உன்னை விடமாட்டேன் – பகுதி 59
தந்தையை உடனடியாக தொடர்பு கொண்டு விபரம் கேட்டான் ரிஷி. “இப்படியாடா பிள்ளை இருப்பாய்? அவசரத்துக்குக் கூட தொடர்புகொள்ள முடியாமல்.” என்று எல்லை மீறிய ஆத்திரத்தைக் கொட்டி விட்டு விபரம் கூறினார். கைவினைப் பொருட்களை வாங்கச் சென்றபோது தங்கை காணாமல் போனது மனதை அதிர வைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இரவில் பெட்டியில் இருந்து எதையெதையோ கயிறு, பாதாள கொலுசு, கொக்கி போன்ற பொருட்களைப் பையில் எடுத்துச் செல்லும் கணவனை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் தேனரசி. போகும் போதாவது தன்னிடம் எதுவும் சொல்லுவான் என்று பார்த்திருந்தால் ஒன்றும் கூறாமல் காரியமே கண்ணாக போனில் பேசியபடி கிளம்பிச் சென்றுவிட்டான்.
தேனரசிக்கு மனம் வலித்தது. வெளிஅறையை பூட்டிவிட்டான். அவள் நடமாட பல அறைகள் இருந்தன. அவள் சங்கிலியால் பிணைக்கப்படவில்லை. ஆனாலும், அவளைப் பற்றி கவலைப்படாமல் திடீரென சென்று விட்டது அவளை மிகவும் பாதித்தது. இதேபோல் முன்பு போன் வந்த போது இரவு உடையுடன் வெளியே சென்றான். ஆனால் இப்பொழுது நிமிடத்தில் உடை மாற்றி எதை எதையோ எடுத்துப் போட்டுக்கொண்டு பையுடன் செல்கிறானே! தன்னைவிட்டு ரிஷி சொல்லாமல் கொள்ளாமல் வெகு தூரம் போகப்போவதாய் உணர்ந்தாள்.. கண்ணிற்குள் வைத்து பார்ப்பதுபோல் பார்த்தானே! எல்லாம் வேஷம்தானா! கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடியது. கன்னத்தில் இறங்கிய கண்ணீரை தடவிப்பார்த்தாள். ‘ரிஷி தன்னிடம் ஏதும் கூறாமல் போனில் பேசியபடி சென்றது தன்னை இவ்வளவு பாதிக்கிறதா? அவனை அவ்வளவா விரும்புகிறோம்.’ தன்னை பற்றியே புரிந்துகொள்ள முடியாமல் தவித்தாள் தேனரசி.
போன் மூலமாக சூர்யகலாவின் தோழி, கார் டிரைவர் மூலமாக ஓரளவு விஷயத்தை ஊகித்தான் ரிஷி. ‘அவள் தங்கைக்கு பதில் என் தங்கையை கடத்திவிட்டானா மலையரசன்? 2 மணிக்கு மேல் கிளம்பினால் தற்போது கண்டிப்பாக மதுரை தாண்டி சென்றிருப்பார்கள் அங்கு என்றால் தன்னால் மட்டுமே தங்கையை மீட்க முடியும். இங்கிருந்தால் அல்லது சென்னையை சுற்றியுள்ள பகுதி என்றாலும் நிச்சயம் தந்தை கவனித்துக் கொள்வார்’ என முடிவுகட்டியவன், காரை வெகுவேகமாக திருநெல்வேலியில் உள்ள காட்டை நோக்கி ஓட்ட ஆரம்பித்தான். திருநெல்வேலி போலீஸ்துறை அதிகாரி நண்பனிடம் சொல்லி வழியில் சீக்கிரம் மடக்கலாமா? என நினைத்தவன் அந்தத் திட்டத்தைக் கைவிட்டான். ‘விஷயம் பரவ வேண்டாம்’ என எண்ணியதே காரணம்,
ரிஷி, வழியில் நண்பன் ஒருவனை வரச்சொல்லி, “உன் மனைவி பிரதீபாவிடம் இந்த சாவியைக் கொடுத்து விடு. விபரத்தை அவளிடம் கூறிவிடுகிறேன்.” என்று காரை உடனடியாக வேகமாய் ஓட்டிச்சென்றான். பிரதீபாவிற்கு போன் செய்து “பிரதீபா! உன் கணவனிடம் காட்டு பங்களா சாவியைக் கொடுத்துள்ளேன்” என்று கூறினான் ரிஷி.
“என்ன விஷயம் ரிஷி! காவல் துறை உயர்அதிகாரிகள் மீண்டும் ஒரு பெண் தீவிரவாதியை உன்னிடம் ஒப்படைத்துவிட்டார்களா? அங்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்.”
“பிரதீபா! இது ஃபெர்சனல், உள்ளே இருப்பது என் மனைவி. அவள் கர்ப்பமாக இருக்கிறான். விஷயம் மாயக்கண்ணனைத் தவிர யாருக்கும் தெரியாது. நீயும் ரகசியமாக வைத்திரு.”
“அடப்பாவி! உன்னை எவ்வளவு ...”
“ப்ளீஸ் பிரதீபா! என் தங்கையைக் காணவில்லை. அது விஷயமாய் அலைகிறேன். எப்படியும் அவளைக் கண்டுபிடித்துவிடுவேன். அதுவரை தேனரசியைப் பார்த்து கொள். அவள் தான் என் மனைவி. மற்றதை பிறகு பேசலாம். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் எனக்கு போன் பண்ணு. சீக்கிரம் போ அவள் தனியாக இருப்பாள்.” என்று கூறி வைத்து விட்டான் ரிஷி. பிரதீபாவும் தன் கணவன் கொண்டுவந்து கொடுத்த சாவியை வாங்கிக் கொண்டு உடனே கிளம்பிவிட்டாள். பிரதீபாவின் கணவனோ ‘ஏதோ காவல்துறையில் முக்கிய வேலையாக இருக்கும். பிறகு ‘என்ன’ என்று கேட்டுக் கொள்ளலாம்' என்று வழியனுப்பி வைத்தான். பொதுவாக பெண் தீவிரவாதிகளை கவனிக்க பிரதீபாவை அழைப்பது வழக்கம்.
ரிஷி தாயாரிடம், ‘தங்கை இருக்குமிடம் பற்றி தெரிந்துவிட்டது கவலை வேண்டாம்.’ என்று சமாதானப்படுத்தினான். தந்தையிடம், “நீங்கள் ரகசியமாக போலீஸ் மூலம் சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதியில் தேடுங்கள். நான் அதைத் தாண்டி தேடுகிறேன்” .என்று கூறினான்.
ஆட்டோவில் செல்லும் போதே தென்னரசு, மற்றும் மாயவனை போனில் தொடர்பு கொண்டான் மலையரசன், அவர்கள் தனிமையில் இருப்பதை உறுதி செய்துகொண்டு ரிஷியின் தங்கையை கடத்தி வரும் விஷயத்தைக் கூறினான். “தாத்தாவுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ஆனால் இப்போது மலையரசனுக்கு உதவ வேண்டும்“. என பேசியபடி காட்டைவிட்டு வெளியில் காத்திருக்க முடிவு செய்தனர் இருவரும்.
Comments
Post a Comment