உன்னை விடமாட்டேன் – பகுதி 16
ரிஷியின் கூப்பிய கரங்களை தன் கைகளால் பிடித்துக் கொண்ட தாத்தா, “நீ எதற்கு சாமி மன்னிப்பு கேட்குற. ஏமாத்துற ஆளுங்கள ஆபிசுல வைச்சிருக்கிற முதலாளிதான மன்னிப்பு கேட்கணும்” என்றார்.
“வேலை செய்யும் ஆள் என்றாலும் முதலாளி சார்பாக மன்னிப்பு கேட்கலாம் தாத்தா! ஆனால், நான் உங்களிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டுத்தான் ஆகவேண்டும். தாத்தா! ஏனெனில் நான்தான் அந்த முதலாளியே!” ரிஷியின் வாயில் உண்மை வந்து விழுந்து விட்டது. “அப்படியா! அது பொிய கம்பெனின்னும், முதலாளிய அவ்வளவு சீக்கிரம் பாக்க முடியாதுன்னும் கேள்விப்பட்டேன். ஏஞ்சாமி! நீ இவ்வளவு பொிய ஆளா இருந்து என்ன பிரயோசனம்? சொல்லு. நல்லவங்க யாரு? கெட்டவங்க யாருன்னு பிரிச்சி பாக்கத் தொியலயே?” என்றார் தாத்தா.
வாய்விட்டு சிரித்த ரிஷி, “தாத்தா! நான் அனுப்பிய ஆட்களை நான் நேரடியாக பார்த்ததில்லை. ஆனால், இவர்கள் தொழிற்சங்கம் என்ற பெயரில் நிறுவனத்தை நஷ்டப்படுத்துகிறார்கள் என்று கணித்தேன். என் அப்பா ஆதாரம் இல்லாமல் எதுவும் சொல்லாதே! என்கிறார். அவர்களோ ஆதாரம் எதுவும் இல்லாமல் அந்த கிளை நிறுவனத்தை கைக்குள் வைத்திருக்கிறார்கள். ஆதாரத்தை உருவாக்க இங்கே அனுப்பினேன். கிடைத்து விட்டது. இனி நான் இன்று ஒருநாள் மட்டும் தங்கி விட்டு நாளை கிளம்பி விடுவேன். நான் யாரையெல்லாம் வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று நினைத்தேனோ அவர்களைத்தான் வரிசையாக அனுப்பினேன்.” என்றான் ரிஷி.
‘இந்த சிறுவயதில் இவ்வளவு சாமர்த்தியமா?’ வியப்புடன் ரிஷியை நோக்கினார் தாத்தா. “ஏஞ்சாமி! நீ ஒரு மாசம் தங்கப் போறதால்ல சொன்னாங்க. இப்ப என்ன நாளைக்கே கிளம்பப் போறேன்னு சொல்ற” வருத்தத்துடன் கூறினார் தாத்தா. “உண்மைதான் தாத்தா! இங்கே யாரும் தொழிற்சங்க ஆட்களுடன் தொடர்பு வைத்திருந்து எங்கள் நிறுவன பணத்தை ஏமாற்றி இருந்தால் நான் இங்கு தங்கி அவர்களை ஒரு வழி செய்திருப்பேன். ஆனால், யாரும் இங்கு தவறிழைக்கவில்லை. ஆகவே, இங்கிருந்து யாரையும் தண்டிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லையே. அதனால், நான் நாளையே கிளம்புகிறேன்.” என்றான் ரிஷி.
“ஏஞ்சாமி! தப்பு பண்ணா எங்கள தண்டிக்க உங்களால முடியுமா?” ஓர் பெண்மணி சிரித்தபடி கேட்டாள். “எங்கள் நிறுவன பணத்தை ஏமாற்றி இருந்தால் மட்டுமே நான் சொன்னது. வேறு ஏதாவது தப்பு பண்ணினால் தண்டிக்க நான் யார்? அதற்குத்தான் தாத்தா இருக்கிறாரே" என்று ரிஷி கூறிக் கொண்டிருக்கும்போது மாயவன் திமு, திமுவென ஓடி வந்தான்.
அவன் ரிஷியைக் கண்டதும் அதிர்ச்சியுடனும், ஒருவித ஆனந்தத்துடனும், கோபத்துடனும், "ஏஞ்சாமி! நீங்க இங்கனயா இருக்கீங்க. நாங்க உங்கள..." என்று பேச வந்தவனை பேசவிடாமல், "நான் சீக்கிரம் போகலாம் என்றாலும் நீங்கள் மலையரசன் சொல் பேச்சைக் கேட்டு சுனையில் ஆட்டம் போடுவீர்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதனால், நான் வந்து விட்டேன்." என்றான் ரிஷி. ரிஷி எதிர்பார்த்தபடியே தாத்தா கோபத்துடன், "ஏண்டா! மலையரசன் பேச்சைக் கேட்டுக்கிட்டு சுனையில ஆட்டம் போடுறீங்களா? அவன அவன் அப்பாரு அடிச்சது பத்தாதுபோல. அவன சீக்கிரம் இங்கன வரச் சொல்லு" என்றார்.
Comments
Post a Comment