உன்னை விடமாட்டேன் – பகுதி 46
"அண்ணா! இன்னும் நான்கு நாட்களில் வந்துவிடுவாய் தானே?“
“இல்லை, இல்லை! இன்னும் ஆறு நாட்களாகும்.. சரியாகக் கணக்குப் போடத் தெரியவில்லையே உனக்கு.”
“அண்ணா விளையாடாதே! உனக்கும் வேண்டாம். எனக்கும் வேண்டாம். ஐந்து நாட்கள். சரியா! அதை விடு. தினமும் போனில் பேசியவன், திடீரென்று கட் செய்தாயே! காட்டில் அன்று அங்கு என்ன பிரச்சினை சொல்”
“நான் தான் வீட்டிற்கு வந்து சொல்கிறேன் என்றேனே!”
“உனக்கு நேரம் கொடுத்தால் பொய்க்கதை தயார் செய்துவிடுவாய். திடீரென்று ஏன் காட்டில் இருந்து வந்து விட்டாய். அவர்கள் அனைவரும் நலம்தானே?“
“ஏன் திடீரென்று அப்படி கேட்கிறாய்?”
“அண்ணா! நான் தான் கேள்வி கேட்பேன் நீதான் பதில் சொல்லவேண்டும் புரிந்ததா?
“ம். எல்லோரும் நலம். அப்பாவுக்கு ...” என்றபடி வேறு கதைக்கு தாவ முயன்றான்
“அண்ணா! வேறு கதை வேண்டாம்.”
“சரி! சரி! சூர்யா எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அப்புறம் பேசுகிறேன். சரியா?”
“அண்ணா! போனை வைத்து விடாதே| அப்புறம் இங்கு வரும் போது உன்னிடம் பேசவே மாட்டேன்.”
“சரி! சரி! சீக்கிரம் சொல்.”
“அதெல்லாம் முடியாது. நான் முக்கியமா? ஆபிஸ் முக்கியமா?”
“நீதாம்மா முக்கியம். நீ தெய்வமாயிற்றே.”
“பின்ன இல்லியா? நான் உன்னை அப்பாகிட்ட இருந்து காப்பாத்தணும் தானே. ஜாக்கிரதை. எனக்கு அந்த கைவினைப் பொருட்களை இரண்டு இரண்டாய் எடுத்து வந்தாயா?”
‘ஐயையோ!’ என்று தனக்குள் மென்மையாய் சொல்லிவிட்டு, தன் கைகளை அசைத்தவன் அவளிடம் “அவர்கள் அதையெல்லாம் வெளியாட்களுக்குத் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்.”
“இல்லியே! தாத்தா நீ வீட்டுக்கு கிளம்பும்போது எடுத்துட்டுப் போகச்சொன்னதா சொன்னியே!”
“சூர்யகலா! முக்கியமான போன் கால் ஒன்னு வந்திருக்கு. அப்புறமா கண்டிப்பா பேசுறேன். சரியா!“.
“ஏய்! பிராடு அண்ணா!” என அவளின் குரல் கேட்க, ஆனாலும் போனை வைத்து விட்டு ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டான். பிறகு, போனில் பிஸிடோனை செட் செய்துவிட்டு, தேனரசியைப் பார்த்தால் அவள் முகம் பேயறைந்தது போல் இருந்தது.
”என்ன?” என்றான் ரிஷி. ”நீ உன் தங்கையிடம்தான் மரத்தில் ஏறி பேசினாயா?”என்று கேட்டாள் தேனரசி. அவன் சிரித்துக்கொண்டே, “பரவாயில்லையே நீ கடைசியில் வெற்றிகரமாக கண்டுபிடித்துவிட்டாயே” என்று வியந்தான். தன்னைக் கிண்டல் செய்கிறான் எனப் புரிந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் “நான் அடியாட்களுடன் பேசினாய் என்று குற்றம்சாட்டும் போது ஏன் மறுத்துப் பேசவில்லை“ என்றாள்.
