உன்னை விடமாட்டேன் – பகுதி 34

 அடுத்த நாள் காலை தாத்தா ராசாளியைக் கிளப்பிக் கொண்டு ரிஷியின் கால் கட்டை அவிழ்த்தார். முன்பே தயாராக வைத்திருந்த எண்ணெயை காலில் ஊற்றி அழுத்தி தேய்த்தவர், “ரிஷி! நேத்து ராத்திரி காலை வேகமா எதற்காவது அசைச்சியா?” என்று கேட்டார். மிகுந்த வியப்புடன் தாத்தாவிற்கு பதில் சொல்ல முற்பட்ட ரிஷியை முந்திக் கொண்டு பதில் சொன்னான் மலையரசன். “ஆமாம் தாத்தா! என்னாலதான் அவன் காலை அசைச்சான். ஏதும் பிரச்னையா தாத்தா” என்றான் பதற்றத்துடன். “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை. பயப்படாத.” என்றவர் காலுக்கு பயிற்சி கொடுத்தார். பிறகு, ரிஷியிடம், “என்ன ரிஷி! ஒரு வழியா மலையரசனை மன்னிச்சிட்ட போலிருக்கு. இதுதான் சரி. முட்டாள்தனமா யார் நடந்துகிட்டாலும் மன்னிக்க கத்துக்கணும் ரிஷி!” என்றார். தாத்தா, “மலையரசன் அறிவுபூர்வமா மன்னிப்பு கேட்டான். அதான் கொடுத்துட்டேன் தாத்தா. உணர்வுபூர்வமா, முட்டாள்தனமா மன்னிப்பு கேட்டிருந்தா கொடுத்துருக்க மாட்டேன்.” என்றான் ரிஷி.

தாத்தா சிரித்தபடி, “ரிஷி உனக்கு தூக்குணாங்குருவியும் குரங்கும் கதை தெரிஞ்சிருக்கும். முட்டாள்கள திருத்த முயற்சி செஞ்சா சில நேரம் அது நமக்கே கெடுதலா மாறிடும். அதனாலதான் பெரியவங்க கூட குழந்தைகள், பெண்கள், வயதானர்கள் தப்பு பண்ணா மன்னிக்க சொல்லியிருக்காங்க. மூணு வகையிலும் அனுபவம், உணர்ச்சிவசப்படுறது, மறதி காரணமா தப்பு பண்ணிடுவாங்க. அதனால மன்னிக்கவும் செய்யணும் ரிஷி” என்றார்.

ரிஷி, தேனரசிக்கு தாத்தா பரிந்து வருவதை உணர்ந்து கொண்டாலும் அதை காண்பித்து கொள்ளாமல், “தாத்தா! எங்க நகரத்து மருத்துவமனையில என்னை ஆறு மாசமாவது படுக்க வச்சி சில லட்சத்தையாவது என்கிட்ட பிடுங்கிட்டுதான் என் காலை சரி பண்ணியிருப்பாங்க. ஆனா நீங்க ஒரே நாள்ல நல்லா குணமாக்கிட்டீங்க தாத்தா. என் காலுல இப்ப வலியே தெரியலியே! ரொம்ப நன்றி தாத்தா!” என்றான். அவன் கூறுவது உண்மை என்றாலும், ரிஷி பேச்சை மாற்றுகிறான் என்பது தாத்தாவுக்கு புரிந்தது.

“ரிஷி இந்த தாத்தாவுக்காக மன்னிக்க மாட்டியா?” என்றார் தாத்தா விடாப்பிடியாக. “தாத்தா! நீங்க யாருக்கு மன்னிப்பு கேட்குறீங்க. தப்பை உணராதவங்களுக்காகவா? அது எனக்கு இதுவரைக்கும் பழக்கம் இல்லை. என்னை பலவீனப்படுத்தாதீங்க தாத்தா. அப்புறம், என் காலுக்கு போட்ட மூலிகை பேரு என்ன தாத்தா?” என்றான் ரிஷி. தாத்தா, “நீ பேச்சை மாத்த இவ்வளவு முயற்சி பண்ண வேண்டாம். ஐயோ! பாவம்ன்னு நானே உன்னை விட்டுறேன். சரி, ரிஷி இப்ப எழுந்து நட” என்று நடக்க சொன்னார்.

முதலில் மெதுவாக நடந்த ரிஷி இப்போது நன்றாக நடந்தான். கால் சரியான சந்தோஷத்தில் தாத்தாவை கட்டிப் பிடித்தவன் குடிலுக்கு வெளியில் வந்தான். அவன் பார்வை தேனரசியை வெறியுடன் தேடியது எனலாம்.

மலையரசன் தாத்தாவிடம், “தாத்தா நான் முன் போல் ரிஷியை அழைத்து செல்லலாமா?” என்று கேட்டான். “மதிய உணவிற்குபின் காடு, மலை என எங்கு வேணும்னாலும் அழைச்சுட்டு போ!” என்றார் தாத்தா. ரிஷி மலையரசனிடம், “எனக்காக காத்திருப்பது போல் வேலைக்கு டிமிக்கி கொடுக்க வேண்டாம் மலையரசா! நாளைக்கு கூட நான் உன்கூட வரலாம். நீ இப்போ வேலைக்கு போற வழியப் பாரு” என்றான். தாத்தாவும், “ஆமாம், மலையரசா! வேலை நிறைய இருக்கு. அதை முதலில் கவனி” என்றார். “தாத்தா! நான் மட்டுமே தனியா இருப்பேன். நீங்களும் வேலைய கவனியுங்கள். என்னால் உங்களுக்கு எல்லா வேலையும் நின்றிருக்கும். நான் தனியாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் ராசாளி மட்டும் எனக்கு துணையாக இருக்கட்டும்” என்றான் ரிஷி. “சரி” என்றார் தாத்தா.

ரிஷியின் விழிகள் தேனரசியை தேடியது. அவள் போகுமிடமெல்லாம் ராசாளியை கூட்டிக்கொண்டு சுற்றிவதை போல் அவளை தேடினான். அவன் மனம், “உன்னை விட மாட்டேன். உன்னை என்ன செய்கிறேன் பார். இந்த ரிஷியை என்னவென்று நினைத்தாய். என்னிடம் உன் சாகசத்தை காட்டினாயா? இனி என் சாகசத்தை நீ பார்” என்று நினைத்தது. ஆனால் தேனரசியின் நடமாட்டம் எங்கும் காணப்படவில்லை. அவள் வீட்டிற்குள் காவலுடன் இருப்பதை ராசாளி மூலம் தெரிந்து கொண்டான். “எவ்வளவு காவல் இருந்தாலும் உன்னை விட மாட்டேன். எனக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.” என பசியுடன் உலவும் புலி போல தேனரசிக்காக காத்திருந்தான்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31