உன்னை விடமாட்டேன் – பகுதி 57

 வெளியே வந்த ரிஷியிடம் செக்யூரிட்டி, “சார்! ஆள் என்று தான் நினைக்கிறேன். முதலில் ஏதோ ஒரு மிருகம் என்று நினைத்தோம். ஆனால் காலடித்தடம் ஆள் எனக் காட்டுகிறது. எர்த் இருப்பதால் ஒன்றும் ஆகவில்லை. இல்லை என்றால் ஆள் ஸ்பாட்டிலேயே காலியாக இருப்பான். ‘மலையரசன் வந்துவிட்டானா?’ ரிஷியின் மனம் திடுக்குற்றது. சற்றுநேரம் செக்யூரிட்டியுடன் சேர்ந்து ஆளைத் தேடியவன் பிறகு காவலை அதிகரிக்கும்படியும், எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கூறினான். விடியும் வரை ரிஷி அங்கிருந்து நகரவே இல்லை. அவன் கண் பார்வை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தது.

காட்டில் ரிஷியுடன் விளையாடியது மலையரசனுக்கு உதவிற்று எனக் கூறலாம். ஏனெனில் ரிஷி வந்தால் எப்படித் தேடுவான், எங்கு தேடுவான் என்பது மலையரசனுக்கு அத்துப்படி. அதனால் தப்பிவிட்டான். நடந்து வந்தாலும் இங்கு நுழைவது மிகவும் கடினம். உள்ளே நுழைவதே கடினம் என்றால் பங்களாவிற்குள் நுழைவது எப்படி? இது வேண்டாத வேலை என்று அதுவரை ஆடாமல் அசையாமல் ரிஷி போகும் வரை காத்திருந்தவன் பிறகு மீண்டும் பழைய இடத்திற்கு சென்று விட்டான். தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என எண்ணினான் மலையரசன். உண்மையிலேயே தப்பிக்க மிகவும் சிரமப்பட்டுவிட்டான்.

சுனில் “வெற்றியா?” எனக் கேட்டான். இல்லையென்று கடுப்புடன் பதில் சொன்னான் மலையரசன். பிறகு நடந்தவைகளை ஓரளவு கூறினான். “வேறு ஒரு திட்டம் தீட்ட வேண்டும்“ என்றான். மனதிற்குள் ‘மாலுச்சாமி என் மேல் கருணை இல்லையா? எனக்கு வெற்றி இல்லையா? நான் தாத்தாவின் முகத்தில் எப்படி முழிப்பேன். இங்கு வந்து ஆறாவது மாதம் ஆகப்போகிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வழிகாட்டு‘ என்று மனதார வேண்டிக் கொண்டான்.

அவன் வேண்டுதல் மாலுச்சாமியின் காதில் கேட்டதோ? மலையரசன் அன்று கடை விரித்த இடத்தில் ஒருத்தி வந்தாள். எப்பொழுதும்போல் முகம் பாராமல் விலையை ஏற்றிச் சொன்னான். வந்தவளும் மிகவும் கோபப்பட்டாள் இதையெல்லாம் பார்க்காதவனா மலையரசன். அலட்சியமாக பேசினான். “இஷ்டம்னா வாங்குங்க இல்லன்னா எடத்த காலி பண்ணுங்க.” அவளுக்கு கோபம் வந்தது. “இது திருநெல்வேலியில் உள்ள காட்டில் இருக்கும் மக்கள் தயாரித்துக் கொடுப்பது தானே. அவர்கள் இதை விற்க மாட்டார்களே! நீ யாரிடம் வாங்கினாய்?“ என்று கேட்டாள் சூரியகலா.

