உன்னை விடமாட்டேன் – பகுதி 39
மலையரசன் தன்னுடன் பழகிய ரிஷியை நினைத்து கொண்டு, “சாமி! நீங்க ரிஷியோட வீட்டு விலாசத்தை கொடுங்க. நான் போய் பேசிக்கிறேன்” என்றான். வன அதிகாரி மிரள, “சாமி! உங்க பேரை எங்கேயும் சொல்லமாட்டேன். சொல்லுங்க சாமி!” என கையேந்திய மலையரசனின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்ட வன அதிகாரி, “கண்டிப்பா உனக்கு உதவுறேன் மலையரசா!” என்றார்.
அப்பொழுது மாயவன் முதற்கொண்டு மற்றவர்கள் அங்கு வந்து சேர ஒரு குழப்ப நிலை ஆரம்பித்தது. அதைக் கண்ட மலையரசன் அவர்களிடம், “மாயவன், தென்னரசு இரண்டு பேர் மட்டும் இருங்க. மீதி பேரு நம்ம இடத்துக்கு திரும்ப போய்டுங்க. போறவங்கள்ல ரெண்டு பேர் மட்டும் தாத்தாட்ட கேட்டு பணத்தை வாங்கிட்டு சீக்கிரம் வாங்க. ரிஷி சென்னைக்குதான் கார்ல கடத்திட்டு போயிருப்பான்னு நினைக்கிறேன். அவனைப் பத்தி இங்க (திருநெல்வேலி) இருக்குற அவனோட கம்பெனிலதான் விசாரிக்கணும். பிறகு நான் சென்னைக்கு போக வேண்டியதாயிருக்கும் நிறைய பணம் தேவைப்படும். நீங்க விசிறி, பொம்மை, பெட்டி, நாற்காலி இதெல்லாம் நிறைய செஞ்சு வைங்க. அதையே சென்னைக்கு கொடுத்தனுப்புனா வித்து காசாக்கி அவங்கள தேட முடியும். கண்டிப்பா ரிஷியை கூட்டிட்டுதான் வருவேன்னு தாத்தாகிட்ட சொல்லுங்க சீக்கிரம் போய் தாத்தாட்ட பணத்தை வாங்கிட்டு வாங்க.” என உத்தரவிட்டான்.
மறுபேச்சு பேசாமல் கூட்டம் கிளம்பி போயிற்று. ‘தான் உதவி செய்யப் போவதை மலையரசன் அவர்கள் கூட்டத்திடம் கூட சொல்லவில்லையே’ என்று வனஅதிகாரிக்கு நம்பிக்கை உண்டாயிற்று. “சாமி இந்த ரெண்டு பேரும் நீங்க தான் விலாசத்தை கொடுத்ததா சொல்ல மாட்டாங்க. இப்பச்சொல்லுங்க சாமி!” என்றான் மலையரசன். “ஒரு நிமிஷம் மலையரசா!” என்று உள்ளே சென்ற வன அதிகாரி பெட்டிக்குள் வைத்த பணத்தை எடுத்து பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்தார். பிறகு தன்னிடம் நேற்று வந்து வேலைக்கு சேர்த்திருந்த துப்புரவாளரின் அடையாள அட்டைகளின் நகல்களை நான்காக மடித்து சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு வந்தார்.
“எனக்கும் அவரோட விலாசம் தெரியாது மலையரசா! ஆனா பிரவுசிங் சென்டர்ல போய் கண்டுபிடிச்சி தரேன். இங்க இருக்குற கம்ப்யூட்டர்ல கூட பார்க்கலாம். ஆனால் ரிஷிகேஷ் சார் அதைக் கண்டுபிடிச்சுருவாரோன்னு பயப்படுறேன். வாங்க போகலாம்” என்று சிசிடிவி இல்லாத நெட் சென்டரில் நுழைந்தார். அங்குள்ள போனில் அனுமதி கேட்டு தனியார் காரை உடனடியாக சென்னை செல்ல ஏற்பாடு செய்தார். பிறகு ரிஷியுடைய தொழில் நிறுவனத்தின் விபரங்களை சேகரித்தார். அப்பொழுது உயர்ரக ஆடைகளை அணிந்து பல்வேறு நிலைகளில், கோணங்களில் எடுத்த ரிஷிகேஷின் புகைப்படங்கள் அவனது வளமையை எடுத்துக்காட்டியது. மாயவனும், தென்னரசும் அவனை நெருங்க முடியுமா என பயந்தனர். ஆனால் அதை மலையரசனிடம் சொல்லவில்லை.
ரிஷிகேஷ் அடிக்கடி செல்லக் கூடிய சென்னையில் உள்ள தலைமை நிறுவனத்தின் முகவரியையும், அவன் வசிக்கும் பங்களாவின் முகவரியையும் தமிழில் கொடுத்தார். பிறகு, மலையரசனை மட்டும் தனியே அழைத்து ஒரு செல்போனை துப்புரவாளரின் பெயரில் வாங்கினார். “ரிஷிகேஷ் சார் என்னிடம் கொடுத்த பணம் இது. அதை தொடக்கூட மனம் இல்லாமல் வைத்திருந்தேன். இந்த பணம் உனக்கு உதவும். இந்த செல்போனையும் வைத்துக்கொள். வேண்டாம் என்று மறுக்காதே. உன் வேலை முடிந்ததும் என்னிடம் கொடு. நான் அந்த துப்புரவாளரிடம் இந்த செல்போனை இலவசமாக கொடுத்து விடுவேன்.
“இது என்னிடம் உள்ள ஒரு எண். இதற்கு போன் செய்தால் என்னை தொடர்பு கொள்ள முடியும்.” என்றவர் எப்படி செல்போனைப் பயன்படுத்த வேண்டும் என சொல்லிக்கொடுத்தார். “சென்னையில் பண விஷயத்தில் கவனமாக இரு. இந்த கொண்டை முடி, மூக்கில் உள்ளது, காதில் உள்ளதெல்லாம் வேண்டாம். சலூன் கடையில் சென்று முடியை ஒழுங்காக வெட்டிவிட்டு. டிப்டாப் ஆக உடை அணிந்தால்தான் உன்னால் சென்னையில் உள்ளவர்களோடு பழக, பேச, உதவி பெற முடியும். பணத்தாசை உள்ள ஆட்களால்தான் உனக்கு உதவ முடியும். அவர்களிடம் நிறைய கெட்ட பழக்கம் இருக்கும். அதையெல்லாம் நீ சகித்துதான் ஆக வேண்டும்” என பல்வேறு அறிவுரைகளைக் கூறினார்.
Comments
Post a Comment