உன்னை விடமாட்டேன் – பகுதி 53

 ரிஷியின் கார் காலையிலேயே வருவதைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டைத் திறந்தார் செக்யூரிட்டி. அவரிடம் காரை சற்று நிறுத்தி, “பரத் யாராவது கொண்டை, வைத்துக் கொண்டு, காது, மூக்கில் எதையாவது மாட்டிகொண்டு வித்தியாசமாகத் திரிந்தால் என்னிடம் கண்டிப்பாக தகவல் சொல்லுங்கள்.” என்றான் ரிஷி. “ஏதாவது பிரச்சனையா? சார்.” என்றார் செக்யூரிட்டி.

“அதெல்லாம் ஒன்றுமில்லை சிறு எச்சரிக்கை நடவடிக்கைதான். நம்ம ஹெட் ஆபிஸ் செக்யூரிட்டிகிட்டேயும் இன்பார்ம் பண்ணுங்க” என்றான் ரிஷி. “சரி சார்.” என்றார் செக்யூரிட்டி.

“காட்டில் என்ன ஆயிற்று. திடீரென கட் செய்தாயே? என்ன விஷயம்?” என்று மறக்காமல் உள்ளே வந்த அண்ணனிடம் கேட்டாள் சூர்யகலா.. “அதுவா?. முக்கிய வேலை ஒன்று காவல்துறையில் இருந்து வந்தது. அதனால் கட் செய்துவிட்டு பேசினேன். அது விஷயமாய் காட்டைவிட்டு திடீரென்று வெளியேற வேண்டியதாயிற்று. அது விஷயமாய் தினமும் செல்லவேண்டியுள்ளது. இரவு கூட நம் வீட்டில் தங்க முடியாது. ஆபிஸ் வேலை என்று அப்பாவிடம் சமாளிக்கிறேன். நீயும் கை கொடு.”

“என்ன வேலை அண்ணா!”

 அவன் அளக்க ஆரம்பித்தான். இவள் கோணி பிடித்தாலும் நடுவில் கேள்வி மேல் கேள்வி கேட்டாள். அவன்தான் ஏற்கனவே தங்கையை சமாளிக்க கதையை தயாரித்து, அவள் கேட்கும் கேள்வியை ஊகித்து அதற்கும் பதில் வைத்திருந்தானே. சமாளித்துவிட்டான். “நான் அப்பாவிடம் பேசும்போது மட்டும் காலைவாரிவிட்டு விடாதே!” கெஞ்சினான்.

“சரி! முயற்சி செய்கிறேன். நீ செய்யும் கோல்மால் அப்பாவுக்கு தெரியாது என்று நினைக்கிறாயா? தெரியும். உன்னை உன் வழியில் விட்டுப் பிடிக்க எண்ணுகிறார். ஷ்.... அப்பா ..வருகிறார்.”

“என்னடா. எங்கு தான் இவ்வளவு நாள் சென்றாய்? அதுவும் நடுவில் ஒரு போன் கூட பண்ணாமல்” அப்பா கேட்டார் அதட்டியபடி.

“அப்பா! இத்தனை நாள் பார்க்காமல் பார்க்கிறீர்கள். என்னப்பா நீங்கள்! என் மேல் பாசமே இல்லை.“

“மகனே!. இந்த வசனத்தை அம்மாவோடு நிறுத்திக் கொள். எங்கே சென்றாய்?”

“முதலில் மும்பையில் இருக்கும் மாதவன் வீட்டிற்கு சென்றேன். பின்பு மாதவன் குடும்பத்தோடு நானும் டூர் சென்றேன். அங்கிருந்து மலைத்தேன் விஷயமாக திருநெல்வேலியில் உள்ள கிளை நிறுவனத்திற்கு சென்றேன். எல்லாம் ஆபிஸ் விஷயமாகத் தான். நாம் மலைத் தேனுக்காக ஆள் மேல் அனுப்பினோமே. நீங்கள் வேலையைவிட்டு சிலரை நீக்க வேண்டுமானால் ஆதாரம் வேண்டும். என்றீர்களே! அது விஷயமாய் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வந்திருக்கிறேன்.”

“நீ முதலாளிடா! கீழே இறங்கி நீ பார்க்க வேண்டாம். ஆட்கள் மூலமாகத்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நடுவில் ஒரு போன்....”

“அப்பா உடையவன் பார்க்காவிடில் ஒரு முழம் கட்டை என்பீர்களே! அதுமட்டுமல்ல. அனுப்பிய.....”

