உன்னை விடமாட்டேன் – பகுதி 20

 ரிஷி ஒரு நிமிடம் உள்ளுக்குள் அதிர்ந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகை மாறாமல் நின்றான். ஆனால், பொியவர்கள் விடவில்லை. ரிஷி ‘விளையாட்டா என்ன வேண்டிக்கிட்ட? சாமிகிட்ட மன்னிப்பு கேளு.’ என்றனர். ஆனால், சிங்கராசா தாத்தாவோ பயப்படாமல், "சாமிதான் அதுகிட்ட வந்து நின்னா நல்லபடியா முடிச்சித் தரேன்னு சொல்லுதே. ரிஷி ஏதாவது பயங்கர பிரச்சினை. தீர்க்க முடியாதுன்னு தோணிச்சின்னா, எங்கிட்டு இருந்தாலும் நம்ம சாமிகிட்ட வந்துடு. பிரச்சினையில மூழ்கி சாமியை மறந்துடாதே. அம்புட்டுத்தான்l" சொல்லி முடித்துவிட்டார்.

கோயிலை முறைப்படி சுற்றி வணங்கியபின் அங்கேயே இருந்து பேசிக் கொண்டிருந்தனர். ரிஷி அங்கே, வில்லையும் அம்பையும் பார்த்தான். நிறைய எண்ணிக்கையில் இருந்தன. பார்க்கும்போதே அது தரம்மிக்கவையாகவும், பராமரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பதும் தொியவந்தது. தாத்தாவிடம் ரிஷி மிக்க ஆவலுடன் விசாரித்தான்.

அவன் கணித்தது சரிதான். அவர்களுடைய முன்னோர்கள் போரில் ராசாக்களுக்கு உதவி வந்ததாகவும், தற்போது, திறமை மங்காமல் இருக்க பயிற்சி எடுத்துக் கொண்டு வருவதாகவும் தாத்தா கூறினார். மேலும், ‘புலி இனம் பெருகினால் வேட்டையாடுவது வழக்கம். தற்போது, காட்டு அதிகாரி கேட்டுக்கொள்வதால் பிடித்து அவரிடம் ஒப்படைத்து விடுவோம்.’ என்றும் கூறினார். ரிஷிக்கு முரண்பாடாக தோன்றியது.

“தாத்தா, ஒரு உயிரை எடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு, உங்கள் முன்னோர்கள் போருக்கு எப்படி போகலாம்? நீங்கள் புலியை எப்படி கொல்லலாம்?” தன் சந்தேகத்தைக் கேட்டான். வாய்விட்டு சிரித்த தாத்தா, “இங்க இருக்கிற பச்சைக் குழந்தைக்குக்கூட இது புரியும் ரிஷி. ஆனாலும், சொல்றேன். தேவையில்லாமத்தான் உயிர எடுக்கக் கூடாது. நாட்டை காப்பாத்தாம விடலாமா? சொல்லு. இருக்கிற மண்ணு தாய். அதைக் காப்பாத்தாதவன் பிறந்ததே வீண். புலிகள் பெருகி மக்கள கொல்ல ஆரம்பிச்சா, அதைத் தடுக்க ஏன் கொல்லக் கூடாது. கருணை இருந்தா அவங்க கோழையா இருக்கணும்மின்னு அவசியமில்ல. இங்க எல்லாப் பிள்ளைகளும் தைரியசாலிங்கதான். நாட்டை காப்பாத்தாமலும், புலிங்க மக்கள அடிச்சி கொல்றத வேடிக்க பாக்கிறதும் பாவம்தான்.” சொன்னார் தாத்தா.

அவர்கள் வாழ்க்கைமுறை அவனுக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகவும் இருந்தது. அவன் வில்லை எடுக்கப் போனான். ஆனால், தாத்தா தடுத்து விட்டார். “ரிஷி. அதை காரணமில்லாம தொடக்கூடாது. பயிற்சிக்கு சாமியைக் கும்பிட்டு உத்தரவு வாங்கின பிறகுதான் தொடணும். நீ தொடணும்னு ஆசைப்பட்டா இங்க பயிற்சி எடுக்கிறதா இருந்தா பயிற்சி காலத்தில தொட முடியும். என்ன? பயிற்சி எடுத்துக்கிறியா?” கேட்டார் தாத்தா. பசித்தவனுக்கு வடை, பாயசத்தோடு விருந்து என்றால் வேண்டாம் என்றா சொல்வான்? “எப்போ பயிற்சி எடுக்கணும் தாத்தா” என்றான் ரிஷி மிக்க உற்சாகத்தோடு. அவன் ஆவலை புரிந்து கொண்ட தாத்தா “பொறு, ரிஷி! மலையரசன் பிள்ளைங்களுக்கு பயிற்சி கொடுக்கும்போது உன்னையும் சோ்த்து அனுப்புறேன். சரிதானே?” என்றார் சிரித்தபடி. அவனும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டான்.

அனைவரும் கலகலப்பாக பேசியபடி மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து சோ்ந்தனர். மதிய எளிய (தினை) உணவை அனைவரும் உண்டு முடித்தனர். ரிஷி எந்தவிதக் குறையும் கூறாமல் அந்த காய்கறிகளுடன் சோ்த்து சமைத்த உணவை ருசித்து சாப்பிட்டான். தீவிரவாதிகள் மறைந்திருக்கும் பகுதிகளில் தேடிப்போகும்போது அங்கு என்ன கிடைக்கிறதோ அதைத்தான் சாப்பிட வேண்டும். எமர்ஜென்சிக்கு கையோடு கொண்டு போன வறட்டி போன்ற உணவை சாப்பிட்டுக் கொள்ளலாம். அதை ஒப்பிடும்போது ரிஷிக்கு இந்த உணவு அமிர்தமே.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31