உன்னை விடமாட்டேன் – பகுதி 49

 "என்ன செய்தோம்“ என யோசித்தாள். கடைசியாக “நான் தற்கொலைக்கு முயன்றேனே அதுதான் காரணமாக இருக்குமோ? அவனிடம் நாளை கண்டிப்பாக கேட்க வேண்டும்.” என்று நினைத்தாள்.

அடுத்த நாள் அதை மறக்காமல் அவனிடம் கேட்டாள். அவனும் ‘ஆமாம்’ என்று ஒத்துக்கொண்டான். தேனரசி தற்கொலைக்கு எந்த முயற்சியும் செய்யாமல் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாள். ஆனாலும் அன்று இரவு அவன் அவளிடம் நேற்று இரவு நடந்ததை தொடர்ந்தான் இம்முறை அவளுக்கு கோபம் வந்தது “நான் தான் தற்கொலைக்கு முயற்சியே செய்யவில்லையே. ஏன் என்னிடம் இவ்வாறு நடந்து கொள்கிறாய்?” என்று கேட்டாள். அவன் கூறினான் “உன்னுடைய கொள்கை பிடிப்பு பற்றி எனக்கு சந்தேகம் வந்துவிட்டதால் நான் அதைச் சோதனை செய்யப்போவதாக நேற்றைய இரவே கூறினேனே.” என்றான். “அது என்ன” என்று கேட்டாள் தேனரசி. “நாளை கூறுகிறேன்” என்று சொல்லிச் சென்று விட்டான். அவளுக்கு ஏகக் கடுப்பாயிற்று.

ரிஷி தன் அறையில் படுத்துக் கொண்டு தேனரசியின் மனோநிலையைப் பற்றியும், தன் வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்தான் இவளை மணந்து கொள்ள முடியுமா? மணந்து கொண்டால் தன்னுடைய செல்வாக்கு பெருமளவில் சரியும். மணந்து கொள்ளாவிடில் இவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வாள். தாயாருக்கு மறைமுக வாழ்க்கையை நடத்துவது பிடிக்காத ஒன்று. சிறுவயதிலேயே இதைப்பற்றி தனக்கு போதித்து வளர்த்திருக்கிறார். இப்பொழுது தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார். என்ன செய்வது? சரியாக வம்பில் மாட்டிக் கொண்டேன்.

சூர்யகலா பள்ளி படிக்கும் வயதிலேயே, ரிஷியின் தாயார் அவளுக்கு பணக்கார வட்டத்தில் நல்ல வரன் அமைவது இயலாத காரியம். பணக்காரப் பிள்ளைகள் எப்படி எப்படியோ இருக்கிறார்கள் அதனால் நடுத்தர குடும்பமாக இருந்தாலும் சரி ஒழுக்கமானவன் தான் அவளுக்கு மணாளனாக வரவேண்டும் என்று தந்தையிடம் கூறியிருந்தார். எனவே, நடுத்தர குடும்பத்தில் நல்ல குணசாலியாக, ஊக்கமாய் இருக்கக்கூடிய வரன்களை தேர்ந்தெடுத்து தங்களுடைய தொழில் நிறுவனத்தில் அவர்களை சேர்த்துவிட்டு அவர்களை முன்னேற வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் மிகத் திறமைசாலியாகவும், உத்தமனாகவும் இருக்கக்கூடியவனை பெரிய பொறுப்பையும், பதவியையும் கொடுத்து சூர்யகலாவிற்கு மணம் முடித்து வைப்பது என்று முடிவெடுத்திருந்தார்கள்.