"அடடடடா ஆபீஸ் பேச்செல்லாம் வீட்டுல கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது. எல்லாரும் சாப்பிட டைனிங் ஹாலுக்கு வாங்க. டேய்! நீ என்னடா வீட்டிற்குள் வரும் போதே கிளம்பிக் கொண்டு வந்திருக்கிறாய். நீ ஆபிஸிற்கு இன்று போக வேண்டாம். வீட்டில் இரு.” என்றாள் ரிஷியின் தாயார்.

“ஆமாம். ஆமாம். பாதி நாள் அவன் வெளியே சென்றுவிடுவான். மீதிநாள் நீ வீட்டிலே வைத்துக் கொள். தொழில் ஓஹோவென்று வளர்ந்துவிடும்”

“உங்களுக்கு இவனை பெற்றுக் கொடுக்கும்போதே தொழிலுக்கு தத்து கொடுத்ததை மறந்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். ஏண்டா பூரி கிழங்கு குருமா எல்லாம் எப்படி இருக்கிறது? ஏண்டா இப்படி உன் அப்பாவிற்கு மேல் வேக வேகமாய் சாப்பிடுகிறாய். இப்போது தான் மணி 9 ஆகப்போகிறது.

“மணி 9 ஆக போறது. சீக்கிரம்.” என்றார் அப்பா வேண்டுமென்றே. ரிஷியின் தாயார் அவரை பத்திரகாளியாக நின்று பார்த்தார். “சரி!. சரி! உன் அம்மா என்னுடன் சண்டைக்கு வரப்போகிறாள். நீ நிதானமாக வா! சிங்கப்பூர் செல்லவேண்டிய விஷயமாய் பேச வேண்டியுள்ளது கண்டிப்பாக வா!” என்று தந்தை கிளம்பிச் சென்றார்.

“என்னடா இது! வந்ததும், வராததுமாக ஆபிஸிற்கு கிளம்பிக் கொண்டு நிற்கிறாய்.” என்ற தாயை சமாதானப்படுத்தி விட்டு. தங்கையிடம் தான் கொண்டுவந்த பையைக் கொடுத்தான்.. சூர்யகலாவிற்கு ஆச்சர்யம். அண்ணன் கொண்டுவந்து கொடுத்த விளையாட்டு சாமான்களைப் பார்த்து. “என்ன நுணுக்கமான வேலைப்பாடு அண்ணா. இன்னொரு செட் எடுத்து வரவில்லையா? நான் எப்படி அண்ணா பிரித்து இதைப்போல் செய்துபார்ப்பது. பணத்தைக் கொடுத்தாவது இன்னொரு செட் வாங்கி வருவது தானே?”

“நான்தான் சொன்னேனே! அவர்கள் பணத்திற்கு மயங்கமாட்டார்கள் என்று”

“சரி! நீ திரும்பவும் காட்டிற்கு சென்று இதே போல இன்னொரு செட் வாங்கி வா!”

“ஏண்டி! உனக்கு உதை வேணுமா? உனக்கு வேணும்னா நீ காட்டுக்குப்போ என் பிள்ளையை வந்ததும், வராமல் திரும்பவும் காட்டிற்கு போகச் சொல்கிறாயா? ஆனா ரிஷி ரொம்ப ரொம்ப அருமையா இருக்குடா.” அந்த விளையாட்டு சாமான்களை கையில் வைத்து பார்த்தபடி கூறினாள் அவனது தாயார்.

“அண்ணா' யாரையாவது எனக்குக் கற்றுக்கொடுக்க கூட்டிக் கொண்டுவரச் சொன்னேன். அவர்கள் அப்படியெல்லாம் வர மாட்டார்கள் என்று கூறிவிட்டாய். ஒரு நாள் என்னை அங்கு கூட்டிச்செல்கிறாயா? நானாவது சென்று கற்றுக்கொள்கிறேன் அம்மா சொன்னபடி.”

“முதல்ல அங்க போய் விட்டுடுடா'” என்றார் தாயார்

“சூர்யா குட்டி. அது ரொம்ப கடினமான வழி. போகவே முடியாது. நீ பூபோல மென்மையானவள். நான் நிச்சயமா வேற ஏற்பாடு பண்றேன்.சரியா!” என்றான் ரிஷி.

“அண்ணன்னா அண்ணன் தான்” சிலாகித்தாள் தங்கை. அவளே தொடர்ந்து “ஐயோ! காலேஜுக்கு லேட்டாச்சு அண்ணா! டிரைவர் சீக்கிரம் காரை எடுங்க” ஓடிப்போய் காரில் ஏறினாள். அவளை கையசைத்து அனுப்பிவிட்டு தாயாரிடம் சற்று நேரம் பேசிவிட்டு கிளம்பினான் ரிஷி.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31