உன்னை விடமாட்டேன் – பகுதி 21
மலையரசனின் தங்கை தேனரசி தன் வயது பெண்களுடன் மாடு மேய்க்க போனவர்களுக்கு சாப்பாடு கொண்டு சென்றாள். அங்கு பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. ‘என்ன’ என விசாரித்தால் காலையில் ரிஷி செய்த வேலை தொிய வந்தது. அவளுக்கு ஏக கோபம். “இந்த வெளியாட்களே மிக மோசம் அண்ணா! இவர்களை அருகில் வைத்திருப்பது பாம்பை வீட்டிற்குள் வைத்திருப்பது போலாகும்” என்றாள். மலையரசன் மறுத்தான்.
“இல்லை, தேனு! அவன் நல்லவன்தான். காலையில் சொம்பு தண்ணியை ஊற்றியதற்கு பழி வாங்குகிறானாம். ரிஷின்னு எல்லாரையும் கூப்பிட சொன்னான். யாரும் கூப்பிடல. நான் கூப்பிட சொன்னா கூப்பிடலாம்னு எல்லாரும் என்னய பாக்கிறாங்க. நான் வேணுமின்னே பேசாம இருக்கேன். அவன் உடனே ‘மலையரசன் என்னை 'வாடா, போடா'ன்னுதான் கூப்பிடுவான்’னும் சொல்லி பாத்துட்டான். யாரும் நம்பல. ஆனாலும் அவனுக்குத்தான் என்ன சாமர்த்தியம். தாத்தாவிடமும், அப்பாவிடமும் எப்படி சொல்லி என்னை மட்டுமல்ல எல்லாரையும் ஒரு வழி பண்ணி விட்டானே!
மேய்ச்சலுக்கு என்னோடு வருவான். அவனை நாங்க எல்லாரும் ஒரு வழி செய்யவேண்டும் என்று நினைத்தால் அவன் தாத்தாவை கேடயமாக்கி தப்பிக்கிறான். மேய்ச்சல் முடிந்து மாடுகளை கொட்டில்ல கட்டிட்டு வர்றதுக்குள்ள ரிஷியை தனியா மடக்கி அழைச்சுட்டு வந்து கைய காலை முறுக்கி இனிமே இப்படி செய்ய மாட்டேன்னு சொல்ல வைக்கணும். ஆனா, தாத்தா கூட பாதுகாப்பா சுத்துறவன் நாம கூப்பிட்டா வர மாட்டான். அதான் எப்படி அவன வரவைக்கிறதுன்னு யோசன பண்ணிகிட்டு இருக்கோம்.
உனக்கு எதுனா யோசனை தோணிச்சின்னா சொல்லு” என்றான் மலையரசன். “அண்ணா! அந்த ஆளை உனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு போல. அவன் சரியான ஆள்மயக்கி போல. தாத்தாவும் மயங்கிட்டாரு. அவன்தான் ஆர். ஆர், எண்டர்பிரைசசோட முதலாளியாம்.” தாய் தன்னிடம் கூறியதை அப்படியே ஒப்பித்தாள். “அப்படியா! நான் பணக்காரங்களை கிழிச்சு உப்பு கூட வைச்சேனே! அப்பவும் பேசாமதான இருந்தான். சிரித்தான் மலையரசன்.
“கடவுளே! நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியுதா? அவன் சங்காத்தமே நமக்கு வேணாம். அவனோட இந்த சாமர்த்தியத்தை ரசிக்காதே. அது நமக்கே வினையாகும்” என்றாள் தேனரசி. “போ! தேனு! அவன் நல்லவன்தான். அவனோட விளையாட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவன தனியா வரவைக்க வழி இருந்தா சொல்லு.” என்றான் மலையரசன். வேறு வழியின்றி “ராசாளி மூலமாக சொல்லும் இடத்திற்கு வரவைக்கிறேன்.” என்றாள். “எப்படி” கேட்டான் மலையரசன். “ஒரு வித்தியாசமான செடிய காண்பிக்கிறேன்னு அந்த ஆள எப்படியாவது இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்தாதான் நீ திறமைசாலி இல்லன்னா மரம்தான்னு ராசாளிய உசுப்பேத்தி விடுறேன். அவன் அதனால ரொம்ப பிடிவாதம் பிடிச்சி கூப்பிடுவான். இவ்வளவு பிடிவாதமா ஒரு குழந்தை கூப்பிட்டு அந்தஆளு வரலன்னா தாத்தா என்ன நினைப்பாங்க. அந்த ஆளுக்கு தொியாதா? அது மட்டுமில்ல குழந்தை அப்படிங்கிறதால அந்த ஆளுக்கு சந்தேகம் வராதுன்னுதான் நினைக்கிறேன்.” என்றாள் தேனரசி.
ரிஷிக்கு அங்கே உருவாக்கப்படும் அழகழகான கைவினைப் பொருட்களை பார்க்கையில் தங்கை நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. அங்கே அடிக்கடி கொடுத்த மோரை குடித்தபடி அந்த கைவினைப் பொருட்களை ஆவலுடன் பார்த்தான். ரிஷிக்கு கைவினைப் பொருட்களின் மேல் ஆர்வம் கிடையாது. ஆனால், இவைகளை கொண்டு சென்றால் தங்கை மிகவும் மகிழ்வாள். அவளுக்கு ஒரே மாதிரியான பொருட்கள் இரண்டு இரண்டாய் தேவைப்படும். ஒன்று பார்த்து ரசிக்க, மற்றொன்று பிரித்துப் பார்த்து எப்படி செய்திருக்கிறார்கள் என ஆராய்ந்து, அதற்கான மூலப்பொருட்களை வைத்து அதே மாதிரி பொருளை உருவாக்க.
Comments
Post a Comment