உன்னை விடமாட்டேன் – பகுதி 26

 ரிஷி தாத்தாவின் அறிவுக் கூர்மையை எண்ணி வியந்தான். ஆனால் தாத்தா தேனரசியின் மேல் காட்டிய கடுமை ரிஷிக்கு திருப்தி அளிக்கவில்லை. ‘அவள் தவறாக புரிந்து கொண்டதை இச்சிறு கண்டிப்புடன் விட்டு விட்டாரே. தன்னிடம் ‘என்ன’ என்று கூட கேட்காமல் அனைவரையும் அழைத்து எல்லோர் முன்பும் குற்றவாளி ஆக்க முற்பட்டதற்கு இந்த தண்டனை போதாது' என்று நினைத்தான் ரிஷி.

மலையரசனிடம் தாழ்ந்த குரலில் ரிஷி, “என்னவோ கட்டுப்பாடு என்கிறீர்கள். உன் தங்கை என்னமோ இங்கு ரகசியமாக உப்பு, மிளகு அரைக்கிறாள். எதற்காக என்று ஏன் கேட்கவில்லை. தன்னைப் போல் பிறரை நினைப்பர் என்பார்கள். உன் தங்கை முட்டை இருப்பதை இங்கு வந்து பலமுறை பார்த்திருக்கிறாள். ஏன் உன் தங்கை முட்டையை சாப்பிட நினைத்து உப்பு, மிளகு அரைத்திருக்கக் கூடாது. ஓ... உன் தங்கை என்பதால் சந்தேகம் வராது. வெளியாள் என்றால் வரும் போலும்” என்றான் ரிஷி.

மலையரசனும் ரிஷி ‘தான் இங்கு வந்ததில்லை’ என்று கூறியபோது ரிஷியின் இன்றைய காலடித் தடத்தை கண்டான். அப்போதே தங்கையின் பல நாட்களின் காலடித்தடத்தையும் பார்த்தான். உண்மையில் அவனுக்கு தங்கையின் மேல் சந்தேகம் வரவில்லை. ரிஷி இவ்வாறு கூறியதும் தங்கை தன் தவறை மறைக்க இவ்வாறு ரிஷியின் மேல் அபாண்டமாக கூறினாளா? என யோசிக்க ஆரம்பித்தான். விளைவு, தன் தங்கையிடமே சென்று கேட்டு அவள் கன்னத்தில் வேகமாக அறைந்தான்.

அதிர்ந்தாள் தங்கை. “அண்ணா நான் இவ்வாறு முட்டை சாப்பிட எண்ணுவேனா?” என்று அழுதாள். பின் ஏன் ரிஷியின் மேல் வீண்பழி சுமத்தினாய்?” என்று மலையரசன் தங்கையிடம் கேட்டான். “இல்லை, அண்ணா! உண்மையிலேயே ரிஷி உப்பையும், மிளகையும் எடுத்தார்” என்றாள் தங்கை. மலையரசன், “எதற்காக எடுத்தான்” என்று கேட்டான். “அதுதான் முட்டையை சாப்பிட என்றேனே!” என்று தங்கை கூறிமுடிக்கும்முன் மீண்டும் அவள் கன்னத்தில் மற்றொரு அறை விழுந்தது. “அண்ணா” என்றாள் தேனரசி.


“தாத்தா சொன்னது நினைவிருக்கிறதா? அவன் அசைவம் சாப்பிடுபவன்தான். ஆனால், அவன் உண்மையில் அதை மறந்துவிட்டு இங்கு ஒன்றி விட்டான். அவனுடன் பழகுகிறேனே எனக்குத் தொியாதா?” என்று கூறினான் மலையரசன். தங்கை ஆக்ரோஷமாக, “ஆக என்னை நம்பவில்லை. உங் கூடவே பிறந்து வளர்ந்தவள் என்னைப் பார்த்து ‘முட்டை சாப்பிட்ட நினைத்தாயா?’ என்று கேட்டாய். நான் முன்பே கூறினேன். அவன் புத்தி சாதுர்யத்தை ரசிக்காதேன்னு. நீ அவனையே நம்பு. அவன் சொன்ன பொய்யக் கேட்டுக்கிட்டு என்னை அறைய வேற செஞ்சிட்ட. அவன் என்ன பொய் சொல்லாதவனா? என்ன செஞ்சாலும் அவன் சொல்றதையே நம்பு. போ” என்று கத்தி விட்டு, கதறி அழுத தங்கையை சமாதானப்படுத்தி விட்டு தாத்தாவிடம் சென்றான்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31