உன்னை விடமாட்டேன் – பகுதி 23
அங்கே அவர் கண்ட காட்சி அவருக்கு மிக வியப்பளித்தது. ஏனெனில், 12 போிடமும் சிக்காமல் ரிஷி பயங்கர ஆட்டம் காட்டினான். மலையரசன் சரியான முறையில் முயன்றாலும் மீதிப் போ் செய்யும் தவறையே தனக்கு சாதகமாக்கி தப்பிக்க முயன்றான். மலையரசன் விட்டுவிடக் கூடாதென்று அனைவருக்கும் எங்கு நிற்க வேண்டும் என்றும் எந்தப் பக்கம் அவனை போகவிடக் கூடாது என்றும் பலவித ஆணைகளை பிறப்பித்துக் கொண்டு தப்பிக்க விடாமல் செய்தான். இரண்டு மணி நேரத்திற்கு சற்று குறைவான நேரத்தில் ரிஷியை நெருங்கி பிடித்தனர்.
ஆனால், ஐயகோ! அவ்வளவு நேரம் பொறுமையுடன் வேடிக்கைப் பார்த்த தாத்தா இப்போது ரிஷியை விட்டுவிடும்படி கூறினாா். மலையரசனுக்கு என்ன செய்வதென்றே தொியவில்லை. கடைசியில், 'சுனையில் நடந்ததையும், இங்கே வந்து திரித்து கூறியதையும் சொல்லிவிட்டு, "ரிஷியை எங்களிடம் விட்டு விடுங்கள் தாத்தா" என்று வேண்டினான்.
ஆனால், தாத்தாவோ "ஒருத்தன பிடிக்க 12 பேரா? வெக்கமாயில்ல. ஒத்தைக்கு ஒத்தை நின்னுபிடிச்சி இவ்வளவு நேரம் ஆனா கூட பரவாயில்ல. இத்தன பேரு இவ்வளவு நேரமா? அதெல்லாம் முடியாது. அவன் திறமைய மதிச்சி ஒழுங்கு மரியாதையா அவன பேசாம விட்டிடுங்க. அம்புட்டுத்தான்.” என்றார். அனைவரும் ரிஷியை விட்டு விட்டனர். அவன் சந்தோஷத்துடன் தாத்தாவை கட்டிப் பிடித்துக் கொண்டான். தாத்தாவும் அவனை ஆரத் தழுவிக் கொண்டார்.
மலையரசனுக்கு மலைப்பாக இருந்தது. ஏனெனில் எல்லோரும் சற்று மரியாதையுடன் தள்ளி நின்றுதான் தாத்தாவிடம் பேசுவார்கள். குழந்தைகள் வேண்டுமானால் தாத்தாவின் மடிமேல் அமர்வார்கள். இத்தகைய அரவணைப்பு மலையரசனுக்குக் கூட கிடைத்ததில்லை. தேனரசி சொன்னது உண்மைதானோ? ஆள் மயக்கியேதான். சிரித்துக் கொண்டான் மலையரசன்.
மலையரசனிடம் தாத்தா, "நாளைக்கு இதே நேரத்தில இதே போல எல்லோரும் இங்கு வந்துடுங்க. மலையரசா! நீ நாளைக்கு தப்பி ஓடி விட வேண்டும். ரிஷியின் தலைமையில மீதி எல்லோரும் உன்ன தப்ப விடாம எவ்வளவு நேரத்துல பிடிக்கிறாங்க. பாக்கலாம். என்று கூறிவிட்டு ரிஷியிடம் திரும்பி, "என்ன ரிஷி, சரிதானே?" என்று கேட்க "சரி தாத்தா" என்றான் ரிஷி உற்சாகத்துடன்.
“மலையரசா, ரிஷிக்கு வில்வித்தையில் பயிற்சி கொடு. சரியா?” என்றார் தாத்தா. மலையரசன், “தாத்தா நான் பயிற்சி கொடுக்கிறேன். அவன் என்னை குருவா மதிச்சி அடங்கி நடப்பானா? அவன்கிட்ட கேளுங்க.” என்றான். அதற்கு ரிஷி, “சாமிய கும்பிட்டு வில்லையும், அம்பையும் தொட்டுகிட்டு இருக்கும்போது குருவா மதிச்சி அடங்கி நடப்பேன். மற்ற சமயங்களில் எதிர்பார்க்கக் கூடாது தாத்தா” என்றான் ரிஷி. அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.
தாத்தா, “ரிஷி நீ பணக்காரனாயிற்றே! எப்படி உனக்கு இவ்வளவு திறமை வந்தது. சுகமா இல்லாம இந்த கடின பயிற்சி மூலமா வர்ற திறமைங்க உன்கிட்ட இருக்குதே, எப்படி?” என்று கேட்டார். “பணம் இருந்தால் போதும் தாத்தா! எல்லா கடின பயிற்சிகளுக்கும் பணத்தை கட்டி கற்றுக் கொள்ளலாம். ஆனால், பொதுவாக யாருக்கும் விருப்பம் இருக்காது. எனக்கு இம்மாதிரியான பயிற்சிகள் நிரம்பப் பிடிக்கும்.” என்று ரிஷி கூறினான்.

Comments
Post a Comment