உன்னை விடமாட்டேன் – பகுதி 33

 தாத்தா, “அம்மா, தேனு! ரிஷி என்ன பண்ணாலும் அதை நாங்க பார்க்க மாட்டோமா? நாங்க என்ன செத்தா போயிட்டோம். பொட்ட பிள்ள செய்ய கூடாததை செய்துட்டு விளக்கெண்ணய் விளக்கம் சொல்றியோ?” கோபத்துடன் கேட்டார். பின் அங்குள்ள பெண்மணிகளிடம் “அம்மா! தேனரசிய எக்காரணத்த கொண்டும் வெளியே விடாதீர்கள். வீட்டுக்குள்ளயே இருக்கட்டும். வெளியே விட்டீங்கன்னா பொல்லாப்பு வந்து சேரும். அனுபவஸ்தன் சொல்றேன். கண்டிப்பா கேட்டு நடங்க. பின்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னா தேனு வீட்டுக்குள்ளதான் இருந்தாகணும். சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். அம்புட்டுதான்.” என்று சொல்லி விட்டு ரிஷியின் காலுக்கு எண்ணெய் தயாரிக்க ஏற்பாடு செய்ய போனார்.

தேனரசிக்கு பற்றிக் கொண்டு வந்தது. அவள் மனதிற்குள், “நீங்க அவ்வளவு தெளிவா இருந்தா எனக்கேன் இந்த நிலைமை தாத்தா! இப்பவும் தப்பு பண்ண மாதிரி என்னயத்தான அடைச்சு வைக்கீறீங்க” என்று எண்ணிக் கொண்டாள் வெளியில் வாய் விட்டு சொல்ல முடியாமல். தேனரசிக்கு கட்டுக்காவல் போடப்பட்டது.

ரிஷிக்கு மலையரசன் இரவு உணவு கொண்டு வந்தான். ரிஷி அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மலையரசன், “ரிஷி! என்னய மன்னிச்சுரு. நான் மன்னிக்க முடியாத அளவுக்கு தப்பு பண்ணிட்டேன்னு நீ நினைச்சீன்னா, நான் இந்த விஷத்தை குடிச்சிட்டு சாகிறேன்” என்று விஷத்தை குடிக்க முற்பட்டான். ரிஷி தான் படுத்திருந்த கட்டிலை விட்டு எழுந்து அதை தட்டி விட்டான். ரிஷியின் கால் ஒன்றும் ஆகிவிடக் கூடாது என்று மலையரசன் தாங்கி பிடித்தான்.

திரும்பவும் கட்டிலில் படுத்த ரிஷி, “நான் உன்கிட்ட பேசுறது அவ்வளவு முக்கியமா? மலையரசா!” என்று கேட்டான். “ஆயிரம் இருந்தாலும் நான் உன் நண்பன்தானடா. இல்லையா? சொல்லு.” கலங்கி கேட்டான் மலையரசன். “நட்புன்னா என்னன்னு தெரியுமா? மலையரசா! நான் தப்பு பண்ணா கண்டிக்கலாம். விசாரிக்காம தண்டிக்க இந்த நட்பு உனக்கு உரிமையை கொடுத்ததா மலையரசா!” என்று கேட்டான் ரிஷி.

“தங்கச்சின்னு நினைச்சதுக்கு நான்தான் தண்டனைய அனுபவிக்கறேனே ரிஷி! என் மனச்சாட்சி என்னய குத்துதுடா. உன்னோட பாராமுகம் என்னய எவ்வளவு கஷ்டப்படுத்துதுன்னு தெரியுமா? நான் நிச்சயமா பாடம் கத்துக்கிட்டேன். இனிமேல் நீதான் எனக்கு முக்கியம். தங்கச்சி இல்ல”. என்றான் மலையரசன் உணர்ச்சிகரமாக. “என்ன நடந்தாலும் தங்கச்சிய விட எனக்கு முக்கியத்துவம் கொடுப்பியா மலையரசா!” என்று கேட்டான் ரிஷி. உணர்வுபூர்வமாய் இருந்த மலையரசன் நிதானித்தான். திரும்பவும் வாக்கு தவறி விடக்கூடாது என நினைத்தவன் சற்று சிந்தித்து விடை கொடுத்தான். “எப்படியும் நீ என் நண்பன்தான். அதுல மாற்றம் இல்லை. ஆனால், என்ன நடந்தது அப்படினு முழுசா தெரிஞ்ச பின்னாடிதான் நான் முடிவெடுப்பேன். என்ன நடந்தாலும் நீ என் நண்பன்தான். அதுல மாற்றம் இல்லை.” என்றான் மலையரசன்.

உணர்ச்சிவசப்படுதலை விட்டு அறிவுபூர்வமாய் சிந்திக்க துவங்கிய மலையரசனை ரசித்த ரிஷி புன்னகையுடன், “நிஜமா? என்ன நடந்தாலும் நான் உன் நண்பன்தானா? நல்லா, நிதானமா யோசிச்சு பதில் சொல்லு” என்றான். மலையரசன், “என் வாக்கு இந்த முறை தப்பாது ரிஷி! நீ தப்பு பண்ணா கண்டிப்பேன். தண்டிக்கற அளவுக்கு நீ கண்டிப்பா தப்பு பண்ண மாட்டாய். அப்படியே பண்ணிட்டாலும் நீ என் நண்பன்தான்” என்றான் மலையரசன். மலையரசனின் நட்பை ஏற்றதின் அடையாளமாக, “சரிடா! பசிக்குது. சீக்கிரம் அதைக் கொடு” என்றான் ரிஷி. கண்களில் ஆனந்த கண்ணீர் மல்க மலையரசன் உணவை ஊட்ட மறுக்காமல் உண்டான் ரிஷி. அவசரமாக ரிஷிக்கு இரவு உணவை கொண்டு வந்த தாத்தா இக்காட்சியைக் கண்டு ‘எல்லாம் சரியாகி விடும்’ என்று மனதிற்குள் மகிழ்ந்தார்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31