“நான் தங்கையிடம் பேசுகிறேன் என்றால் நீ ஆமாம் என்று ஒத்துக் கொண்டு இருப்பாயா? அதையும் பொய்தான் என்று சொல்லியிருப்பாய். அதற்கு நான் ஏன் சொல்ல வேண்டும்?” இப்போது தேனரசிக்கு மற்றொரு சந்தேகம் வந்தது. அது என்னவென்றால் ரிஷி ஏன் கடத்தினான்? என்று. கண்டிப்பாக மலைத்தேனுக்காக தன்னைக் கடத்தவில்லை என்றால் எதற்காக கடத்தினான்? ரிஷியிடம், “ஏன் என்னை கடத்தி வந்தாய்?” என்று கேட்டாள்
ரிஷிக்கு ‘அப்பாடியோ’ என்று இருந்தது. எவ்வளவு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் இந்த கேள்விக்காக. தன் அலுவல் வேலை அனைத்தையும் நிறுத்திவிட்டான். பிறகு அவளிடம் நிதானமாக “நான் முட்டை சாப்பிட முயன்றதாக அனைவரையும் கூப்பிட்டு ஏன் கூறினாய்” என்று கேட்டான். தேனரசிக்கு ஏன் இதை கேட்கிறான் என்று புரியவில்லை “நீ ஏன் என்னை கடத்தி வந்தாய் என்று கேட்கிறேன். இப்பொழுது அந்தக் கதை முக்கியமா?” என்று கேட்டாள் தேனரசி.
“ஆமாம் ஏன் கடத்தி வந்தேன் என்று உனக்கு தெரிய வேண்டாமா? இப்பொழுது சொல். ஏன் நான் முட்டை சாப்பிட முயன்றதாக அனைவரையும் கூப்பிட்டு அவ்வாறு கூறினாய்.? நான் முட்டை சாப்பிட முயன்றதை நீ பார்த்தாயா?” என்று ரிஷி கேட்டான்.
அதற்கு தேனரசி, “நீ மிளகு உப்பு எடுத்தது உண்மைதானே? என்று கேட்டாள். ‘ஆமாம்’ என ஒத்துக்கொண்டான் ரிஷி. “முட்டை சாப்பிடுவதற்கு இல்லை என்றால் எதற்காக எடுத்தாய்?” என்றாள் தேனரசி. ரிஷி, “இந்தக் கேள்வியை நீ எப்பொழுது கேட்டிருக்க வேண்டும் இப்பொழுது கேட்டு என்ன பயன்?” என்று கேட்டான் ரிஷி.
“நீ முட்டை சாப்பிடத்தான் உப்பையும், மிளகையும் எடுத்தாய் என்பதில் எனக்குத்தான் சந்தேகமே இல்லையே! நான் எப்படி கேட்பேன்.”
“ஓ! நீ நினைப்பதெல்லாம் உண்மையாகி விடுமா? நான் மலையரசன் உணவில் அவனுக்கு தெரியாமல் கலந்து விட அதை பொடி செய்ய நினைத்தேன். அவனை சாப்பிட விடாமல் செய்து விட வேண்டும் என்று திட்டம் போட்டேன்.”
“நீயும் இந்த விஷயத்தை அப்போதே கூறியிருக்கலாம் அல்லவா! இப்பொழுது கூறி என்ன பயன்?” .பதிலுக்கு பதில் கேட்டாள் தேனரசி. ஒரு நிமிடம் ஆடிப் போனான் ரிஷி.
ஆனாலும் சமாளித்துக் கொண்டு, “நான் ஏன் சொல்ல வேண்டும்? நீ என்னிடம் என்ன என்று கூட கேட்காமல் அபாண்டமாக பழி போட்டு அனைவரையும் கூப்பிட்டாய் அல்லவா!” என்றான் ரிஷி.
“இதென்ன கேள்வி? உன் மேல் தவறில்லை என்பதை நிரூபிப்பதற்காக தான். சரி! அதை விடு! என்னை எதற்கு கடத்தினாய்?“ தேனரசி சர்வ சுலபமாய் சொல்லிவிட்டாள். கேள்வியும் கேட்டாள்.
இப்பொழுது ரிஷிக்கு கோபம் வந்தது. “நீ வீண்பழி போடுவாய். நான் தவறு செய்யவில்லை என்று கெஞ்சி கேட்க வேண்டுமா?” சீறினான் ரிஷி.
