உன்னை விடமாட்டேன் – பகுதி 30

 ரிஷி உண்மையில் தவறு செய்திருந்தால் ஒன்று, தேனரசி ரிஷி தன்னிடம் அத்துமீறியதற்காக தாத்தாவிடம் கதறி இருக்க வேண்டும். அல்லது மிகுந்த கோபமாவது வந்திருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் அவள் தாத்தாவைக் கண்டு தலைகுனிந்தது ஏன்? ‘தன்னுடன் பிறந்தவள், தானே தன்னுடைய ஆடையையும், கூந்தலையும் கலைத்து நாடகமாட எங்கு கற்றுக் கொண்டாள்? இந்த புத்தி எங்கிருந்து வந்தது? நம் தங்கை என நம்பியதற்கு தண்டனையாக எத்தகைய தவறை செய்ய வைத்து விட்டாள். ரிஷியை இனி எந்த முகத்துடன் பார்ப்பது?’ என பலவிதமாக யோசிக்க ஆரம்பித்தான் மலையரசன். மலையரசனுக்கு தங்கையின் மேல் வெறுப்பும், துவண்டிருக்கும் ரிஷியைப் பார்க்கையில் குற்றவுணர்வும் தோன்றியது.

காலில் உள்ள பிசகை சரி செய்து பச்சிலை வைத்து கட்டிய தாத்தா மலையரசனைப் பார்த்து, “என்னடா, சும்மா மசமசன்னு நின்னுகிட்டுருக்கிற. ரிஷிக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சில்ல. அம்மாகிட்ட இருக்கிற ஆறின பாலை ரிஷிக்குக் கொடு.” என்றார்.

மலையரசன் கொடுத்த பாலை ரிஷி கையில் வாங்கவில்லை. சோர்வுடன் இருந்த ரிஷியின் வாயருகே பாலைக் கொண்டு சென்றபோது முகத்தைத் திருப்பிக் கொண்டான் ரிஷி. அப்பொழுதும் மலையரசன் மீண்டும் வாயில் ஊட்ட முயற்சிக்க, ரிஷி அதைத் தட்டி விட்டான். பால் தரையில் சிந்தி, குவளை எங்கோ சென்று விழுந்தது. ரிஷியின் கோபத்தை புரிந்து கொண்ட மலையரசன் கண்ணீருடன் மன்னிப்பு கேட்க, ரிஷி எந்த ஓர் உணர்ச்சியும் காட்டாமல் கற்சிலை போல் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்தான்.

தாத்தாவிடம் மலையரசன் “தாத்தா! நான் தப்பு பண்ணிட்டேன்தான். என்னய அவன் நான் அடிச்சதவிட பயங்கரமாவே அடிக்கட்டும். நான் வாங்கிக்கிறேன் தாத்தா! ரிஷியை என்னை மன்னிக்கச் சொல்லுங்க தாத்தா! முன்ன போல எங்கிட்ட பேசச் சொல்லுங்க தாத்தா!” குற்றவுணர்வை தாங்க முடியாமல் கதறி அழுதான். தன்னைச் சுற்றி எதுவுமே நடக்காத பாவனையில் ரிஷி மிக அமைதியாக இருந்தான்.

தாத்தாவிற்கு மிக வேடிக்கையாகவும், ஆச்சரியமாயிருந்தது. உண்மையில் தாத்தாவிற்கு ரிஷியின் கடுமையான கோபம் புரிந்தது. ரிஷி மிகுந்த கோபத்துடன் இருந்தாலும் அவன் முகம் இப்பொழுது எதுவும் நடக்காதது போல் மிக அமைதியாக இருந்தது. ஆனாலும், தன் கோபத்தை முகத்தில் தொியாமல் வைத்திருப்பது சாமானிய விஷயமா? ஆனால், ரிஷிக்கு அது கைவந்த கலையோ? தவறு செய்யாமல் தண்டித்த மலையரசனின் தற்போதைய கதறல் கண்டிப்பாக ரிஷியை சாந்தப்படுத்தும் என்று நம்பினார். தாத்தா, பாலை திரும்ப கொண்டு வரச்சொல்லி தானே ரிஷிக்கு வாயில் ஊட்டினார். மறுக்காமல் சமர்த்தாக குடித்தான் ரிஷி.

நடந்த சம்பவத்திற்கு தாத்தா மீண்டும் மன்னிப்பு கேட்டார். ரிஷி “தாத்தா! தப்பே பண்ணாம நீங்க மன்னிப்பு கேட்டா நான் என்ன பண்ணட்டும்?.” என்று அழகாக சிரித்தபடி கூறினான். தாத்தா. “ரிஷி தப்பு பண்ணவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கைகளை கூப்பி மீண்டும் மன்னிப்பு கேட்க, “தாத்தா! தப்புக்குக் கூட அளவு இருக்கிறது. மன்னிக்க முடியாத அளவுக்கு தப்பு பண்ணிட்டு மன்னிக்கச் சொன்னால் நான் ஒன்றும் மகாத்மா கிடையாது. உங்கள் மேல் சிறிதளவும் எனக்கு கோபம் கிடையாது. அதனால் நீங்கள் கவலையேபடக் கூடாது. சரியா? தப்பு பண்ணவங்க மட்டும்தான் வருத்தப்படணும், வேதனைப்பட வேண்டும்.” என்றான் ரிஷி புன்னகையுடன்

ரிஷி தன் கால்களைத் தடவியவாறே “என் கால்கள் எப்போது சரியாகும் தாத்தா!” என்று கேட்டான். தாத்தா அவனிடம், “இரண்டே நாட்களில் சரியாகிடும் ரிஷி. நாளை கட்டை அவிழ்த்து விடுவேன். காலுக்கு சிறிது பயிற்சி கொடுத்தபின் நீ முன்போலவே மலையரசனைத் துரத்தி பிடிக்கலாம்” என்றார். ரிஷி எதுவும் பேசவில்லை. அவனைத் தட்டி கொடுத்தபடி சென்றார் தாத்தா.

தாத்தா சென்றபின் தேனரசியைத் தவிர மற்ற அனைவரும் ரிஷியிடம் மன்னிப்பு கேட்டனர். ரிஷி யாரையும் நிமிர்ந்து பார்க்கக் கூட இல்லை. பேசவும் இல்லை. காலை, மதிய உணவை யார் கொடுத்தாலும் சாப்பிடாமல் இருந்தவன் தாத்தா அருகில் வந்து சொன்ன பிறகே சாப்பிட்டான். தன் அருகில் யாருமே இல்லாதது போல் நடந்து கொண்டான். மலையரசனுக்கு ரிஷியின் பாராமுகம் கடுமையான மனவேதனையைத் தந்தது.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31