உன்னை விடமாட்டேன் – பகுதி 58

 சுனிலிடம் சூர்யகலாவை கடத்த ஆட்டோவை எடுத்து வரச் சொல்லி பணத்தை நீட்டினான் மலையரசன். ஆனாலும், சுனில் அரண்டு விட்டான். ஐயையோ! பணக்கார இடம். அங்கு வேலையை காட்டினால் உன் கதி மட்டுமல்ல என் கதியும் அதோகதிதான். உயிருடன் இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. தீர்த்துக் கட்டிவிடுவார்கள் பேசவே மாட்டார்கள். செய்துவிடுவார்கள். மீண்டும் மற்றொரு பணக்கட்டை எடுத்துக் காட்டினான். “அடேங்கப்பா இவ்வளவு பணமா? கொஞ்சம் பொறு. என் நண்பனிடம் ஆட்டோ வாங்கி கொண்டு வந்து விடுகிறேன்.” என்றான்.

சுனிலின் மூளை வேகமாய் வேலை செய்தது. முன் ஏற்பாடு எல்லாம் கட கடவென முடித்து விட்டு மலையரசனுடன் சூர்யகலா காத்திருக்கும் ஹோட்டலுக்கு சென்றான். சூர்யகலா கார் டிரைவரிடம், “நான் சில கைவினைப்பொருட்களை வாங்க வேண்டும். காரில் சென்றால் அதிக விலை சொல்வார்கள். அதனால் நான் ஆட்டோவில் செல்கிறேன். நீங்க வீட்டுக்குப் போங்க. நான் ஆட்டோவில் போய் பொருட்களை வாங்கி விட்டு என் தோழி வீட்டுக்குச் சென்று விடுவேன். அங்கிருந்து நானே வந்துவிடுகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடுங்கள்.” என்றாள். அய்யய்யோ சின்ன ஐயா கோபித்துக்கொள்வார். நான் சற்று தொலைவில் பின்னால் வருகிறேன்” என்றார் டிரைவர். அதெல்லாம் கோபிக்க மாட்டார். நான் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் போங்கள்” என்றாள்.

சூரியகலா சற்றும் சந்தேகப்படாமல் ஆட்டோவில் ஏறினாள். தன் தோழியிடம் இரண்டு மணி நேரத்தில் கைவினைப் பொருட்களை வாங்கி விட்டு 'உங்கள் வீட்டிற்கு வருவேன். எனக்காக உன் வீட்டிலேயே நீ காத்திரு. அதை பிரித்து பார்த்து எவ்வாறு உருவாக்கியிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.” என்று பொம்மைகளைப் பற்றி பேசிக் கொண்டே வந்தாள் சூர்யகலா. சூர்யகலாவுடன் அமராமல் ஆட்டோ டிரைவருடன் முன்னே உட்கார்ந்தபடி வந்த மலையரசன் அவள் கைவினைப் பொருட்களில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதை உணர்ந்து கொண்டான்.

சுனில் ஏற்கனவே ஒரு கடையில் கூல்டிரிங்ஸை வாங்கி மயக்க மருந்து கலந்து ஆட்டோவில் மறைத்து வைத்திருந்தான். ஒரு கடையில் ஆட்டோவை நிறுத்தினார்கள். அங்கு மூன்று கூல்டிரிங்ஸ் பாட்டிலை வாங்கினார்கள். கடையில் வாங்கி அப்போதுதான் ஓப்பன் பண்ணி கொடுப்பதுபோல் மயக்க மருந்து கூல்டிரிங்ஸை மாற்றி அவளுக்கு கொடுத்தார்கள். தோழியுடன் பேசிக்கொண்டிருந்தவள் வேண்டாம் என மறுத்தாள். சுனில் வற்புறுத்த நாகரீகம் கருதி வாங்கினாள். பிறகு பேசுகிறேன் என்று கட் செய்துவிட்டு கூல்டிரிங்ஸை குடித்தபடி போகுமிடத்தில் இருக்கும் கைவினைப்பொருட்களில் விளையாட்டு பொம்மை இருக்குமா? என விசாரித்தாள். அவளுக்கு மயக்கமாக இருந்தது. மலையரசன், “என்ன செய்கிறது மேடம்“ என்று கேட்டபடி அவளருகில் அமர்ந்து யாருக்கும் சந்தேகம் ஏற்படாத படி தன் தோளில் சாய்த்துக் கொண்டான். பார்ப்பவர்கள் அந்தப் பெண் இவன் மேல் சாய்ந்து தூங்குகிறாள் என்று எண்ணிக் கொள்வார்கள்.

