உன்னை விடமாட்டேன் – பகுதி 32
சிரித்த முகத்துடன் பேசியவனின் முகம் ‘தவறு செய்பவர்களை நான் தண்டிக்காமல் விடுவதில்லை.’ என்று சொல்லும்போது மட்டும் கோபத்தின் கனலைக் காட்டியது. தாத்தாவின் முகத்தில் பயம் படர்ந்தது. ‘தேனரசியை தண்டிக்காமல் விட மாட்டானோ?’ என எண்ணினார். அதனால் அவர் ரிஷியிடம், “அறிவில்லாமல், அனுபவமில்லாமல் செய்யும் தவறுகளை மன்னிக்கலாம் இல்லையா ரிஷி.” என்றார். ரிஷியோ, புன்னகையுடன் “அதெப்படி முடியும் தாத்தா! என்னிடம் அறிவில்லாமல், அனுபவமில்லாமல் தவறு செய்தால் அறிவும், அனுபவமும் புகட்டப்படும். அதனால், தாங்கள் கவலையே பட வேண்டாம்.” என்றான் சிரித்தபடி.
தாத்தாவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது. இவன் மிக சாதாரணமாக பழகினாலும் அசாதாரணமானவன். இவன் இளைய வயதினன் என்றாலும் இவனின் அறிவு, சாமர்த்தியம், ஒருவரை கணிக்கும் திறன் தன்னுடைய அனுபவத்துடன் போட்டி போடும் அளவிற்கு உள்ளது. குற்றவுணர்வுடன் கதறி அழும் மலையரசனையே இன்னும் மன்னிக்காதவன் தேனரசியை மன்னிப்பானா? அவள் எத்தகைய தவறு செய்தாலும் தன்னுடைய பேத்தி ஆயிற்றே. அவளை ரிஷி எவ்வாறு தண்டிப்பான் என அவரால் கணிக்க முடியவில்லை. ஆனால், ரிஷியிடம் இருந்து தேனரசியைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என மனதில் முடிவு கட்டினார்.
முதலில் அவருக்கு ரிஷியின் பக்கத்திலேயே எப்படி இருக்க முடியும்? ஆனால், ரிஷியோ யார் எது கொடுத்தாலும் சாப்பிடுவதில்லையே, தன்னைத் தவிர. சிறுவன் ராசாளிதான், ரிஷியை கவனிக்க சரியான ஆள் என ஏற்பாடு செய்தார். பிறகு, தாத்தா தேனரசி இருக்குமிடத்திற்கு விரைந்தார்.
ராசாளியின் மழலை பேச்சில் மயங்கி நின்றான் ரிஷி. அவன் மனதுக்கு ராசாளியின் பேச்சு அமைதியை தந்தது. “மாமா! யாருகிட்டயும் பேசலைன்னா நேரமே போகாதே. எல்லாரும் வேலை செய்தாங்கன்னா, என்னய கவனிக்கவே மாட்டாங்க. அப்போ எனக்கு நேரமே போகாது. இதோ இதை வச்சிதான் விளையாடுவேன். நீங்களும் இதை வச்சி விளையாடுறீங்களா?” என்று கேட்டவனிடம், “அதான் என்கூட பேச நீ இருக்கியே” என்றான் புன்னகையுடன். “அப்போ இதை உங்க பைக்குள்ள வைக்கிறேன். நான் யாராவது கூப்பிட்டா போயிட்டா தனியா இருப்பீங்கஇல்ல அப்போ விளையாடுங்க. சரியா?” என்றபடி கலை வேலைப்பாட்டுடன் இருந்த அழகிய விளையாட்டு பொருட்களை ரிஷியின் பைக்குள் திணித்தான் ராசாளி. அவன் அவ்வாறு திணிக்கும்பொழுது டிரான்ஸ்மீட்டரின் நினைவு ரிஷிக்கு வந்தது. மரத்தில் ஒளித்து வைத்த அதை திரும்பவும் பைக்குள் வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். இன்று இரவு தங்கையிடம் பேச முடியாதே. அவள் பயப்படாமல் இருக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான்.
அங்கே, தேனரசியின் தாயார் முல்லைக்கொடி அழுதபடி, தேனரசியை கரித்துக் கொண்டிருந்தாள். தேனரசி அடி வாங்கிய தடத்துடன் ஓரத்தில் அழுதபடி அமர்ந்திருந்தாள். அவளை அடிக்க பயன்படுத்திய புளியமிலாறு ஒருபக்கத்தில் இருந்தது. தேனரசியின் பொியம்மா முல்லையரசி, முல்லைக்கொடியை ஆறுதல்படுத்தியபடி அருகில் இருந்தாள்.
தாத்தா, “என்னம்மா தாயி! என்ன நடக்குது இங்க?” என்றார். “பாவி மானத்த வாங்கிட்டு எதிர்த்து வேற பேசுறா. கண்டபடி ரிஷி தம்பிய பத்தி பேசுறா. அவ செஞ்ச மானம் கெட்ட செயலுக்கு சாக்கடை விளக்கம் வேற கொடுக்குறா “ என்றாள் முல்லைக்கொடி மரியாதையுடன் எழுந்து நின்றபடி.
தேனரசி, “தாத்தா! மலைத்தேனுக்கு ரிஷி ஏதோ சதி திட்டம் தீட்டுறான். நீங்களாவது நம்புங்க தாத்தா. அவன் யார்கிட்டயோ போன்ல பேசினான். நான் என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன். கண்டிப்பா நாம இருக்குற இடத்துக்கு தீங்கு செய்யப்போறான். நான் இப்படி பண்ணவாவது அவனை விரட்டி விடுவீங்கன்னுதான் இந்த மாதிரி நடந்துகிட்டேன். அவன் முட்டையை சாப்பிட முயற்சி பண்றான்னு சொன்னாலும் அதை யாரும் நம்பலியே. அவனை தலை மேல வச்சு கொண்டாடுறீங்க. நான் என்ன பண்றதுன்னு தெரியாம இப்படி பண்ணேனே தவிர வேற ஒண்ணும் இல்ல. நான் பண்ணது ரிஷிய விரட்டி விடுவீங்கன்னுதான். நான் என்ன சொன்னாலும்தான் என்னய நம்ப மாட்டீங்கன்னுதான் இப்படி பண்ணேன். என் மானத்த பணயமா வச்சுத்தான் இதை பண்ணேன். நம்ம வீட்டு பொண்ணு இந்த அளவுக்கு கீழ இறங்குவாளா? அப்படி இறங்கிட்டாளே என்ன காரணம் அப்படின்னு யாராவது யோசிக்கக் காணுமே. நான் என்ன பண்ண?” என்று கதறி அழுதாள் தேனரசி.
Comments
Post a Comment