உன்னை விடமாட்டேன் – பகுதி 8
ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தபடி, அரட்டை அடித்தபடி இருப்பிடம் வந்து சேர மலையரசனுக்கும், ரிஷிக்கும் வெகு நேரம் ஆகி விட்டது. மலையைக் கடந்தபின் அடர்ந்த காட்டையும் தாண்டி அவர்கள் இருப்பிடம் வர நேரம் ஆகத்தானே செய்யும். அந்தி சாய்ந்து விட்டது.
வந்த பாதை கடினமானது என்றாலும், பேசியபடி வந்ததால் ரிஷிக்கு ஒன்றும் அது கடினமானதாக தொியவில்லை. மலையப்பன் ‘உன்னப் போல் ஒரு திறமைசாலிய வெளியாட்கள்ல நான் பாக்கல்ல.” என வியந்தான்.
அவர்கள் இருவரும் இருப்பிடம் வந்து சோ்ந்ததும், “வாங்க சாமி! களைப்பா இருப்பீங்க. சாப்பிடுங்க” என ரிஷிக்கு உபசரிப்பு நடந்தது. அங்குள்ள பொியவர்களிடம் ரிஷி மிக மரியாதையாக பேசினான். தான் முதலில் குளிக்க வேண்டும் என்று கூறினான் ரிஷி. அது அனைவரின் முகத்திலும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. “வெளியாளுங்க யாரும் குளிச்சிட்டு சாப்பிட சொன்னாக்க ‘இந்த குளிருல குளியலா’ன்னு சாப்பாடுதான் கேட்பாங்க. காத்து, கருப்பு ஏதும் அண்டிடும்னு குளிக்கச் சொன்னாலும் நம்மளத்தான் விசித்திரமாக பாப்பாங்க. இந்த சாமி சாப்பிட சொன்னா குளிக்கனும்னு சொல்லுதே!” ஒரு முதியவள் புகழ்ந்தாள். ஒரு பொியவர் “மலையப்பா! சாமியையும் கூட குளிக்க கூட்டிட்டு போ” என்றார். “சரிங்க ஐயா!” என மரியாதையாக கூறிவிட்டு தன்னுடன் ரிஷியை அழைத்துச் சென்றான் மலையப்பன். குளிக்க கிளம்பும் முன் சூழ்நிலையை ஆராய்ந்த ரிஷி ஒரு மிக அழகிய பெண்ணின் முகம் தன்னை வெறுப்பாய் நோக்கியது கண்டு வியந்தான். தன் வியப்பை மறைத்தான். பெண்களை இங்கே ஏறிட்டு பார்க்கக் கூடாது என மனதில் உறுதி கொண்டான்.
மலையரசனுடன் சோ்ந்து குளியல் போட்ட ரிஷி “என்னடா! வெளியாளை கூட்டிட்டு போகக் கூடாதுன்னு சட்டம் போட்டுருக்குன்னு சொன்னாயே! ஆனா விருந்து, உபசரிப்பெல்லாம் பலமாக இருக்கே!” என்றான். “ஏன் கூட்டிட்டு வந்தன்னு என்னய தனியா வச்சித்தான் கேள்வி கேப்பாங்க. உன்னய வச்சிக்கிட்டா கேப்பாங்க. அது மட்டுமில்ல, ‘காட்டு அதிகாரி ரொம்ப கெஞ்சினாரு’ அப்படின்னு சொன்னாக்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நீ ஒன்னும் இத நினைச்சி கவலைப்படாதே” என்றான் மலையரசன்.
குளியலை முடித்தவுடன் ரிஷிக்கு சாப்பாடு போடப்பட்டது. அரிசி சாதத்தை கண்டதும் மகிழ்ச்சியுடன் மலையரசனைத் தேடினான். மலையரசன் ஏன் இன்னும் சாப்பிட வரவில்லை என எண்ணியபடி கவனித்தால் அவனுக்கு மட்டுமே ஆல இலையில் உணவிருந்தது. வேறு இலை இல்லை. உடனே எழப் போனவனை 50 வயதிருந்த பெண்மணி தடுத்தாள். “சாப்பிடுங்க சாமி” என்றாள் அன்போடு.
“மலையரசன் எங்கே” என்று கேட்டான் ரிஷி. “அவன் ஒரு வேலயா இருக்கான். நீங்க சாப்பிடுங்க” என்றாள் அந்தப் பெண்மணி. ‘எந்த கிழங்கை சாப்பாடாய் வைப்பார்களோ’ என எண்ணியவன் முன் அரிசி சாதம் வைத்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சி மறைந்தது. “மலையரசன் வரட்டும். அவனுடன் சோ்ந்து சாப்பிடுகிறேன்” சாப்பாட்டில் கை வைக்க மறுத்தான்.
“என் சாமில்ல. உங்க அம்மாவா நினைச்சி சாப்பிடுங்க சாமி!” என்றாள் அந்தப் பெண்மணி. “எங்கம்மா என்னை சாமின்னு சொல்ல மாட்டாங்க. ‘டேய் ரிஷி சாப்பிடுடா’ அப்படின்னுதான் சொல்வாங்க” என்றபடி சாப்பாட்டை விட்டு மெதுவாக பின்னோக்கி நகர்ந்தான் ரிஷி. அந்தப் பெண்மணி, “மலையரசன் எம் பிள்ளதான். ஒருவேலையா இருக்கான் சாமி. நீங்க முதல்ல சாப்பிட்டுகிட்டே இருங்க. நான் இதோ கூப்பிடுறேன்” என்றாள். “எனக்கு இப்ப பசியில்லயே!” என்றான் ரிஷி தன் வயிற்றுப்பசியை மறைத்தபடி. “ஏஞ்சாமி எவ்ளோ தொலைவிலிருந்து வாரீக. எப்படி பசி இல்லாம இருக்கும். சாப்பிடுங்க. சித்த நேரத்தில மலையரசன் வந்திருவான்.” என்றாள் பெண்மணி.
“அவன் வந்தா வரட்டும். இல்லன்னா போகட்டும். எனக்கு பசியில்ல” என்றான் ரிஷி. “அட சாமி! உங்களுக்கு ஆக்கி வைச்ச சாப்பாட்டை என்ன செய்ய?” என்றாள் மற்றொரு பெண். இதற்குள், ரிஷி தான் இல்லாமல் அடிக்கும் கூத்தை கேள்விப்பட்டு மலையரசன் வந்தான். “சாமி, நா என் தங்கச்சி கூட சாப்பிட்டு முடிச்சி தூங்க போறேன். நீங்க இன்னுமா சாப்பிடல” என்றான் மலையரசன். அவனை முறைத்த ரிஷி “பசியில்லாம எப்படி சாப்பிட” எழுந்தே விட்டான் ரிஷி. பொியவர்கள் வந்து சாப்பிட வற்புறுத்த “எனக்கு தூக்கம் வருகிறது. எங்கே தூங்க?” என்று கேள்வி கேட்டான் ரிஷி. அனைவருக்கும் புரிந்தது. ‘எவ்வளவு தூர பயணம். எப்படி பசிக்காமலிருக்கும்?’ ஆனால், எப்படி சாப்பிட வைப்பது?
Comments
Post a Comment