உன்னை விடமாட்டேன் – பகுதி 17
மாயவனால் ஒன்றும் பேச முடியவில்லை. அவனை ரிஷி என்று அழைக்கச் சொன்னபோது மலையரசன் எதுவும் சொல்லாததால், 'சாமி' என்று கூப்பிட்டதற்கு பழி வாங்குகிறானா? அதைத்தான் மறைமுகமாக நமக்கு கூறுகிறானா?' என்று குழம்பி நிற்கும் வேளையில், "என்னடா! சொன்னது காதில விழல. அவன சீக்கிரம் இங்கன வரச் சொல்லு” என்று மீண்டும் கத்தினார் தாத்தா. மாயவன் பயந்து போய் ஓடினான்.
“சாமி! உன்ன பத்தி எவ்வளவு தப்பா நினைச்சுட்டோம் சாமி. நீ தான் சாமி எங்கள மன்னிக்கணும். நீ கண்டிப்பா ஒரு மாசம் எங்ககூட இருந்திட்டு போகணுஞ்சாமி. இல்லன்னாக்க, எங்களுக்கு மனசு கஷ்டமா இருக்குஞ்சாமி!” என்றார் தாத்தா.
ரிஷிக்கு தன் தந்தையின் நினைவு வந்து விட்டது. “தாத்தா! முடியாததைச் சொல்கிறீர்களே! எனக்கு நிறைய வேலை இருக்கிறது.” என்றான் ரிஷி. மலையரசனின் பொியம்மா முல்லையரசி, “ஏஞ்சாமி! நாங்க ஏமாத்தியிருந்தா ஒரு மாசம் உங்களுக்கு வேலையில்லாம இருந்திருக்கும் போல.” என்றாள். தர்மசங்கடமாக உணர்ந்த ரிஷி, “விருந்தும், மருந்தும் மூணு வேளைதானே!” மலையரசன் சொன்னது நினைப்பிற்கு வர அதைக் கொண்டு சமாளிக்க நினைத்தான். அதுவே அவனுக்கு பாதகமாகி விட்டது.
“சாமி! மலையரசன் சொன்னான். நீ மலையேறும் முன்னாடி மலையை ரகசியமா தொட்டு கும்பிட்டன்னு. அப்புறம் தேவையில்லாம எந்த செடி, கொடியையும் துன்புறுத்தல. அப்பவே மனசுல பட்டதுதான் இப்ப சொல்றது. நீ விருந்தாளி கிடையாது சாமி. எங்க குடும்பத்துல ஒருத்தன். நீ பணக்கார பிரபு சாமி. எங்க இடத்துல இருக்க பிரியப்படலன்னா, உன்னய நீயே விருந்தாளியா நினைச்சிட்டு கிளம்பு சாமி!” என்றார் தாத்தா.
ரிஷி, “தாத்தா! நீங்கள் என்னை உண்மையில் விருந்தாளியாத்தான் நினைக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளை உரிமையோடு “டேய்! என்று பெயர் சொல்லி அழைக்கிறீர்கள். அப்படி என்னை அழைக்கிறீர்களா, என்ன?” என்று கேட்டான் ரிஷி. ஒரு நிமிடம் திகைத்த தாத்தா மறுநிமிடம், “டேய் ரிஷி! நீ ஒரு மாசம் இங்கன தங்கிட்டு அப்புறமா வேற வேலைய பாக்கப்போ. இப்ப, உள்ளே போய் சாப்பிடு.” என்றார் அதிகாரமாக.
“மலையரசனோடு சாப்பிடுகிறேன் தாத்தா.” என்று கூறிவிட்டு, அங்குள்ள மாடுகளை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தான். அங்குள்ள பால் பாத்திரத்தை எடுத்து பசுவின் பாலை கறக்க ஆரம்பித்தான் ரிஷி. தாத்தா, “உனக்கு பால் கறக்கத் தொியுமா? ரிஷி!” என்று வியந்தார். “தாத்தா! பால் பண்ணையில் இயற்கை முறையில், அதாவது நீங்கள் பராமரிக்கும் முறையிலேயே பசுக்களை பராமரிக்கிறோம். நான் சிறுவனாக இருக்கும்போது அம்மா ‘கோமாதா’ என்று பசுவை வணங்க அங்கு தினமும் செல்வார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் நானும் செல்வேன். அங்குள்ள வேலைகளை நானும் செய்வேன். பெரும்புண்ணியம் என்று என்னை அங்கேயே விட்டுவிட்டு சென்று விடுவார்கள். அப்பாதான் சத்தம் போடுவார்.” என்றான் ரிஷி.
மாயவன் தாத்தாவிடம், ரிஷி சுனைக்குள் மூழ்கி விட்டான் என்ற விஷயத்தை சொல்ல சென்றபோது ரிஷி அங்கு இருந்ததையும், சுனையில் அனைவரும் ஆட்டம் போடுவதாக பேச்சை திசை திருப்பியதையும் மலையரசனிடம் விவரித்தான். மலையரசனுக்கு பலத்த கோபம் வந்தது. ‘எதில்தான் விளையாடுவது என்று இல்லை. மனம் எவ்வளவு பதறும்? என்று புரியாதா இவனுக்கு.’ ரிஷியை அடித்து நொறுக்கி விடும் கோபத்துடன் அங்கு சென்றான்.
மலையரசன் பாலைக் கறந்துகொண்டு தாத்தாவிடம் பேசிக் கொண்டிருந்த ரிஷியைக் கண்டான். தாத்தா முன் இவனை என்ன செய்ய? கடுப்புடன் மலையரசன் ரிஷியை பார்த்தான். மலையரசன் அதிகாலையில் தனக்கு காண்பித்தது போலவே ரிஷி இப்பொழுது மலையரசனுக்கு அழகு காட்டினான். தாத்தா மலையரசனை நன்கு திட்டி தீர்த்தார். உடனிருந்த இன்னொரு தாத்தா "இங்கேயே பிறந்து, வளர்ந்த பிள்ளை நீ பொறுப்பில்லாம சுனையில விளையாடிட்டு வர்ற. ஆனா, ரிஷியைப் பாரு. எவ்வளவு பொறுப்பா வேலை செய்றான்." என்றார். மலையரசன் விழித்தான். எப்படி தாத்தா ரிஷியை 'சாமி' என்று அழைக்காமல் 'ரிஷி' என்று அழைத்தார்.
Comments
Post a Comment