உன்னை விடமாட்டேன் – பகுதி 40
வன அதிகாரி ஏற்பாடு செய்த காரும் வந்தது. “உன்னுடைய ஆட்கள் தாத்தாவிடம் இருந்து பணம் கொண்டு வந்தால் விவரத்தை நான் கூறிக்கொள்கிறேன். உடனடியாக நீங்கள் மூவரும் சென்னைக்கு செல்லுங்கள்.“ என்று காரில் அனுப்பி வைத்தார் வன அதிகாரி.
‘அந்த தொழில் அதிபரை நான்தானே வலுகட்டாயமாக மலையரசனிடம் கூட்டிட்டு போகச் சொன்னேன். இப்போது அதனால்தானே அவர்கள் பெண்ணிற்கு தீங்கு நேரிட்டது.’ என்று குற்ற உணர்வுடன் தவித்த வன அதிகாரி இந்த உதவியை அவர்களுக்கு செய்தபின் ஓரளவு நிம்மதி அடைந்தார்.
ரிஷியின் கார் சென்னையை நோக்கி சீறிச் சென்றது. ரிஷி ‘இனி தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது’ என்று அலட்சியமாக நினைத்தான். தேனரசி மயக்கம் தெளியும் இடங்கள் ஆள் அரவமற்ற இடமாக இருக்கும்படி பார்த்துக் கொண்டான். தேனரசியிடம் மூர்க்கத்தனம் மிகுந்திருந்தது. ஆனாலும், அவளால் தப்பிக்க இயலவில்லை. நடு வழியில் மூன்று முறை வலுக்கட்டாயமாக மூக்கைப் பிடித்து பழச்சாற்றை குடிக்க வைத்தான். பின் மீண்டும் மயக்க மூலிகையை பயன்படுத்தினான். தேனரசி இயற்கை உபாதையை கழிக்க ரிஷி ஒதுங்கி நிற்கும்போது, தேனரசி தப்பிக்க முயன்றது ரிஷியின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.
சென்னை சென்ற பிறகு, காட்டு பங்களாவிற்கு தன் பெண் தோழியை தேனரசிக்கு உதவியாக அழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டான். இவளுக்கு மரியாதை கொடுத்து ஒதுங்கி நின்றால் அந்த மரியாதையை இவளுக்கு காப்பாற்றிக் கொள்ளத் தொியவில்லை. இவளுக்கென்ன மான, அவமானம். ஆயிரம் இருந்தாலும் ஒரு ஆண்மகன் மேல் தகாத வீண்பழி சுமத்தியவள்தானே! என்று இகழ்ச்சியாய் நினைத்தான்.
காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுளின் கண்களில் மண்ணை தூவ காவல்துறை உயரதிகாரிகள் தீவிரவாதிகளை ரிஷிக்கு சொந்தமான காட்டு பங்களாவில் ரகசியமாக வைத்திருப்பார்கள். ரிஷியின் உதவியால் அங்கு தீவிரவாதிகளுக்கேற்ற அமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அங்கு தீவிரவாதிகள் யாரையும் தாக்க முடியாதபடியும், தற்கொலை செய்து கொள்ள முடியாதபடியும், அதே சமயத்தில் அவர்கள் உண்மையை கக்கும்படியும் அறைகளை ரகசியமாக அமைத்திருந்தனர். ரிஷியும் காவல்துறையினருக்கு பெருமளவில் ரகசியமாக உதவி வந்தான். தற்போது அந்த பங்களாவிற்கு தேனரசியை கொண்டு செல்ல முடிவு செய்தான்.. அங்கு அவன் நியமித்த காவலாளிகள்தான் இருப்பார்கள். அவர்கள் எதையும் தோண்டி துருவ மாட்டார்கள். மேலும் விழிப்புணர்வுடன் சுற்றுப்புறத்தை கண்காணிப்பார்கள்.
கார் செங்கல்பட்டு வழியாக பரங்கிமலையிலுள்ள காட்டு பங்களாவிற்குள் நுழைந்தது. கேட்டைத் திறந்த காவலாளிகள் பின்னே ஓடி வருவது தெரிந்தது. அவர்களை தவிர்த்து வெகு வேகமாய் பங்களா வாசல் முன் காரை நிறுத்தினான். பிறகு வெகு வேகமாய் காரிலிருந்து இறங்கி அவர்களை நோக்கி சென்றான். அவர்கள் யாரும் காரின் அருகே செல்லாதபடிக்கு ஆளுக்கொரு வேலையை சொல்ல ஆரம்பித்தான். “எட்வர்ட் நீங்க சைவ சாப்பாடு ஒன்னும் அசைவ சாப்பாடு ஒன்னும் வாங்கிட்டு வாங்க. ஸ்ரீதர் நீ இதோ இதில் இருக்கும் மளிகை சாமானை வாங்கிட்டு வா. ரமேஷ் நீங்க நம்ம ஹெட் செக்யூரிட்டிகிட்ட பங்களாவை சுத்தி இருக்குற மின்வேலியில எர்த் இருக்கும்படி பாத்துக்க சொல்லுங்க. அப்புறம் காதுல கம்மல், தலையில் கொண்டை முடி வச்சிக்கிட்டு யாரும் இந்த பக்கமா வந்த கண்டிப்பா உடனே எனக்கு தகவல் சொல்ல சொல்லுங்க. காவல் பலமா இருக்கட்டும். ராமசாமி மின்வேலிய சரி பண்ண புதர், மரம் எதுனா வெட்டணுமா? ன்னு கேட்டு பண்ணுங்க. சீக்கிரம், சீக்கிரம்.“ என்று அனைவரையும் விரட்டி விட்டான்.
அனைவரும் சென்ற பிறகு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டபின் மின்னல் வேகத்தில் காரிலிருந்து தேனரசியை தூக்கிக்கொண்டு பங்களாவிற்குள் நுழைந்து அங்குள்ள சோபாவில் கிடத்திவிட்டு மீண்டும் காருக்கு வந்தான். தேனரசியை கொண்டு வந்த தடம் எல்லாவற்றையும் சரி செய்தான். பிறகு பெருமூச்சு விட்டபடி பங்களாவிற்குள் நுழைந்து அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்த பெரிய கதவைத் தாழ்ப்பாள் போட்டான்.
Comments
Post a Comment