உன்னை விடமாட்டேன் – பகுதி 54
மலையரசனுக்கு இருப்பு கொள்ளவில்லை. காலையில் 11 மணி வரை பொறுக்க முடியாமல் 10 மணிக்கே செக்யூரிட்டியிடம் வந்து நின்றான். காலையிலேயே சின்ன முதலாளி வந்து விட்டார். பிஸியாக உள்ளார் என்று நினைக்கிறேன். உன் விஷயமாய் இன்று எதுவும் பேசமுடியாது என்று நினைக்கிறேன். நீ சற்று பொறு. நானும் அவருடன் வேறுவிஷயமாக பேசவேண்டியுள்ளது.” என்று ஓர் ஓரமாக நிற்கவைத்துவிட்டார். மலையரசன், ரிஷி பங்களாவை விட்டு காரில் வெளியே வருவதற்காக இதய படபடப்புடன் மறைவில் காத்துக் கொண்டிருந்தான். .
சீறிப்பாய்ந்த காரில் ரிஷியின் தங்கை எப்பொழுதும்போல் செல்வது தெரிந்தது. ஏகக் கடுப்புடன் மலையரசன் ரிஷியின் காரை எதிர்நோக்கியிருந்தான். அரை மணிநேரம் கடந்த பின் ரிஷியின் கார் வந்தது. ரிஷிக்காக கேட்டைத் திறந்த செக்யூரிட்டி, ”சார்! நீங்கள் சொன்னமாதிரி கொண்டை, கம்மல் மூக்குத்தி என போட்டுக் கொண்டு ஹெட் ஆபிஸின் கேட்டிற்கு பத்து நாட்களுக்கு முன்பு யாரோ இருவர் வந்திருந்தார்களாம். அவர்களை செக்யூரிட்டிகள் விரட்டிவிட்டனராம். அவர்கள் வந்திருந்த சிசிடிவி காமிரா பதிவை உங்களுக்கு எடுத்து வைக்கச் சொல்லியிருக்கிறேன் சார்” என்றார்.
ரிஷி “அப்படியா? சரி, பரத்! நான் அங்கு சென்று பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் இங்கும் யாராவது கொண்டை, வைத்துக் கொண்டு மூக்கில் வளையம் காதில் கடுக்கன் போட்டு வந்தால் உடனடியாக எனக்குத் தகவல் கொடுங்கள் அவர்கள் எங்கு தங்கியுள்ளார்கள் என கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்யுங்கள். என் உத்தரவிற்காக காத்திருக்க வேண்டாம். அவர்களின் சிறுநடவடிக்கையும் கண்டிப்பாக எனக்குத் தெரிந்ததாகவேண்டும். நான் சொன்ன விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, காரை எடுக்கும் படி டிரைவருக்கு உத்தரவிட கார் பறந்தது.
மறைவில் இருந்த மலையரசன் மலைத்துவிட்டான். “அடப்பாவி!” என மனதிற்குள் பொறுமினான். ஆனாலும் தளர்ந்து விடாமல் முன்பு செக்யூரிட்டி கூறிய காட்டு பங்களாவைப் பற்றி சந்தேகப்பட்டுவிடாமல் வேலைக்காக கேட்பதுபோல் விசாரித்தான். அதைப் பற்றி ஓரளவு விபரம் கூறியவர் “இரண்டு நாள் கழித்துவா. சார் சற்று சாவகாசமாக இருப்பார். அப்போது கண்டிப்பாய் உனக்கு வேலை வாங்கித் தருகிறேன்.” என்றும் கருணையோடு பேசினார். தேவையான தகவலைக் கறந்துவிட்டு அவருக்கு நன்றி கூறி விட்டு நகர்ந்தான் மலையரசன்.
மாயவன், தென்னரசு இருவரிடமும் நடந்ததைக் கூறி, “இனி நீங்கள் இங்கு இருப்பது ஆபத்து. நான் ஒரு செல்போனை வாங்கித் தருகிறேன். வேறு வழியில்லை. தாத்தாவுக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள் நான் அனாவசியமாக போனை போட மாட்டேன்“ என்றான். பிறகு சுனிலின் உதவியுடன் செல்போனை வாங்கினான். அதை சுனிலுக்கே தெரியாமல் அவர்களுக்குக் கொடுத்து, “அத்தியாவசியத் தேவை வரும் பொழுது உங்களை இந்த போனில் அழைப்பேன். அப்போது பச்சை பட்டனை அழுத்தினால் நான் பேசுவது உங்களுக்கு கேட்கும்” என்று கூறி அதை உபயோகிக்க கற்றுக்கொடுத்தான். தங்கள் இருப்பிடத்திற்கே அவர்களை மீண்டும் அனுப்பி விட்டான்.
கடையை இந்த இடத்தில் போட்டால் ரிஷியின் கண்ணில் பட்டு ஆபத்து ஏற்படும். வேறு இடம் தொலைவில் பார்க்க வேண்டும். மனதில் மட மடவென திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.
சுனிலிடம், “ரிஷியை பின் தொடர்ந்து அவன் செல்லும் இடங்களை உளவு பார்க்க வேண்டும்“ என்றான் மலையரசன். “என்னை வம்பில் மாட்டி வைக்க முடிவு செய்து விட்டாயா? மரச்சிலையை மறந்துவிடு“ என்றான் சுனில். அவனிடம் மலையரசன் பணத்தைக் காட்டினான். பணத்தாசை யாரை விட்டது. அதுமட்டுமல்ல மலையரசன் பணத்தை அதிகம் தருவதால் அது தங்க சிலையாக இருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது ‘கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே தீரவேண்டும். ‘என்ன சிலை?‘ என்று தெரியாமலா போய்விடும்‘ என்று சுனில் எண்ணிக்கொண்டான்.
ரிஷி, தன் தந்தை துப்பறியும் நிறுவன நண்பர் உதவியுடன், தான் இரவு எங்கே செல்கிறோம் என கண்காணிக்கப்படுகிறோம் என்பதைத் தெரிந்துகொண்டு வேறு ஒரு நண்பரின் இணை நிறுவனத்தில் காரை நிறுத்திவிட்டு, அங்கு பணிபுரிவதாய் கணக்கு காண்பித்தான். ஆனால், எல்லா பைலையும் எடுத்துக்கொண்டு வேறு ஒரு காரில் காட்டு பங்களாவிற்கு சென்றான். அங்கு வைத்து எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக பார்த்தான். மிகவும் எச்சரிக்கையாகவும் இருந்தான். உணமையில் தொழில்நிறுவன வேலைகள் பெருமளவு நடந்ததால் தந்தையும் கண்காணிப்பதை விடுத்தார்.
Comments
Post a Comment