உன்னை விடமாட்டேன் – பகுதி 6
ரிஷி மலையரசனிடம் வேண்டுமென்றே, “நான் விழுந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது மலையரசா! நீ என்னை கெட்டியாக பிடித்துக் கொள்ளேன்.” என்றான். அதற்கு, மலையரசன் “சேச்சே! அப்படில்லாம் ஒன்னும் நடக்காது சாமி! என் கைப்பட்ட யாரா இருந்தாலுஞ் சரி, அவங்க ஒரே நாள்ல எனக்கு சமமா ஒத்தைல மலையேறுவாங்க சாமி. எங் கைராசி அப்படிபட்டது.” என்றான் மலையரசன்.
‘எனக்கு மலையேறத் தொியும் என மலையரசனுக்கு தொிந்து விட்டது. அதனால், தன்னுடன் வேண்டுமென்றே விளையாடுகிறான் மலையரசன்’ என்பதை உணர்ந்தான் ரிஷி. அவனுக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது, “ம்... நீ தொட்டதால்தான் நன்றாக மலையேறக் கற்றுக் கொண்டேனா? பாவம். எனக்கு பயிற்சி கொடுத்த குருமார்கள்.” என்றான் ரிஷி. “அப்போ உங்களுக்கு முன்னமே மலையேறத் தொியுந்தானே சாமி!” என்றான் மலையரசன். “ஆமாம், மலையரசா! மலையேறத் தொிந்தால் அழைத்துச் செல்லமாட்டாய் என்று அந்த வனஅதிகாரி கூறினார். அதனாலதான் மலையேறத் தெரியாது என்றேன். நீங்கள் தேவையில்லாத நிபந்தனைகள் விதிப்பதால்தானே இவ்வாறு பொய் சொல்ல வேண்டியுள்ளது," என்று கூறினான் ரிஷி.
"மலையேற கொஞ்சம் தொிஞ்சாலும், சாதாரண மலையேத்தம் மாதிரி நினைச்சி கைகால உடைச்சிக்கிறாங்க. நாங்கல்ல பாடுபாக்க வேண்டி இருக்கு. அப்புறம், அறியாத சீவனை உயிர்வதை பண்றாங்க. அதான் துப்பாக்கில்லாம் கொண்டுவர விடுறதில்ல. தனக்கு அடிபட்டா துடிக்கிறாங்க. மத்த உசிரு பத்தி யோசன இல்ல. இப்படி நிலவரம் அப்படின்றதாலதான் கடைசிலே மலையேறத் தொிஞ்சா கூட்டி போக மாட்டோம்னு சொன்னோம். மலையேறத் தொியாதவங்க நாம சொல்றபடிக்கு ஒழுங்கா நடந்துப்பாங்க. அவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்." என்றான் மலையரசன்.
“துப்பாக்கியை மட்டுமா கொண்டு வரக் கூடாது என்று நிபந்தனை. என்னிடம் துணியைத்தவிர வேறு எதையும் எடுத்துவரக் கூடாது என்றாயே!" என்று ரிஷி கேட்க, மலையரசன் “அது முன்ன. இப்ப ஏதேதோ உறை (நெகிழி – பிளாஸ்டிக் கவர்) கொண்டு வர்றாக. அது ஒன்னும் மக்கக் காணோம். பிறகு செல்போனுன்னு எங்க பொம்பள பசங்கள படம் பிடிக்கிறாங்க. அதான் அது உங்க முதலாளி அனுப்புன ஆளுங்கதான். கோபம் வராதா சாமி? அதுக்கப்பறம்தான் வெளி ஆளுங்கள உள்ளார அழைச்சுட்டு வரகூடாதுன்னு சட்டம் போட்டோம். அதுக்கப்பறம் யாரையும் உள்ளார கூட்டிட்டு போகல.
அந்த காட்டதிகாரி ரொம்ப கெஞ்சினாரு. 'நீங்க என்னமோ ஒரு மாசத்துல்ல எங்க கல்யாண சடங்கு, கோயில் திருவிழா பத்தி தொிஞ்சிகிட்டு, மலைத்தேன ஒரு புட்டியில வாங்கிட்டு எந்த பிரச்சனையும் பண்ணாம போயிடுவீங்க'ன்னு சொல்லி நிரம்பகேட்டுக்கவும், 'சரி'ன்னு வேண்டாவெறுப்பாதான் உங்களை அழைச்சிட்டு வந்தேன். அதனாலத்தான் நீங்க கொண்டாந்த எல்லாத்தையும் விட்டுட்டு, வெறும் உங்க துணிமணியை மட்டும் எடுத்துட்டு வரச் சொன்னேன் சாமி. நீங்க மாட்டேனு எல்லாத்தையும் கொண்டு வருவேன்னு சொல்லியிருந்தா எங்க இடத்துக்கு கூட்டி வந்திருக்க மாட்டேன் சாமி.” என்றான் மலையரசன். எல்லாவற்றையும் கூர்ந்து கேட்ட ரிஷிக்கு ஆத்திரம் பொங்கியது.
Comments
Post a Comment