உன்னை விடமாட்டேன் – பகுதி 56
ரிஷி ஒரு நாள் மருத்துவர் என ஒருவனைக் கூட்டிவந்தான். தேனரசி எந்த மருத்துவ சோதனைக்கும் ஒத்துழைக்கவில்லை. ஆனால் மருத்துவர் தேனரசியை ஒரு பொருட்டாக மதிக்காமல் தன் வேலையை செய்தார். ரிஷியுடன் ஆங்கிலத்தில் நன்கு பேசினார். அவனுடன் பேசியபடி வெளியே சென்றார். அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆனால் சற்றுநேரத்திலேயே அவர் உள்ளே நுழைய முற்பட ரிஷி அவரைத் தடுத்தான். “டேய்! நீ செய்யும் இந்த வேலையை எல்லோரிடமும் சொல்லி விடுவேன் என்று தமிழில் மிரட்டினார். வேறுவழியின்றி ரிஷி வழி விட்டான்.
உள்ளே வந்தவன் தேனரசியிடம், “சிஸ்டர் நீங்க அவனோட ஒய்ஃப் அப்படின்னு எனக்கு தெரியாது. என்னை மன்னிச்சிடுங்க. சிஸ்டர்.” என்றான். ஒய்ஃப் என ஆங்கிலத்தைக் கலந்து பேசினாலும் அவள் புரிந்து கொண்டாள் தன்னை ரிஷியின் மனைவி என்கிறானே! ரிஷி அப்படியா சொன்னான். அவளுக்கு வியப்பாக இருந்தது. இருந்தாலும் அமைதியாக இருந்தாள். “ஏண்டா இவங்களை இந்த அறையில் வைத்திருக்கிறாய். இவங்க என்ன தீவிரவாதியா? கள்ளக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவங்களா? நானும் ஏதோ சட்டவிரோதமா தப்பு பண்ணவங்கன்னு நினைச்சிட்டேன். சங்கிலியில் இப்போது பிணைக்கவில்லை. ஆனால் சங்கிலியில் பிணைப்பாயா?” உணமையான கோபத்துடனும், கவலையுடனும் ரிஷியை அதட்டினான்.
“ஓ...இது அயோக்கியர்களை சிறை வைக்கிற இடமோ? இவன் போலீஸோ?” ரிஷியைக் கூட மிரட்ட முடியுமா? இவன் அடங்கி போவானா? அதிசயமாக பார்த்தாள். ரிஷி அடங்கித்தான் போனான். “சரிடா! இனி என் அறையிலே வைத்திருக்கிறேன். முன்பு இரவு மட்டும் பிணைப்பேன். இனி அதுவும் இல்லை. சரியா? அவள் தற்கொலைக்கு முயன்றதால்தான் சங்கிலியில் பிணைத்தேன்.” என்றான். சிறிது நேரம் விளையாட்டாய் பேசிக்கொண்டிருந்தவன் ரிஷியை மருந்து வாங்கிவரச்சொல்லி வேண்டுமென்றே வெளியே அனுப்பினான். பிறகு தனியே இருந்த தேனரசியிடம், தன் பெயர் மாயக்கண்ணன் என்றான்.
“நான் உங்களுக்கு அண்ணன் போல. ஏதேனும் பிரச்சினை என்றால் என்னிடம் கூறுங்கள். ரிஷியிடம் சொல்லி சரி செய்கிறேன். ரிஷி உண்மையில் மிகவும் நல்லவன். அவனை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குள் ஏதோ புரிந்துகொள்ளுதல் இல்லை என்றான் ரிஷி. அவனைக் கணவனாக அடைய நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தற்கொலைக்கு அவசியமே இல்லை. அவனுடன் சந்தோஷமாக வாழுங்..” தேனரசியின் முகம் கோபத்தில் சிவக்கவும், ரிஷி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
தனக்கு ஆதரவாய் நண்பன் ஏதோ பேச அவள் கோபப்பட ஆரம்பிக்கிறாள் என புரிந்து கொண்ட ரிஷி நண்பனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து சென்றான். “ஏண்டா பேசிட்டே இருக்கும் போதே இன்டீசண்டா இழுத்துட்டுப் போற.” மாயக்கண்ணன் ரிஷியிடம் சண்டை போட்டபடி சென்றான். அக்காட்சியை வெறித்து பார்த்தவாறு “தாலியே கட்டவில்லை என்ன இது உளறல்? என்ன வாழ்க்கைமுறை?” மனதிற்குள் குமைந்தாள். “சிஸ்டர் அடுத்த முறை வருகிறேன்” என்று அறைவாசலில் நின்று கையாட்டிவிட்டு சென்றான். மருத்துவர் மாயக்கண்ணன். தேனரசி பெயரை யோசித்தாள். 'ஒருவேளை மாயச்சாமி இந்த உருவில் வந்து தன்னுடன் பேசுகிறாரோ நாம் தான் கோபப்பட்டுவிட்டோமோ?’ என்று நினைத்தாள்.
மருத்துவர் வந்து சென்ற பிறகு ரிஷியிடம் நிறைய மாறுதல் தெரிந்தது. வீட்டைச் சுற்றிக் காட்டினான். பங்காளாவிற்கு உள்ளேயே ஒரு தோட்டம் அமைந்திருந்தது. அதில் தேனரசியுடன் உலாவினான். “உன் வயிற்றில் இருக்கும் நம் குழந்தையை நினைத்துப்பார். தயவு செய்து தற்கொலைக்கு எக்காரணம் கொண்டும் முயலாதே!” மிகவும் குழைவாய் பேசினான். தேனரசிக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இருக்காதா பின்னே? அவனுடைய அதட்டலும், மிரட்டலும் காணாமல் போயிற்றே!
தேனரசியின் மனம் சலனப்பட ஆரம்பித்தது. உண்மையில் இவனே நமக்கு கணவனாய் இருந்தால் நன்றாய் இருக்குமே! ரிஷியின் மனைவி என்ற முறையில் அவனிடம் உரிமையாய் வாழலாமே! நடக்குமா? தாலி கட்டாமல் திருட்டு வாழ்க்கை நடத்த தேனரசியின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. “மாலுச்சாமி! உன்னை மாயவன், மாயச் சாமி அப்படின்னும் சொல்லுவோமே! மாயக்கண்ணன் உருவில் வந்தது நீயா? அப்படி என்றால் ரிஷியை என் கழுத்தில் தாலிகட்ட வை” உளமார வேண்டினாள்.
ஒருநாள் இரவு தொலைபேசி அழைத்தது. ரிஷி எழுந்து பேசினான். ரிஷியின் குரலில் பதட்டம் தெரிகிறது. வெளியே சென்று விட்டான். தன்னருகில் படுத்திருந்தவன் இந்த இரவு வேளையில் எங்கு செல்கிறான். புரியாமல் பார்த்தாள். “என்ன பிரச்சினையோ? ரிஷிக்கு ஒன்றும் ஆகக்கூடாது. எல்லாம் நல்லபடியாய் நடக்க வேண்டும்.” வேண்டிக்கொண்டாள், நடப்பது என்னவென்றே தெரியாமல்.
Comments
Post a Comment