கக் கண்டான். சூர்யகலாவிற்கு இம்மாதிரி கலைப்பொருட்களை தயாரிப்பதில் ஆர்வம் அதிகம். அவளுமே பல அலங்கார, ஆடம்பர கலைப் பொருட்களை வீடு நிறைய செய்து வைத்துக் கொண்டிருக்கிறாள். ‘இதைப் பற்றிய படிப்பே படிப்பேன்' என்றவளை ‘இது 82 கிளை நிறுவனங்களை பல்வேறு நாடுகளில் உடைய நம் தொழிலுக்கு ஏற்றதல்ல. இதை பொழுதுபோக்கிற்காக படிக்கலாம்.’ என தந்தை தடைபோட தங்கை தன்னிடம் வந்து நின்றது நினைவுக்கு வந்தது. இவனால் மட்டும் என்ன செய்ய முடியும்? இவனே தனக்கு பிடித்த வேலையைப் பார்க்காமல் இந்த தொழில் நிறுவனங்களை கவனித்துக் கொண்டிருக்கிறான்.
தாத்தா, ”மலையரசா! நேத்திக்கு நீ காவலுக்கு போகலல்ல. அதனால நீ இன்னிக்கு மேய்ச்சலுக்கு போ” என்று உரத்தகுரலில் கட்டளையிட்டார். “சரி, தாத்தா!” என்று குடிலை விட்டு வெளியே வந்தவன் ரிஷியை நோட்டமிட்டான். அவன் எதையும் கண்டு கொள்ளாமல் முகம் கழுவிக் கொண்டிருந்தான். மனமோ,”மேய்ச்சலா? இங்கே ஆடு, மாடு ஒன்றையும் காணுமே!” என எண்ணியது. தாத்தா, “சுனைக்கு போய் ஆட்டம் போடாம சீக்கிரம் வரணும். ம்... எல்லோரும் குளிக்க போங்க” என விரட்டிக் கொண்டிருந்தார்.
அங்கே 12 போ் தன்னையோத்த வயதினர் இருந்தனர். மலையப்பன் முன்னே நின்று கொண்டிருந்தான். அவன் பார்வை தற்போது ரிஷியின் மேல் இல்லை. ‘இந்த தாத்தாதான் முக்கிய ஆள் போலும். யார் யார் என்ன செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார்.’ ரிஷி மெதுவாக அவரை நோக்கி நகர தாத்தா, “சாமி! உங்க உடுப்பு ஒன்னை எடுத்துக்கிட்டு இவங்ககூட குளிக்க போங்க. பத்திரம். ஆழம் அதிகமா இருக்கும். கரை ஓரத்திலேயே குளிங்க” என்றார். “சரி, தாத்தா!” என்றவன் அவர்களுடன் குளிக்கச் சென்றான்.
மலையரசன் தன் முகத்தில் தண்ணீர் ஊற்றிய நிகழ்வு நடந்ததை மறந்து விட்டாற்போலவே நடந்து கொண்டான். அனைவரும் தன்னை ‘சாமி’ என அழைப்பதை விளையாட்டாய் மறுத்தவன் தன்னை ‘ரிஷி’ என அழைக்கும்படி கேட்டுக் கொண்டான். அவர்கள் கண் பார்வை மலையரசன் மேல் இருக்கவும், அவர்கள் மலையரசனைக் கண்டு பயப்படுகிறார்கள் என்று புரிந்து கொண்டான். அவர்களிடம், “மலையரசனே என்னை ‘ரிஷி’ என்றுதான் அழைப்பான், தொியுமா? எல்லார் முன்பும்தான் ‘சாமி’ என்பான். தனிமையில் எல்லாம் வாடா, போடாதான் தொியுமா?” என்றான். அவர்கள் யாரும் ரிஷி கூறியதை நம்பவில்லை. மலையரசன் ரிஷியை பார்த்து நக்கலாக நகைத்தான்.
Comments
Post a Comment