உன்னை விடமாட்டேன் – பகுதி 19

 சிறு அளவில் பயிரிடப்பட்ட நிலங்களைக் கண்டான். தோட்டங்களைக் கண்டான். பசுக்களை புலிகளிடமிருந்து காக்க காவலுக்கு ஆட்கள் நியமிப்பதும் தொிந்து கொண்டான். கடைசியில் அவர்கள் சென்றது கோயிலுக்கு. அவர்கள் அந்த சாமியை மாலுச்சாமி, மாயவன், மாயச்சாமி என்று அழைத்தனர். சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது. உச்சிகால ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. “சக்தி வாய்ந்த சாமி இது ரிஷி. தப்பு நடந்தா சாமிக்கு பிடிக்காது. இங்க உன் கம்பெனி ஆளு ஒருத்தன் ஏதோ பறவை குஞ்சை சமைச்சு சாப்பிட பார்த்தான். அவனால சாப்பிடவும் முடியல. புலிகிட்ட மாட்டிக்கிட்டு கடுமையா அவஸ்தைப் பட்டான். கடைசில அவன் கூக்குரல கேட்டு நம்ம பசங்க காப்பாத்துனாங்க” என்றார் தாத்தா.

“ஏன் தாத்தா அசைவம் சாப்பிட மாட்டீர்களா?” வியப்புடன் கேட்டான். தாத்தா காதை பொத்திக் கொண்டார். “என்னடா ரிஷி ஒரு உயிரை எடுத்திட்டு அதை நாம சாப்பிடலாமா? பாவம்தானே!” கேட்டார் தாத்தா. அவனுக்கு சிரிப்பு வந்தது. அவன் அசைவப் பிரியன்.

அவன் பசுவையும், பன்றியையும் தவிர ருசியாக எதைச் செய்து கொடுத்தாலும் சாப்பிடுவான். பசுவை விட்டு வைத்து அம்மாவுக்காக. பன்றிகளை சுகாதார முறையில் வளர்த்தாலும் கண்ட இடங்களில் மேயும் பன்றி நினைவுக்கு வருவதால் அருவருப்பு காரணமாக அதையும் தவிர்த்து விடுவான்.

ரிஷி சிரிப்பதை பார்த்த தாத்தா “நாம மத்த உயிருக்கு செய்யறது, பின்னாடி நமக்கேதான் வந்து சேரும். என்ன? தொியற மாதிரி வராம பின்னாடி தாமதமா வந்து சேரும். அது அடுத்த சென்மமா கூட இருக்கலாம் ரிஷி. நீ வெளியில இருந்து வர்ற. இந்த உண்மைகளெல்லாம் உனக்கு புரியுமான்னு தொியல. சரி! சரி! இந்த சாமி ரொம்ப சக்தி வாய்ந்தது. உனக்கு ஏதாவது வேணும்னா தீபாராதனை காட்டும் போது நல்லா வேண்டிக்க. அது நடக்கலன்னா அப்புறம் என்னை வந்து கேளு. இப்ப திரைய விலக்கிட்டு தீபாராதனை காட்டுவாங்க. நல்லா கும்பிட்டுக்கோ.” என்று சொல்லி முடிக்கவும் திரை விலக்கவும் சரியாக இருந்தது.

சயனகோலத்தில் இருப்பது பெருமாளேதான். ரிஷிக்கு உறுதியாக தொிந்தது. ‘வீட்டில்தான் குலதெய்வம் என்று அம்மா பாடாய்படுத்துவது போதாதா? இங்கேயுமா? என்ன வேண்டலாம்? ம்..’ “நீ இருக்கிறாயா? இல்லையா என்பதே சந்தேகமாய் இருக்கிறது. செய்கின்ற தவறுக்கு உண்மையில் தண்டனை கிடைக்குமா? எங்கே? எனக்கு அதை உச்சந்தலையில் அடித்து புரியும்படி தாமதமாக இல்லாமல் உடனடியா புரியும்படி செய் பார்க்கலாம்” மனதுள் விளையாட்டாய் வேண்டிக் கொண்டான் ரிஷி.

தீபாராதனை காட்டியவர் பொியவர்களுக்கெல்லாம் காட்டிவிட்டு ரிஷியிடம் வந்தார். தாய் கூறியது நினைவுக்கு வந்தது. ‘மக்கள் குறைவாக இருக்கும் கிராமக் கோயில்களிலும், கவனிப்பாரற்று இருக்கும் கோயில்களிலும் முடிந்தவரை அதிக தொகையை காணிக்கையாக இட வேண்டும்’ என்பதே அது. நினைவுக்கு வர முழு 2,000 ரூபாய் நோட்டை தட்டில் காணிக்கையாக இட்டான். அதை கவனிக்காமல் அவன் நெற்றியில் வெண்மையான மணல் போன்றிருந்த திருமண்ணை ஆங்கில ‘யு’ வடிவில் இட்டவர் செம்மண் போன்றிருந்த திலகத்தை நடுவில் கீழிருந்து மேலாக இட்டார். கையை நெற்றியில் இருந்து எடுக்காமல்,

“விளையாட்டா வேண்டிக்கிட்டே

வினையில் நீ மாட்டிக்கிட்டே

என்கிட்ட வந்து நின்னா

சுபமாக ஆக்கித் தாரேன்.

குருவாக இருந்துனக்கு

கர்மத்தைப் புரிய வைப்பேன்.” கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31