தேனரசிக்கு ஒன்றும் புரியவில்லை. தவறு செய்யவில்லை என்றால் அதை சொல்வதில் என்ன இருக்கிறது. “நான் வீணாக பழி போட்டேனா? நீ அனுப்பிய ஆட்கள் செய்வதைத் தானே நீயும் செய்வாய் என்றுதான் நினைத்தேன் இப்பொழுது கூட உண்மை என்ன என்று யாருக்குத் தெரியும்?” என்று கூறினாள். தேனரசி சலிக்காமல்.
“ஆக இப்பொழுதும் என்னை நம்பவில்லை. அப்படித்தானே?”
“ஷ்...அப்பா...என்னை ஏன் கடத்தி வந்தாய் என்று கேட்டேன். இந்தக் கதை எனக்கெதற்கு நீ நல்லவனோ கெட்டவனோ எனக்குத் தேவையில்லை. நான் எங்களிடத்தில் நீ இருக்கும்போது உன்னைக் கெட்டவன் என நினைத்து விரட்ட முயன்றேன். இப்பொழுதும் நீ எப்படிப்பட்டவன் என்று எனக்குத் தெரியாது. தெரியவேண்டிய அவசியம் இல்லை. நீ என்னை எதற்குக் கடத்திவந்தாய்? அதைக் கூறு.”
“ஓ...அப்படியா..அப்படி என்றால் நான் ஏன் கடத்தி வந்தேன் என்பதும் உனக்கு அவசியம் இல்லை.”
“அதெப்படி நீ கடத்தி வந்தது என்னை. கண்டிப்பாக நான் கேட்பேன்.”
“நீ என்னைக் கெட்டவன் என்று கருதியதால் பாதிக்கப்பட்டவன் நான். நானும் கண்டிப்பாகக் கேட்பேன்.”
“உன்னை யார் எங்கள் இடத்திற்கு வரச்சொன்னது?””
“ஓ...அந்த இடம் உனக்கே உனக்கோ?”
“ஆமாம் அந்த இடம் எங்களுக்கே எங்களுக்குத்தான்.”
“எனக்கே எனக்குத் தான் என்று சொல். எல்லாரையும் ஏன் கூட்டுசேர்க்கிறாய். நீ அந்த இடத்தில் வசிக்கத் தகுதி இல்லாதவள்.”
“அதனால் என்னைக் கடத்தினாயா?”
“இல்லை. நான் உன்னை தொட்டு இழுத்ததாக நாடகம் ஆடினாயே! என் மேல் அபாண்டமாகப் பழி சுமத்தினாயே! எதற்காக? என் மேல் உள்ள ஆசைதானே! அதனால்தான் உன்னைக் கடத்தி உன் ஆசையைத் தீர்த்து வைத்தேன்.” என்றான் வேண்டுமென்றே ரிஷி
அதைக் கேட்டு முகம் சுளித்தாள் தேனரசி. சுளித்தாலும், “சரி! ஆசையைத் தீர்த்துவிட்டாயல்லவா? என்னை விடுவித்துவிடு.” என்றாள்.
ரிஷிக்கு சிரிப்பு வந்தது. ‘தப்பிப்பதற்கு எதையாவது பேசுகிறாயா?’ என மனதில் நினைத்துக்கொண்டு, ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “உன் ஆசைதீர்ந்தது போல எனக்குத் தெரியவில்லையே” என்றான். தேனரசிக்கு பற்றிக்கொண்டுவந்தது. “உன்னை , நீ எங்களிடத்தி.ற்கு, வந்த அன்றிலிருந்தே பிடிக்கவில்லை. உன் மேல் எனக்கு ஆசையா? விட்டு விடு என்னை.” என்றாள்.
“சரி நான் உன்னைவிட்டு விட்டால் என்ன செய்வாய்?”
“அது உனக்குத் தேவையில்லாத விஷயம்.”
“என் மேல் ஆசை வைத்தவளை எப்படி விட்டுவிட முடியும்.” வேண்டுமென்றே சீண்டினான் ரிஷி.
Comments
Post a Comment