உன்னை விடமாட்டேன் – பகுதி 37
“அக்கா! தேனைக் காணலியே. அவள் காலைல போற இடமெல்லாம் தேடிப் பாத்துட்டேன். மாமனாருக்கு (சிங்கராசா தாத்தா) தெரிஞ்சா அவ்வளவுதான். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலியே. இவளை ஏன் பெத்தேனோன்னு நினைக்கிற அளவுக்கு என்னைய பாடாய்படுத்துறாளே!” என கண்ணில் நீர் பெருக உரைத்தாள். அவளை சமாதானப்படுத்தியபடி முல்லையரசியும் விழுந்து, விழுந்து தேடினாள். விஷயம் பெரியவருக்கு தெரியாமல் முடிக்க வேண்டும் என பாட்டி முதற்கொண்டு பெண்கள் மூலமாக தேட துவங்கினாள். ஆண்களிடம் சென்றாலே பெரியவருக்கு தெரிந்து விடும் என எண்ணியே பெண்கள் கூட்டம் மட்டும் ரகசியமாக தேடியது. தேடினாலும் தேனரசி கிடைத்தால்தானே.
வேறுவழியின்றி மலையரசன் மூலமாக தாத்தாவுக்கு தெரியாமல் தேடலாம் என விரைவில் முடிவெடுத்து முல்லையரசி மலையரசன் தூங்கும் இடத்திற்கு சென்றாள். தட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் சாத்தி இருந்த கதவை திறந்தாள். மலையரசன் பக்கத்தில் மயக்க மூலிகை இலைகளை பார்த்தாள். ரிஷியையும் காணவில்லை. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தவள் மலையரசனை உலுக்கி பார்த்துவிட்டு சப்தமாக அனைவரையும் அழைத்தாள்.
சிங்கராசா தாத்தா, வந்தவுடன் நேரத்தை விரயமாக்காமல் மாயவன் தலைமையில் சிலரை ரிஷி சென்ற திசையில் போகச் சொன்னார். அதற்குள் காட்டுராசா தேனரசியின் காலடி தடத்தையும், ரிஷியின் காலடி தடத்தையும் ஆராய்ந்து நடந்ததை ஒருவாறாக யூகித்து சிங்கராசா தாத்தாவிடம்,. “தேனரசி எதற்கோ வெளில வந்திருக்கா. ரிஷி கடத்திட்டு போயிட்டான்”. என்று சொன்னார். அழுத பெண்கள் கூட்டத்தை பார்த்து, “தும்பை விட்டுட்டு இப்போ என்ன அழுகை வேண்டிக் கிடக்கு. தேடி போறவங்க சோர்ந்து போகாம இருக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணுங்க. மலையரசனை கவனியுங்க” என்றார்.
மலையரசனின் அப்பாவையும், பெரியப்பாவையும் இங்கேயே இருக்கும்படி கூறினார் சிங்கராசா தாத்தா. காட்டுராசா தாத்தாவிடம், “அவ்வளவு சுலபமா கடத்திட்டு போயிட முடியாது. ரிஷி ஏதேனும் தந்திரம் பண்ணுவான். அதனால நாமளே போறதுதான் சரி. மலையரசன் இருந்தா அந்த தந்திரத்தை கண்டுபிடிச்சி கண்டிப்பாக ரிஷியை பிடிச்சிடுவான். அவன்தான் மயக்கத்தில இருக்கானே. அதனால நாமதான் போயாகணும். வாங்க போகலாம்” என்று வாலிப துள்ளலுடன் சிலரை அழைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார் சிங்கராசா தாத்தா.
மாயவன் தலைமையில் சென்ற குழு ரிஷியின் காலடி தடத்தை பின் தொடர்ந்து தவறான பாதையில் தேடிக்கொண்டிருந்தனர். சிங்கராசா தாத்தா அங்கு வந்துவிட்டார். அவருக்கு கோபமாய் வந்தது. “அடேய்! அறிவுகெட்ட பசங்களா! அது தப்பான பாதை மட்டுமில்ல. புலி நடமாட்டம் அதிகமா இருக்குற இடம். அங்க போயிருக்க மாட்டான். காலடித் தடம் தெரியலைன்னா கூட பரவாயில்லை இந்த பக்கமா போயி தேடுங்க” என்று சரியான பாதையில் திருப்பி விட்டார்.
சூரியனின் கருணை ரிஷிக்கு கிடைத்து விட்டது. மணி ஆறாகி விட்டது. மிக நீளமாக திரித்த கயிறை கிணற்றில் இறைக்கும் கயிறு போல மலை உச்சியில் இருந்த பலமான மரத்தின் வலிமை மிகுந்த மரக்கிளையில் மாட்டி தொங்க விட்டான். இன்னொரு துணைக் கயிறையும் அருகில் கட்டினான். இப்பொழுது மூன்று முனைகள் இருந்தன. ஒரு முனையில் தேனரசியைக் கட்டினான். மறுமுனையில் தன்னை பிணைத்துக் கொண்டான். மேலும், கீழுமாய் அசையாத கயிறை தனக்கு பிடிமானமாய் பிடித்துக்கொண்டு ஏற ஆரம்பித்தான். மேலும், கீழுமாய் அசையும் கயிறைப் பிடித்துக்கொண்டு ஏறும்போது கயிறு கீழே இறங்க மயங்கியிருந்த தேனரசி மேலே வர ஆரம்பித்தாள். அவளுக்கு அடிபடாமல் கவனமாய் ஏற்றினான். இம்முறையில் சுலபமாக மலையின் உச்சியை அடைந்தான். காட்டுபயணத்தை கடினமாக கடந்தவனுக்கு மலைப் பயணம் மிக சுலபமாயிருந்தது கடைசியில் வன அதிகாரி இருக்கும் இடத்திற்கு வந்து விட்டான்.
Comments
Post a Comment