உன்னை விடமாட்டேன் – பகுதி 15

 வாய்விட்டு சிரித்த தாத்தா, அவனை சற்று தொலைவிலுள்ள நன்றாக அடைக்கப்பட்ட பொிய தொழுவத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு சுமார் 50 மாடுகள் வரை இருக்கக் கண்டான். மிகவும் ஆச்சரியப்பட்ட ரிஷி, “மலையைத் தாண்டி, காட்டை தாண்டி இங்கு இவ்வளவு மாடுகள் எப்படி வந்தன தாத்தா?” என்று வினவினான். மலையரசனின் தாயார், “கயிறு போட்டு கட்டி தூக்கி, ஏத்தி, இறக்கி கஷ்டப்பட்டு கொண்டு வந்தோம் சாமி” என்றாள். தாத்தா வாய்விட்டு சிரித்தபடி, “இது குலத் தொழில் சாமி. என்னோட தாத்தாவுக்கு தாத்தா காலத்துக்கு முன்னேயே இருக்குது சாமி!” என்றார்.

ரிஷி, “அப்போ பால், தயிரெல்லாம் விற்பீர்களா? தாத்தா!” “இல்ல சாமி. முன்ன வித்தோம். இப்ப பாக்கெட்டுல்ல வருதாம்ல. அதிக விலைன்னு இதை யாரும் வாங்கறதில்ல. ரொம்ப குறைவான காசுக்கு விக்கிறதுக்கு நாமளே குடிச்சிடலாம்னு விக்கிறதில்ல. எங்களுக்கும் சரியாத்தான் இருக்கு. என்ன? முன்ன, வித்த காசுல அரிசி சாதம் நிறைவா சாப்பிட்டோம். இந்த தலைமுறைக்கு இது வாய்க்கல. அவ்வளவுதான்.” தாத்தா பெருமூச்சு விட்டார். “ஏன் தாத்தா அப்படி சொல்றீங்க? தேனை விற்றால் பணம் கொட்டுமே” சாதாரணமாகத்தான் கூறினான் ரிஷி. தாத்தாவிற்கு அவ்வளவு ஆத்திரம் எங்கிருந்து வந்ததோ தொியவில்லை?

“அது என்ன நம்ம உடைமையா? சாமி! தேனீக்கிட்ட இருந்து திருடுற பொழைப்புதானே? அந்த பாவப்பட்ட பணம் இங்கன யாருக்கும் தேவையில்ல. மாலுச்சாமி தயவால நல்லாதான் இருக்கோம். இது போதும். இந்த தேன எடுக்க போகும்போதே சாமிகிட்ட உத்தரவு வாங்கிட்டு, தேன எடுத்து முதல்ல சாமிகிட்ட படைச்சிட்டுத்தான் விக்க எடுத்துட்டுப் போவோம். நீ அந்த ஆர்.ஆரு. கம்பெனியில அனுப்பின ஆளுதானே சாமி! அவங்க கிட்ட சொல்லிடு. எத்தனை ஆளுங்கள அனுப்புனாலும் தேனீக்கள கொன்னுட்டோ, விரட்டிட்டோ தேன்கூட்டை மொத்தமா கலைக்கிற வேலைய நாங்க யாரும் பண்ண மாட்டோம்.” தெள்ளத் தெளிவாக இடிமுழக்கத்துடன் சொல்லி முடித்தார் தாத்தா.

ரிஷி, “சரி, தாத்தா! ஏன் இவ்வளவு கோபம்? உங்கள் விருப்பத்திற்கு மாறாக மலைத்தேனை ஆர்.ஆர். குரூப்ஸ் வாங்காது. அதற்காக இனிமேல் ஆட்களும் வர மாட்டார்கள். நீங்கள் நிச்சயம் கவலைப்பட வேண்டாம்.” என்றான்.

அவனை கூர்மையாக நோக்கிய தாத்தா, “நீ சொன்னா அந்த முதலாளி கேட்டுப்பானா சாமி!” என்று கேட்டார். “தாத்தா! நீங்கள் கோபப்படாமல் கேளுங்கள். முதல்ல வந்த ஜெயக்குமார், நீங்கள் எல்லோரும் மலைத்தேனை ஒரு நாளைக்கு 500 லிட்டருக்கு மேல் கொண்டு வந்து தருவதாகவும், அதற்காக 20 இலட்சம் முன்பணம் கேட்பதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து வந்தவர்களும் இம்மாதிரியே கூறினார்கள். பிறகு, நீங்கள், மலையரசன், மாயவன், ஆங் அப்புறம் மாயச்சாமி, தென்னரசு இவர்களெல்லாம் இவ்வளவு, இவ்வளவு தொகை ஏமாற்றினார்கள் என்றும் கூறினார்கள். நீங்கள் இதைப் பற்றி இனி கவலைப்பட ஒன்றும் இல்லை. இதுவரை நடந்த சம்பவங்கள் உங்கள் மனதைக் காயப்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்” கை கூப்பி வேண்டி நின்றான்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31