உன்னை விடமாட்டேன் – பகுதி 5

 'எதற்காக இவன் இவ்வளவு பிடிவாதமாய் இருக்கிறான். இங்கே வரும் மற்ற வெளியாட்களை விட இவன் குணத்தில் கெட்டிக்காரன். ஏனெனில், அவர்களின் மட்டரக பேச்சு, நடத்தை இவனிடம் காணப்படவில்லை.’ என ரிஷியைப் பற்றி மலையரசன் சிந்திக்க ஆரம்பித்தான். மேலும் மலையேறும் முன்பு மலையைத் தொட்டு கும்பிட்டது, அனாவசியமாக எந்த செடி, கொடி. மரம் என எதையும் பிய்த்து எறியாமல் இருந்தது மலையரசனின் மனதை கவர்ந்தது. நம்மைப் போலவே இவனும் கோபக்காரன்தான் என்பதும் மலையரசனுக்கு பிடித்திருந்தது. எதையோ ரிஷி மறைப்பதாக மலையரசன் எண்ணினான். அதை அறியும் ஆவலும் மலையரசனுக்கு ஏற்பட்டது, மேலும், ரிஷியை சீண்டி பார்க்கும் ஆவலும் ஏற்பட்டது,

‘அவன் தன்னை மிகுந்த சாமர்த்தியசாலி என எண்ணுகிறானோ? மலையேறத் தொியாதவன் போல் கண்டிப்பாக நடிக்கிறான். ஆனால், நான் தற்கொலை செய்து கொள்வேன் என்ற பயத்தில் மலையரசா! என்னைக் காப்பாற்று என எதிர்க் குரல் கொடுத்தவன். ஒரு நிமிடம் தன்னை கதிகலங்க வைத்தவனாயிற்றே. கண்டிப்பாய் இவனிடம் விளையாடியே தீர வேண்டும்.’ என மனதிற்குள் தீர்மானித்தான்.

“ஏன் மலையரசா! இவ்வளவு யோசனை?. உன் சொத்து, பத்து எதையும் எடுத்துச் சென்று விடமாட்டேன். ஒரு மாதம்தான். அனுமதி தரக்கூடாதா?” என்றான் ரிஷி தன் அழகிய புன்னகையுடன்.

உடனே மலையரசன் கிண்டலாக “விருந்தும், மருந்தும் மூணு வேளதானே சாமி. இருந்தாலும் பரவாயில்ல சாமி. ஒரு மாசந்தானே. விருந்துக்கு வாங்க.” என்றான்.

மலையரசன் நினைத்ததுபோல் ரிஷிக்கு கோபம் வந்தது. அதை மறைத்தபடி, மலையரசா! நீ கொடுக்கப் போகும் விருந்துக்கு நான் உரிய பணத்தை கொடுத்து விடுகிறேன். சரியா! என்றான் ரிஷி தன் புன்னகையை விடாமல்.

“சாமி! நாங்க விருந்த வியாபாரம் பண்றதில்ல.” என்றான் மலையரசன். “ம்... தொிகிறது. அதற்கு பதிலாக அதை சொல்லி காண்பிப்பீர்கள் போலும்.” என்றான் ரிஷி. அதைக்கேட்டு சிரித்த மலையரசன் “அப்டியெல்லாம் இல்ல சாமி. இப்படி பேசுனா ரோசத்துல திரும்பி போயிடுவீங்கன்னு நினைச்சேன். ரோசத்த விட வேல முக்கியம் போல.” என்றான் மலையரசன்.

“கண்டிப்பாக. இருந்தாலும் உன் விருந்து உபசரிப்பு பேச்சுக்கு நன்றி.” என்றான் ரிஷி.

“மனசுல ஒன்னும் வச்சுக்காதீங்க சாமி! சும்மா விளயாட்டு பேச்சுதான்.” என்றான் மலையரசன் சிரித்தபடி.

பேச்சின் நடுவே ரிஷி ஒன்றை கவனித்தான். மலையரசன் முன்போல் எச்சரிக்கையாக தன்னை பிடித்து அழைத்துச் செல்லவில்லை. பல இடங்களில் தன்னை பிடித்துக் கொள்வதுபோல் பாசாங்கு மட்டுமே செய்கிறான் என்பதே அது, தனக்கு நன்கு மலையேறத் தொியும் என்பதை மலையரசன் கண்டுபிடித்துவிட்டானோ என்ற சந்தேகம் ரிஷிக்கு ஏற்பட்டது, மலையரசனுக்கு பொய் பிடிப்பதில்லை. அதை உடனே பட்டென்று கேட்டுவிடுவான். ஆனால், ‘மலையேறத் தொியும்தானே’ என்று கேட்கவும் இல்லை. ‘நீங்கள் எங்கள் இருப்பிடத்திற்கு வரவும் வேண்டாம்' என்று சொல்லவும் இல்லை.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31