சுனிலிடம், “திருநெல்வேலிக்கு ஓட்டிக் கொண்டு செல்” என்றான் மலையரசன். “அவ்வளவு தொலைவா? நல்லதுதான். இரவு இவளைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். அதற்குள் சென்னையைவிட்டு வெகு தொலைவில் சென்று விடவேண்டும் இல்லையெனில் போலீஸ் செக்போஸ்டில் மாட்டிக் கொள்ள நேரிடும்” என்றான் சுனில். மலையரசன் மனதில் ‘திருநெல்வேலிக்கு செல்லும் பாதையில் ரிஷி போலீஸை அனுப்புவான். மாட்டிக்கொள்ளக்கூடாது.’ என தோன்றியது. சுனிலிடம் அதைக் கூறியபோது, “நாம் திருநெல்வேலிக்குத்தான் கடத்தி செல்வோம் என்று எப்படி அவர்கள் ஊகிப்பார்கள். முடியாது.” என்றான்.

“ரிஷிக்கு கண்டிப்பாக தெரியும். அவனிடம் மாட்டிக்கொள்ளாமல் மதுரை வரை கூட்டிச்சென்றுவிட்டாலும் கூட போதும். நாம் தப்பித்துவிடலாம்.” என்றான் மலையரசன். “அடப்பாவி முன்பே அந்த பணக்காரனுக்கு நீ தான் கடத்துவாய் திருநெல்வேலிக்குதான் கடத்திச் செல்வாய் என்று தெரியுமா? என்ன?” என நடுங்க ஆரம்பித்து விட்டான். “இப்போது மணி 3. அவர்கள் இவளை 8 மணியளவில் தேட ஆரம்பிப்பார்கள். அதற்கு முன் குறுக்குவழியில் புகுந்து மதுரையை அடைந்துவிடமாட்டாயா?” என்றான் மலையரசன். “அதெல்லாம் முடியாது. எப்படி முடியும்? டிராபிக் வேற இருக்கும். இப்போது பாதி கிணற்றை தாண்டிட்டுவிட முடியாது. என்ன ஆகுமோ ஆகட்டும்.” என்று துணிந்து ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்தான் சுனில்.

தேனரசியை அணைத்துக் கொண்டு அவள் அறியாதவாறு அவள் அழகை ரசித்தபடி படுத்திருந்தான் ரிஷி. தேனரசி தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற வருத்தம் அடி மனதில் ஓடியது. அவள் கர்ப்பவதியானது உறுதியான பின் அவன் அவளை ஒன்றும் செய்யவில்லை. சிறு அணைப்பு மட்டுமே. அவள் விரும்பாமல் இனி அவளை நெருங்கக்கூடாது என வைராக்கியம் காத்தான். தொலைபேசி அழைத்தது. தான் காரை விட்டு விட்டு வரும் இணை நிறுவன நண்பரிடம் இருந்து வரும்போன்.

‘இரவு 10.20 மணி. என்ன விஷயமாக இருக்கும்’ என எண்ணியபடி, “ஹலோ!” என்றான். “ரிஷி உன் தங்கையைக் காணவில்லையாம். உன்னுடைய போன் ஸ்விட்ச் ஆப்பில் உள்ளதாமே. உன்னை போனில் தொடர்புகொள்ள முடியாமல் நீ இங்கு தான் இருக்கிறாய் என உன் தந்தை வேறு இங்கு நேரில் வருகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.” நான் என்ன சொல்லி அவரை சமாளிக்க....” ரிஷி போனை கட் செய்துவிட்டு கட்டிலை விட்டு எழுந்த படி தன் செல்போனை ஸ்விட்ச் ஆன் செய்தான்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31