மலையரசன் நிமிர்ந்து. ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான். ரிஷியின் தங்கை எனப் புரிந்து கொண்டான். உடனே அவளிடம், “அம்மா மன்னித்துக் கொள்ளுங்கள். இப்பொருள் திருநெல்வேலியில் இருந்து வருகிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் மலையரசன் என்பவனிடம் வாங்கினேன். அவன் என்னிடம் அதிகமாக பணம் வாங்குகிறான். கேட்டால், பிரயாண செலவு ஆகிறது என்கிறான். உன் இடத்திற்கு நானே வருகிறேன் என்றால் இடத்தைக் காட்ட மாட்டேன் என்கிறான். அவன் சொன்ன விலையில்தானே நான் வாங்க முடியும். ‘இஷ்டம் இருந்தால் வாங்கு, இல்லாவிட்டால் தரமாட்டேன்’ என்கிறான். அதனால்தான் நானும் அதே போல் பேசிவிட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொருள் திருநெல்வேலியில் எந்த இடத்தில் உற்பத்தி ஆகிறது என தெரியுமா? நான் நேரடியாகச் சென்றால் எனக்கு குறைந்த விலையில் கிடைக்கும். அப்படி கிடைத்தால் விலை குறைவாகவும் விற்பேன் உங்களுக்கு தெரிந்ததை எனக்கு கூறுங்கள். திருநெல்வேலியில் எந்த இடம்.” என்று பவ்யமாக கேட்டான்.

சூரியகலா, “அப்படியா? மலையரசனா? இதை என்று, எப்போது என்ன விலைக்கு மலையரசன் விற்றான்?.” என்று விசாரித்தாள். பொய்யாய் விபரம் கூறிய மலையரசன் அவளிடம், “உங்களுக்கு அவனைத் தெரியுமா? அவன் இன்று வருவான். அவனிடம் எனக்காக விலையை குறைத்து பேசுகிறீர்களா?” என்று கேட்டான். கைவினைப் பொருளை விலைக்கு வாங்க முடியாது என்று அண்ணன் கூறியது நினைவுக்கு வந்தது. ‘உண்மையில் யார் குற்றவாளி? அண்ணனா? மலையரசனா? கண்டுபிடிக்க வேண்டும்.’ என மனதிற்குள் எண்ணினாாள். அதனால் சூரியகலா மலையரசனிடம் அவன்தான் மலையரசன் என்று தெரியாமலேயே, “கண்டிப்பாக. எத்தனை மணிக்கு இங்கு மலையரசன் வருவான்?” என்று கேட்டாள்.

“சாப்பிடும் நேரம் ஆயிற்று. கடையை மூடி விட்டு, சாப்பிட்ட பிறகு அவனைப் பார்க்க ஆட்டோவில் செல்ல வேண்டும் என எண்ணியிருந்தேன். நீங்கள் இதோ இந்த பெரிய ஹோட்டலில் சாப்பிடுங்கள். நான் அதற்குள் கடையை மூடி சாப்பிட்டு விட்டு ஆட்டோவைப் பிடித்து வந்துவிடுகிறேன். ஒரு மணி நேரத்தில் திரும்பிவந்துவிடலாம்.” என்றான். “இல்லை, இல்லை. காரில் போகலாம். என்னிடம் கார் உள்ளதே!” என்றாள் சூர்யகலா . ஏன்மா நான் நல்லா இருக்குறது பிடிக்கலையா? காரில் அவன்கிட்ட போய் இறங்கினால் இன்னும் விலை ஏற்றத்தானே செய்வான். உங்களால நாலு காசு லாபம் கிடைக்கும்னு பார்த்தா என்ன நஷ்டப்படுத்தி விட்டுட்டு போயிடுவீங்க போலிருக்கே.” சிரித்தபடி சொல்லி முடித்தான் மலையரசன்.

“சரி சரி என் கூட நீயும் ஹோட்டலில் சாப்பிட வா” என்று அவனை அழைத்தாள் சூர்யகலா.

“அய்யய்யோ எனக்கு கட்டுப்படியாகாது”

“பணத்தை நான் கொடுத்து விடுவேன்”

“மனசு நாளைக்கு யாராவது இதை வாங்கி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விடும். எனக்கு வேண்டாம். மன்னிச்சிடுங்க.” போய் விட்டான்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31