அதேபோல் ரிஷிக்கும் ஏழை குடும்பத்து பெண்ணாக இருந்தாலும் பார்க்கலாம் என்றதற்கு தந்தை மறுத்து விட்டார். ‘இல்லை அவன் இந்தத் தொழில் நிறுவனத்தை ஏற்று நடத்த போகிறவன். அவனுடைய செல்வாக்கு உயர்ந்த நிலையிலேயே இருக்க வேண்டுமென்றால் பெண் பணக்காரியாகத்தான் இருக்க வேண்டும்’ என்று தந்தை அதற்கு மட்டும் மறுத்துவிட்டார். “அவனுக்கு என்ன ஆண்பிள்ளை. அவனைப் பற்றி நீ கவலைப் படத் தேவையில்லை” என்று கூறிவிட்டார்.

அதை ரிஷி இப்போது நினைத்துப் பார்த்தான். ‘வேறு வழியில்லை. இவளை மணந்து கொண்டால் தாயாரின் சம்மதம் நிச்சயம் கிடைத்துவிடும். தந்தையாரின் சம்மதம் கிடைப்பது கடினம். ஆனால் அதற்கு முன்பு இவளை நம் தகுதிக்கு ஏற்றவாறு படிக்கவைத்து மேல்தட்டு நாகரீக பழக்கவழக்கங்களைச் சொல்லித்தர வேண்டும்‘ என்று முடிவெடுத்து விட்டான்.

அடுத்த நாள் தேனரசி, ரிஷி அந்த அறைக்குள் நுழைந்ததுமே, “என்ன கொள்கை பிடிப்பு” என்று கேட்க ஆரம்பித்து விட்டாள். “எல்லா வேலைகளையும் முடித்த பின்தான் பேச வேண்டும் இப்பொழுதே பேசினால் வேலை கெட்டுவிடும்” என்று கூறினான். ஒன்றை கவனித்தபோது அவனிடம் எந்த வேலையானாலும் ஒரு ஒழுங்கு முறை காணப்பட்டது. காலை வேலைகளை முடித்த பின்பும் அலுவல் வேலை பிறகு சமையல் வேலை மீண்டும் அலுவல் வேலை என பிஸியாகதான் இருந்தான்.

தன் பரபரப்பான வேலையின் நடுவிலே சில எழுத்துக்களை எழுதும்படி வற்புறுத்தினான். தேனரசிக்கு எதுவும் பிடிக்கவில்லை. ஆனால் அவன் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் என்ன செய்வானோ? என்ற பயம் இருந்தது. பிடிக்காமல் செய்ததால் படிக்கும் வேலை கடினமாக இருந்தது. ரிஷிக்கு கோபம் தான் வந்தது ‘முட்டாள் முட்டாள்’ என்று கூற ஆரம்பித்தான். தன்னை வைத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்பது அவளுக்கு இன்னும் புரியவில்லை. “என்னை வைத்து என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டாலும் அவனுக்கு கோபம் தான் வந்தது. ஆகமொத்தத்தில் அவன் வேலை கெட்டால் அவனுக்குக் கோபம் வந்தது. கொள்கைப் பிடிப்பை பற்றி கேட்டால் நீ இந்த 12 எழுத்துக்களையும் இன்றைக்குள் படித்தால்தான் கூறுவேன் என்றான் கோபமாக.

அவள் தன் இருப்பிடத்தில் விளையாட்டாய் தாத்தாவிடம் கற்றுக்கொண்ட தமிழ்மொழியின் எழுத்தை சற்று ஒத்து இருந்ததால் அவளால் அதை முடிக்க முடிந்தது. இரண்டும் தமிழ்மொழிதான் என்பதும் ஆனால் சற்று வேறுபடுகிறது என்பதையும் அவளால் உணர முடிந்தது. ஆனால் அதை அவள் காண்பித்துக் கொள்ளவில்லை. தனக்கு தெரியும் என்றால் இன்னும் எழுதப் படிக்கச் சொல்வானோ என்ற பயமும் இருந்தது. அவளுக்கு படிப்பில் விருப்பம் தான். ஆனால் நிச்சயம் இப்பொழுதல்ல. தன் வாழ்க்கையை எப்படியாவது முடித்துக்கொள்ள வேண்டும். என்பதில்தான் இப்பொழுது உறுதி இருந்தது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31