உன்னை விடமாட்டேன் – பகுதி 29

 திடீரென்று பெருவேகத்துடன் ஓடி வந்தவள் பெருங்குரலெடுத்து “காப்பாற்றுங்கள்” என கதற ஆரம்பித்தாள். ரிஷி அவள் வேகமாக ஓடி வருவதை உணர்ந்து டிரான்ஸ்மீட்டரை மரத்தின் ரகசிய இடத்தில் மறைத்து வைத்து விட்டு கீழே குதித்தான். ரிஷி, தன் தங்கையுடனான டிரான்ஸ்மீட்டர் பேச்சை, தேனரசி பிரச்சனை ஆக்குவாள் என எதிர்பார்த்தான். ஆனால், அவள் ‘காப்பாற்றுங்கள்’ என கதறியது அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. முதலில் ஓடி வந்தது மாயவன். மலையரசனால் வெளியே வர முடியாமல் கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். ரிஷி தாழ்பாள் போட்டிருந்தான். ஆடையும், அவளும் கலைந்து போய் அவளிட்ட கதறல் மாயவனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. அவன் ரிஷியை பிடித்து அடிக்க ஆரம்பிக்க, மற்றொருவன் மலையரசன் இருக்கும் குடிலை திறந்துவிட்டான்.

தன் தங்கையின் கோலத்தை கண்டான் மலையரசன். அவன் எதையும் யோசிக்கவில்லை. நேற்று இரவு இவ்வளவு சொல்லியும் தேனரசி மேல் கோபம் கொண்டு இவ்வளவு கீழ்தரமாக நடந்து கொண்டானா? என அவன் கை, காலை முறிக்கும் வேகத்தில் ரிஷியை அடிக்க ஆரம்பித்தான்.

அதற்குள் வேகமாக வந்த தாத்தா மலையரசனை நோக்கி, “நிறுத்து மலையரசா!” என்று ஆக்ரோஷத்துடன் கத்தினார். மலையரசன் நிமிர்ந்து, “எப்படி தாத்தா முடியும்?” என்றான். தாத்தா, பதில் கூறாமல் ரிஷியைப் பார்த்தான். ரிஷியின் முகம் மிக்க கோபத்தில் ஜொலித்தது. மலையரசன் அடி எப்படி இருக்கும் என தாத்தாவிற்கு தொியும். அதுவும் அவன் கோபத்துடன் அடித்தால் கேட்கவே வேண்டாம். கை, கால் முறிந்து விடும். சிறு முக்கல், முனகல் இல்லாமல், பதிலுக்கு தாக்க முற்படாமல் அவன் கொண்டிருந்த கோபம் தாத்தாவிற்கு தேனரசிதான் தவறு புரிந்திருக்கிறாள் என்பதை உணர வைத்தது. தேனரசியை நோக்கி அவர் பார்வை சென்றது.

தாத்தா கண்டுபிடித்துவிடுவாரோ என்ற பயத்தில் முகம் வெளிரி, அவள் தலைகுனிய ‘சீ’ என்ற ஒரு வார்த்தையை அவளை நோக்கி உதிர்த்துவிட்டு ரிஷியைத் தாங்கினார். அவர் கண்களில் கண்ணீரும் வந்தது. தங்கள் இடத்தில் இப்படி ஒரு அநியாயம் நடந்து விட்டதே என “மன்னித்து விடு ஐயா!” என கை கூப்பி கேட்க, ரிஷி, “தாத்தா! நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் எந்த தவறும் செய்யவில்லையே! என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்” என்று கூறியவன் வலி தாளாமல் மயக்க நிலைக்கு சென்று விட்டான்.

தாத்தாவிற்கு, ரிஷி மயக்கமாகும் அளவிற்கு பயங்கர வலியை பொறுத்துக் கொண்டு சிறு முனகல் கூட இல்லாமல் வைராக்கியமாய் இருந்துள்ளான் என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது. தண்ணீரை கொண்டு வரச் சொன்னவர் தன் கைகளால் மயக்கமடைந்த ரிஷியின் உடல் முழுவதையும் மிக நுணுக்கமாய் தடவி ஆராய்ந்தார். காலில் எலும்பு பிசகி இருப்பதை கண்டுபிடித்து, அதற்குரிய மூலிகைகளை கொண்டு வரச்செய்து வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார்.

தன் தங்கையின் தலைகுனிவு மலையரசனுக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. தன் உடன் பிறந்தவளா இத்தகைய தவறை செய்தாள். ஒருவனைத் தவறு செய்யாமலே குற்றவாளி ஆக்க இவளுக்கு ரிஷியின் மேல் அப்படி என்ன வெறுப்பு? அவனுக்கு நிச்சயம் புரியவில்லை. மேலும் நேற்று இரவு ரிஷி கூறியதும், பதிலுக்கு இம்மாதிரியான தவறுகள் இங்கே நடக்காது என்றதும், தன் வார்த்தையை நம்பி ரிஷி அமைதியாய் உறங்க ஆரம்பித்ததும் நினைவுக்கு வந்து மலையரசனை வாட்டி எடுத்தது.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31