உன்னை விடமாட்டேன் – பகுதி 42
மலையரசன், கார் சென்னையை அடைந்ததும் ஒரு சலூன் கடையில் முடியை வெட்டிக்கொண்டான். காதில், மூக்கில் உள்ளதெல்லாம் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டான். நல்ல ஆடையை வாங்கி அணிந்து கொண்டான். மாயவனும், தென்னரசும் தாத்தாவை நினைத்து பயந்தனர். “டேய் மலை! உன்னைய நம்ம கூட்டத்துல இருந்தே விலக்கி வச்சுட்டுவாங்களே. தேனு கிடைக்கலைன்னா பரவாயில்லைடா” என்றனர். “நான் சென்னைக்காரன் மாதிரி மாறினத தாத்தாட்ட சொல்லவேண்டாம்” என்றான் மலையரசன்.
மூவரும் ரிஷியின் தொழில் நிறுவனத்திற்கு சற்று தொலைவில், நிற்க முடிந்ததே தவிர அதன் அருகில் கூட செல்ல முடியவில்லை. மலையரசன் தனியாகவும், மற்ற இருவரும் சேர்ந்தும் செல்ல முயன்றனர். மலையரசனால் போகமுடிந்த அளவுக்கு கூட மற்ற இரண்டு பேரால் போக முடியவில்லை. அங்கு இரண்டுபேரும் இரண்டு நாட்களாய் போராடி பார்த்தார்கள். கேட்டின் அருகே கூட போகமுடியவில்லை. அவர்களைப் பார்த்தாலே காவலாளிகள் உள்ளே விடவே இல்லை.
மலையரசன் மட்டும் அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தான். வன அதிகாரி சொன்ன அடையாளத்துடன் ரிஷியின் கார் அங்கு வரவே இல்லை. மலையரசன் இரண்டு பேரிடமும், “ரெண்டு பேரும் நம்ம இடத்துக்கு போய் கைவினை பொருளெல்லாம் எடுத்துட்டு இந்த கோயிலுக்கு பக்கத்தில் இருக்குற மரத்தாண்ட வாங்க. நான் எங்க ரிஷியைத் தேடினாலும் இந்த இடத்திற்கு வந்து பார்க்கிறேன். அப்புறம் தாத்தா கிட்ட நான் முடிவெட்டிட்டு சென்னைவாசி மாதிரி இருக்குறத சொல்லாதீங்க” என்று கூறினான். ‘சரி’ என்று அவர்கள் இருவரும் கிளம்பினர்.
அவர்கள் இரண்டு பேரும் சென்ற பிறகு தன்னிடம் சகஜமாய் பழகிய ஆட்டோ ஓட்டும் சுனிலை கெட்டியாக பிடித்துக்கொண்டான். அவனுக்கு காலை உணவை கண்டிப்பாக வாங்கி கொடுத்தான். சுனிலிடம் கெட்ட பழக்கம் நிறைய இருந்தாலும் நிறைய விஷயங்களை அறிந்து வைத்திருந்தான். அவனிடம் இருந்த சில பழக்க, வழக்கங்கள் மலையரசனுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் பழகினான். தன் தங்கையை பற்றி கூறாமல் கிராமத்தில் இருந்து பரம்பரை தெய்வ மரச்சிலையை ரிஷி எடுத்து வந்து விட்டதாகக் கூறினான். ரிஷியை நெருங்க சுனிலின் உதவியை நாடி நின்றான்.
தேனரசி இயல்பிலே மூர்க்கத்தனம் மிகுந்தவள் கிடையாது. ஆகவே, அவள் விரைவிலேயே சோர்ந்து விட்டாள். அவள் இப்போது நிதானத்திற்கு வந்தாள். தாத்தாவின் அறிவுரையை நினைத்துப் பார்த்தாள். ‘எப்படியிருந்தாலும் தாத்தாவுக்கு ரிஷியின் புத்தி தெரிந்திருக்குமோ? அதனாலதான் நம்மை அடைச்சு வச்சாரோ?’
“அம்மா, தேனு! ரிஷி என்ன பண்ணாலும் அதை நாங்க பார்க்க மாட்டோமா? நாங்க என்ன செத்தா போயிட்டோம். பொட்ட பிள்ள செய்ய கூடாததை செய்துட்டு விளக்கெண்ணய் விளக்கம் சொல்றியோ?” “அம்மா! தேனரசிய எக்காரணத்த கொண்டும் வெளியே விடாதீர்கள். வீட்டுக்குள்ளயே இருக்கட்டும். வெளியே விட்டீங்கன்னா பொல்லாப்பு வந்து சேரும். அனுபவஸ்தன் சொல்றேன். கண்டிப்பா கேட்டு நடங்க. பின்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னா தேனு வீட்டுக்குள்ளதான் இருந்தாகணும். சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். அம்புட்டுதான்.” தாத்தாவின் குரல் காதில் ரீங்கரித்தது.
மானத்தை இழந்தும் உயிர் போகாமல் வாழ வேண்டி வருமோ? அரண்டாள் தேனரசி. அப்படி நடக்கவே கூடாது. எப்படியாவது சாக வேண்டும். மாலுச்சாமி உன்னைய நினைச்சுதானே தற்கொலை பண்ணிக்க போனேன். என்னைக் காப்பாத்தி மானத்தை வாங்கி உயிரோட கொல்றியே. நான் என்ன தப்பு பண்ணேன். சொல்லு. அவனை விரட்ட சொன்ன பொய்க்கு தண்டனையா அவன் கையால என் மானத்தை வாங்கிட்டியா? எனக்கு எவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்துட்ட சாமி. சாமி என்னால உயிரோட இருக்கறத சகிச்சிக்க முடியலியே. என்னை எப்படியாவது சாக விடு சாமி என கண்ணீருடன் வேண்டிக்கொண்டாள்.
உள்ளே வந்த ரிஷி வழக்கம் போல எள்ளி நகையாடினான். ஆனால் இம்முறை தேனரசி அமைதியாக இருந்தாள். இப்பொழுது தேனரசி தானே குளிக்க, சாப்பிட செய்தாள். ரிஷியும் அமைதியானான். தேனரசி ஒன்றை கவனித்தாள். தான் முகத்தில் உமிழ்ந்த அன்று ரிஷி நடந்த கொண்ட மாதிரி தொடர்ந்து வந்த நாட்களில் நடந்து கொள்ளவில்லை. அப்படி நடந்து கொள்ளப் போவதாய் மிரட்டி உண்ண, குளிக்க வைத்தான். தான் மிக அழகு என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால், ரிஷியின் பார்வையில் எந்த தவறான நோக்கத்தையும் அவள் காணவில்லை. இன்னும் நிதானமாய் யோசிக்க ஆரம்பித்தாள். ‘தாத்தா தன்னை கடத்தினால் கூட மலைத் தேனை எடுக்க சம்மதிக்க மாட்டாரே. இனி ரிஷி நம்மை வைத்து என்ன செய்வான்?’
Comments
Post a Comment