உன்னை விடமாட்டேன் – பகுதி 7
'நாம் பணத்தை கொட்டி ‘மலைமக்களிடம் தேனெடுக்க வழி செய்யுங்கள்’ என்று ஆட்களை அனுப்பினால் அவர்கள் இங்கு வந்து வேலையைப் பார்க்காமல் தேவையில்லாமல் பெண்களை ஆராய்ந்தார்களா? எவ்வளவு பணத்தை தண்ணீராக செலவழித்துள்ளேன். ‘இருக்கட்டும்.’ போனதும் அவர்களிடம் அந்த பணத்தை வசூல் பண்ணாமல் விடுவதில்லை.’ என்று மனதில் எண்ணிய எண்ணம் ரிஷியின் முகத்தில் வெளிப்பட்டது போலும். மலையரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் திடீரென்று ரிஷியின் முகத்தில் இவ்வளவு கோபம் என்று’ மலையரசன் “என்ன சாமி” எனவும் இயல்பு நிலைக்கு வந்த ரிஷி “யார், யார் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்று விசாரிக்க ஆரம்பித்தான். அவர்கள் அடையாளத்தையும் கேட்டு விசாரித்தான்.
மலையரசனுக்கு வேடிக்கையாக இருந்தது. ரிஷியின் கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொன்ன மலையரசன், “ஏஞ்சாமி! உங்களால உங்க முதலாளிகிட்ட சொல்ல மட்டுந்தான் முடியும். தண்டிக்க முடியாது. உங்களுக்கு நாட்டு நிலவரம் தொியல சாமியோவ்! பணக்கார பசங்க இத தப்புன்னே சொல்ல மாட்டாங்க. அதனால நாங்களே அவங்கள நல்லா கவனிச்சிதான் அனுப்புனோம். உங்க முதலாளிகூட இப்படி மட்டரகமாத்தான் இருப்பாரு. அவருகிட்டே இத சொன்னா உங்கள வேல நீக்கம் பண்ணிடுவாரு. சாக்கிரதை சாமி.” எச்சரித்தான் மலையரசன்.
ரிஷிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. “முதலாளி இப்படித்தான் என்று யார் சொன்னது?” என்று ரிஷி கேட்டான். “யாருஞ் சொல்லல சாமி. தேன விக்க போகையிலே பணக்கார முதலாளிங்ககிட்ட வேல செய்றவங்க அவங்கவங்க முதலாளிங்களோட நாத்தம் பிடிச்ச வாழ்க்கைய கதைகதையா சொல்வாங்க. உங்க முதலாளி மட்டும் விதிவிலக்கா சாமி” என்று மலையரசன் கேட்க, ரிஷி பதில் சொல்ல முடியாமல் திணறினான். மலையரசன் கை தட்டினான். ‘என்ன?’ என்பதுபோல் ரிஷி பார்க்க, "கடைசில உங்கள பதில் சொல்ல முடியாம பண்ணிட்டேன்ல சாமி!” என்று நகைத்தான் மலையரசன்.
கூட இணைந்து நகைத்த ரிஷி, “சரி, மலையரசா! இனி நாம் நண்பர்களாக இருப்போம், சாமி, சாமி! என்று சொல்லாதே. உனக்கும், எனக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதானிருக்கும். அதனால் என்னை ரிஷி என்று அழகாக கூப்பிடு” என்றான். “அய்யய்யோ, உங்ககூட நெருக்கமா பழகினா எங்கப்பாரு சங்கை (கழுத்தை) திருகுவாரு.” என்று மலையப்பன் பதறியது ரிஷிக்கு வேடிக்கையாக இருந்தது.
ஏனெனில், ரிஷி தன் தந்தையிடம் மதிப்பு, மரியாதை காட்டினாலும், அவரைக் கண்டு இப்படி பயந்ததில்லை. அதனால், ரிஷி மலையப்பனை கிண்டல் செய்ய ஆரம்பித்தான். “இப்படி எருமை மாடு அளவுக்கு வளர்ந்துவிட்டு, சின்ன பாப்பா மாதிரி பயப்படுகிறாய்”.
கிண்டலின் பயனாய் மலையப்பன் இன்னும் எப்போதாவது தன் தந்தையிடம் அடி வாங்குவது பற்றி தொிந்து வியந்தான். அடி வாங்கினாலும் தான் செய்த தவறுக்கே தன் தந்தை அடித்தார் என்றும், தான் வெகுநேரம் வரை சுனையில் நீராடியது தவறுதான் என்றும் தன் தந்தைக்கே வக்காலத்து வாங்கினான். கடைசியில், ரிஷி மலையப்பனிடம், பொியவர்கள் இல்லாத சமயத்தில் ‘ரிஷி’ என கூப்பிடுமாறும், மாட்டிக் கொண்டால் அடியை இந்த நண்பனுக்காக வாங்கிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டான். ‘சரி’ என ஒப்புக் கொண்ட மலையரசனுக்கு ரிஷியையும் பிடித்திருந்தது, அவன் பெயரை உச்சரிக்கவும் பிடித்திருந்தது.
ஏனெனில், ரிஷி தனது முதலாளி அனுப்பிய ஆட்கள் பெண்களிடம் நடந்து கொண்ட முறையை கேட்டு கோபத்தில் முகம் சிவந்ததும், பிறகு, அதைப் பற்றி ஆத்திரத்துடன் விசாரித்ததும் மலையப்பன் மனதில் ரிஷியை உயர்த்தியது. வெளியாட்களின் குணக்கேடு மகனை மாற்றக்கூடாது என எண்ணியே தந்தை தடுக்கிறார். ரிஷி பெண்கள் விஷயத்தில் மிகவும் உத்தமமானவன். அதனால். அவனுடனான நட்பு சரியானதே என மலையப்பன் எண்ணினான்.
Comments
Post a Comment