உன்னை விடமாட்டேன் – பகுதி 38

 சிங்கராசா தாத்தா. மலையடிவாரத்தை அடையும்போது மலையரசனும் அங்கே வந்து விட்டான். சிங்கராசா தாத்தா, “வந்துட்டியா மலையரசா! நீ இருந்தா ரிஷியை இந்நேரம் பிடிச்சிருப்ப. அவனை விடாதே. தாத்தாவோட கட்டளை அப்படினு அவனை எப்படியாவது அழைச்சுட்டு வந்துரு. சீக்கிரம் போ” என்று மலையரசனை அனுப்பி வைத்தார். பிறகு அவர் காட்டுராசா தாத்தாவிடம், “மயங்கி இருந்தவன் இவ்ளோ சீக்கிரமா வந்திருக்கான்னா கண்டிப்பா ரிஷியோட காலடித் தடத்த பார்த்து மலையரசன் ஏமாறலன்னு அர்த்தம். ஆனாக்கூட இனி மலையரசன் ரிஷியை பிடிப்பானான்னு சந்தேகம்தான். ஏன்னா, வெளிச்சம் வந்துடுச்சு. இருட்டுலியே சமாளிச்சு வந்தவன் இந்நேரம் மலையக் கடந்திருப்பான்.” என்று வருத்தத்துடன் சொன்னார்.

8.30 மணியளவில் மயங்கியிருந்த தேனரசியுடன் வந்தவன், தான் விட்டு விட்டு சென்ற செல்போன் அடங்கிய பையை கொண்டு வரும்படி வன அதிகாரியிடம் உத்தரவிட்டான். ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்த ரிஷியை கேள்வி கேட்க பயந்து, “இதோ சார்!” என்று பத்திரமாக வைத்திருந்த பையைக் கொண்டு வந்து கொடுத்தார் வன அதிகாரி. “என்னுடைய கார் எங்கே?” என்ற ரிஷியிடம், “நீங்கள் சொன்னபடியே தினமும் துடைத்து பத்திரமாக உறை போட்டு அங்கே வைத்துள்ளேன் சார்! என்று பவ்யமாக பதில் கொடுத்தார். ரிஷி தாமதிக்காமல் இரண்டு பைகளையும் எடுத்துவரும்படி உத்தரவிட்டு காரின் பின் சீட்டில் தேனரசியை கிடத்தினான். பிறகு, வன அதிகாரியிடம் இரண்டு பைகளையும் வாங்கிக்கொண்டு, அவரிடம் 2,000 ரூபாய் அடங்கிய ஒரு கட்டை கொடுத்துவிட்டு காரை கிளப்பிக் கொண்டு சென்றான். வேகமாக போன காரைப் பார்த்துக் கொண்டு திக் பிரமை பிடித்தாற்போல் 2,000 ரூபாய் அடங்கிய பணக்கட்டுடன் நின்றார் வன அதிகாரி.

அவர் ஒன்றும் லஞ்சம் வங்காதவர் அல்லதான். மரக்கடத்தல், புலித் தோல், புலியை உயிரோடு விற்றல் என பணம் வாங்கியிருக்கிறார்தான். ஆனால், இது பெரிய தப்பைப் போல் உணர்ந்தார். காரணம், அவருக்கும் கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அந்தப் பணத்தை எடுத்தால் தன் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும் என எண்ணி ஒரு துணியில் வைத்து மூடி பெட்டியில் வைத்தார். பின் தன் கைகளை சோப்பு போட்டு கழுவினார். அதன் பின்னே நிம்மதியாக உணர்ந்தார்.

மலையரசனும் தாமதிக்காமல் மலையைத் தாண்டி வன அதிகாரி இருக்கும் இடத்திற்கு வந்தான். வன அதிகாரி எந்த இலக்குமின்றி வெறித்த பார்வையுடன் தனது அறையில் அமர்ந்திருந்தார். மலையரசன் ரிஷியைப் பற்றியும், தேனரசி பற்றியும் விசாரிக்க, அவர் முகத்தில் பயம் அப்பட்டமாய் தெரிந்தது. ‘ரிஷியிடமா இவ்வளவு பயம்?’ என வியந்தவன், “சாமி! நீங்கதான் சொன்னிங்கன்னு எங்கேயும் சொல்லமாட்டேன். ரிஷி எங்க சாமி?“ என்ற பிறகே வன அதிகாரி வாயைத் திறந்தார்.

“மலையரசா! உன் தங்கச்சிய அவர் கார்ல கடத்திட்டு போயிட்டார். அவர் சென்னைக்குதான் போயிருப்பார்ன்னு நினைக்கிறேன். நீ உன் தங்கச்சிய மறந்துடு. உனக்கு ஒரு தங்கச்சியே இல்லன்னு நினைச்சுக்க. போய் வேற வேலையப் பாரு” என்றார் வன அதிகாரி. மலையரசன் தனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, “ஐயா! சாமி! உங்க வீட்டு பொண்ணுன்னா அவங்கள சுத்தமா மறந்துடுவீங்களா சாமி!” என்று கேட்டான். ஏற்கனவே குற்ற உணர்வில் தவித்தவர், “மலையரசா! அவங்க ரொம்ப பணக்காரங்க மட்டுமில்ல. அரசியல்வாதி முதற்கொண்டு பெரிய, பெரிய அதிகாரிகள் எல்லாம் அவங்க கைக்குள்ள. எதுவும் பண்ண முடியாதுன்னுதான் இப்படி பேசுனேன். நான் சொன்னது உண்மை கூட” என்றார்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31