உன்னை விடமாட்டேன் – பகுதி 9

 மலையரசன் “சாமி வாங்க.” என்று ரிஷியை தனியே அழைத்துப் போனான். “என்னடா ஆச்சி உனக்கு சாப்பிட வேண்டியதுதானே! பசியில்லன்னு பொய் சொல்லாதே! எவ்வளவு கடுமையா பசிக்கும்னு எனக்குத் தொியும்.” என்றான் மலையரசன். “எனக்கு உண்மையிலேயே கடுமையா பசிக்குதுதான். நீ சாப்பிட்டியா? உண்மையை சொல்” என்றான் ரிஷி. ”நீ எங்க என்ன சாப்பிட விட்ட. என் தங்கையோட சாப்பிட ஆரம்பிச்சேன். இரண்டு வாய் கூட வைக்கல்ல. அதுக்குள்ள நீ அடிச்ச கூத்துல வந்துட்டேன்”

"ஏண்டா என்கூட சாப்பிட வரல." என்றான் ரிஷி. "என் தங்கையோட நான் சாப்பிடலாம்னுதான்." என்றான் மலையரசன். "அப்போ நான் சாப்பிடாததைப் பற்றி நீ கவலைப்படாதே" என்றான் ரிஷி. "டேய் முட்டாள். அரிசி சாதம் உனக்கு மட்டும்தான் சமைச்சிருக்கு, நான் கிழங்கை சாப்பிடறேன். அது உன்னால சாப்பிட முடியாது." என்றான் மலையரசன். “ஓஹோ!" வாய் விட்டு சிரித்தான் ரிஷி. "சரியான விருந்தோம்பல்தான்." என்ற ரிஷியிடம் "ஏன்? விருந்தோம்பலுக்கு என்ன?" என்றான் மலையரசன். "நல்லதை தனக்கு வைத்துவிட்டு மீதி இருந்தால் விருந்தாளிக்கு போடும் உலகத்தில் உங்களுக்கு இல்லாமல் எனக்கு மட்டும் அரிசி சாதம் போடும் உங்கள் பண்பாடு என்னை புல்லரிக்க வைக்கிறது" என்று மீண்டும் சிரித்தான் ரிஷி.

இவன் உண்மையில் பாராட்டுகிறானா? இல்லையெனில் கிண்டல் செய்கிறானா? என்று குழம்பி நிற்கும் வேளையில் "சரி,சரி! நீ போய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கிழங்கை எடுத்துக் கொண்டு வா! ஒன்றாக சாப்பிடலாம். சீக்கிரம். பசி உயிர் போகிறது. என்று விரட்டினான் ரிஷி. வேறுவழியின்றி கிழங்கை சென்று எடுத்து வந்தவன் "சரி, தாத்தா! இந்த சாமியை நாஞ் சாப்பிட வைக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க." என்று கூறிவிட்டு ரிஷியுடன் சென்றான். "சரி,சரி! என்ன வேடிக்கை! அதான் பிரச்சனை முடிஞ்சிருச்சே எல்லோரும் சாப்பிட்டு தூங்குங்க." என்று கம்பீரக் குரலில் மொழிந்து விட்டுச் சென்றார் தாத்தா

சாப்பிட உட்கார்ந்திருந்த ரிஷி பக்கத்திலேயே பரிமாற இருபெண்மணிகள் இருப்பதைப் பார்த்து அவர்களிடம் “இங்கேதான் குழம்பு, கூட்டு எல்லாம் இருக்கிறதே! நானே எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் போய் சாப்பிடுங்கள்" என்றான் ரிஷி. அவன் இன்னும் சாப்பாட்டில் கை வைக்கவில்லை. மலையரசன் பசி தாளாமல் கிழங்கை உண்டு கொண்டிருந்தான். "குழம்பு, கூட்டு காலியானா எப்படி எடுத்து வைப்பீங்க சாமி. எச்சில் கையால எடுக்க வேண்டி இருக்கும். இடது கையால எடுக்க கூடாதுல்ல சாமி." என்றாள் ஒரு பெண்மணி. "நான் எல்லாத்தையும் மொத்தமா போட்டு சாப்பிடுவேன். நீங்கள் பார்த்து கொண்டிருந்தால் எனக்கு வயிறு வலிக்கும். அதனால நீங்கள் சாப்பிட போங்கள்." என்றான் ரிஷி. அதைக்கேட்டு நகைத்த மூத்த பெண்மணி "பசிக்கவேயில்லைன்னு சொன்னீங்க. இப்ப இவ்வளவு பசி பசிக்கிறதா?" சரி! சரி! நீங்க சாப்பிடறத நாங்க பாக்கல சாமி. சாப்பிடுங்க." என கூறிவிட்டு உடனிருந்தவளை அழைத்துக் கொண்டு நகர்ந்தாள். அவர்கள் அப்படி நகர்ந்தவுடன் ரிஷி பாதிக்கும் மேற்பட்ட சாதத்தை மலையரசனின் தட்டில் வைத்துவிட்டு, அவன் தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த எல்லா கிழங்கையும் பிடுங்கி தான் சாப்பிட ஆரம்பித்தான். மலையரசன் நிமிட வேகத்தில் அவன் செய்த வேலையைக் கண்டு திகைத்து, "டேய்! அது எச்சில்டா. யாராவது வந்து பார்த்தால் நான்தான் திட்டு வாங்குவேன்" என்றான். ரிஷி அவன் பதட்டத்தை அலட்சியப்படுத்தியபடி எல்லா கிழங்கையும் சாப்பிட்டு விட்டு தன் ஆல இலைச் சாப்பாட்டை ரசித்து உண்ண ஆரம்பித்தான்.

கிழங்கை வெளியாட்கள் விரும்பி உண்பதில்லை. அவர்கள் சிறிது சாப்பிட்டுவிட்டே ‘வேண்டாம்’ என்பார்கள். ஆனால் ரிஷி கிழங்கை சாப்பிட்டவேகம் அதிகமே. மிக வியப்புடன் பார்த்தவன் ‘எப்படி இது சாத்தியம். முன்பே இதுபோல் சாப்பிட்டு பழகாமல் சாப்பிட முடியாது. இவனை முன்பின் பார்த்ததும் கிடையாது. இவன் நிச்சயமாக மலைச்சாதி போல் இல்லை. கேட்டால் உண்மையை சொல்வானா? இவனிடம் ஏதோ ரகசியம் உள்ளதா? இங்கேதானே இருக்கப் போகிறான். பார்த்துக் கொள்ளலாம்’ என்று மனதுள் முடிவு கட்டினான் மலையரசன்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31