உன்னை விடமாட்டேன் – பகுதி 43
இரண்டு நாட்களாய் தேனரசியிடம் பதிலுக்கு பதில் சீண்டியவன், தேனரசி அமைதியாக இருந்ததும் அவனும் அமைதியாக இருக்க ஆரம்பித்தான். ஆனாலும் தேனரசி தன்னிடம், ‘ஏன் என்னை கடத்தி வந்தாய்’ என்று கேட்பாள் என ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்திருந்தான். ஆனால், அவளோ அது பற்றி எதுவும் கேட்கவே இல்லை.
முதலில், அவள் ரிஷியை தாக்குவதிலேயே குறியாக இருந்தாள். இப்போதோ அவள் அமைதியாக இருக்க ஆரம்பித்து விட்டாள். அடிக்கடி அவள் கண்களில் கண்ணீர் மழையைக் கண்டான். அவள் அழுவதை தன்னிடம் மறைப்பதற்காக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வதைக் கவனித்தான் ரிஷி. அவள் அடங்கி விட்டதாக நினைத்து தன்னுடைய வழக்கமான அலுவல் பணிகளை கவனிக்க ஆரம்பிக்கலாம் என்று நினைத்தான்.
‘முதலில் தங்கையிடம் பேசி விடலாம். அவளிடம் பேசி எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன?’ என எண்ணியபடி செல்போனை ஆன் செய்தான். சூர்யகலா கேட்டாள், “அண்ணா எங்கே இருக்கிறாய்? அன்று ஏன் நீ பேசும்பொழுது திடீரென்று கட் செய்தாய்? அடுத்த நாள் ஏன் பேசவில்லை. பிறகு அதற்கடுத்த நாள் ‘பத்து நாட்கள் கழித்து தான் பேச முடியும்’ என்றாய். இப்பொழுது இவ்வளவு நாள் கழித்து பேசுகிறாய். இவ்வளவு நாட்களாக என்ன செய்தாய்? பிரச்சினை ஒன்றுமில்லையே.” கேள்விக்கு மேல் கேள்வியாய் அடுக்கினாள் தங்கை.
ரிஷி தங்கையிடம், “பார்த்து சூர்யகலா கொஞ்சம் மூச்சை விட்டு பிறகு பேசு.” என்றான் சிரித்தபடி. அவன் சிரித்த சிரிப்பில் பிரச்சினை ஒன்றும் இருக்காது என நிம்மதியானவள், “அண்ணா! விளையாடாதே! நான் எவ்வளவு பயந்து விட்டேன் தெரியுமா? நீ ஒழுங்காக அங்கு என்ன பிரச்சினை என்று கூறு. இப்பொழுது பிரச்சினை முடிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால், முன்பு அங்கு என்ன பிரச்சினை என்று மறைக்காமல் கூறு. நீ செல்போனில் பேசுகிறாயே! காட்டை விட்டு எப்போது வெளியே வந்தாய்? பொய்க்கதை கூறாமல் உண்மைக்கதையைக் கூறு” என்றாள் ஆர்வமுடன்.
தன் அருமைத் தங்கையின் புத்திசாலித்தனத்தை ரசித்த ரிஷி, “நான் வீட்டுக்கு வந்து விலாவாரியாக சொல்லுகிறேன். இன்னும் ஒரு வாரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன். சரியா?” என்றான். ‘இன்னும் ஒரு வாரமா?/ என்ற தங்கையிடம் வேறு கதைகளை பேசி அப்படியே போனை வைத்துவிட்டான். பிறகு தனது செயலாளரை போனில் அழைத்து தலைமை நிறுவன அதிகாரியிடம் மலைத்தேன் விஷயத்தில் ஏமாற்றிய 12 பேரையும் அபராதத்தொகை கட்டவேண்டும். அதை கட்டாவிட்டால் வேலைநீக்கமும், சட்டரீதியான நடவடிக்கையில் அபராதத்தொகையைவிட இரு மடங்கு அதிகமாக தொகை வசூலிக்கப்பதுடன் வழக்கு செலவும் சேர்த்துக்கொள்ளப்படும் என கடிதம் தயார் செய்து 12 பேருக்கும் அனுப்பும்படி கிளை நிறுவன மேலாளருக்கு உத்தரவிடும்படி சொல்லச்சொன்னான்.
ரிஷி வேறு தொழில் நிறுவன விஷயங்களையும் போனில் பல பேரிடம் பேசினான். பேசும் பொழுது ஸ்பீக்கரை ஆனில் வைத்துவிடுவான். ஏனெனில் அதை பிடித்துக்கொண்டே வேறு பைலையோ இல்லையென்றால் கம்யூட்டரில் வேறு வேலையோ பார்க்க அவனுக்கு சிரமமாக இருக்கும். சிறிது நேரம் அலுவல் வேலைகளைப் பார்த்து விட்டு மணியைப் பார்த்தான். ‘11.30 மணி. இனி காபி போட்டு குடித்து விட்டு தேனரசிக்கும் கொடுத்து விட்டு மதிய சமையலை கவனித்தால் சரியாக இருக்கும்' என எண்ணியபடி எழுந்தான் ரிஷி.
ரிஷி கொடுத்த காபியைக் குடித்துவிட்டு பழையபடி சுருண்டு படுத்தாள் தேனரசி. ரிஷி அதை கவனித்தபடி வந்து விட்டாலும் இதுவும் அவனுக்கு சரியாகப் படவில்லை. ‘சரி! இன்னும் இரண்டு நாட்கள் பொறுப்போம். கண்டிப்பாய் வாய் திறந்து பேசாமலா போய்விடுவாள்' என எண்ணிய படி அவன் அன்று தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.
தேனரசி ‘தான் எப்படியாவது தற்கொலை செய்துகொள்ள வேண்டும்.’ என எண்ணினாள். அந்த அறையின் அமைப்பைக் கவனித்தவள் இவனுக்கு பல பேரைக் கடத்துவது தொழிலாக இருக்கலாம் என யூகித்தாள். ரிஷி என்ன செய்வான் என்று அவளுக்கும் புரியவில்லை. இரண்டு நாட்களாய் எப்பொழுதும் அருகில் இருந்து கோபமூட்டிக் கொண்டிருப்பவன் இப்பொழுதெல்லாம் அவ்வாறில்லாமல் வெளியே அதிக நேரம் செலவளித்தான். அவன் வெளியே என்ன செய்கிறான் என்பது அவளுக்குத் தெரியவில்லை. ‘ஒருவேளை தன்னை வாழ்நாள் முழுவதும் இப்படியே வைத்துவிடுவானோ!’ என்று பயந்தாள்.
Comments
Post a Comment