உன்னை விடமாட்டேன் – பகுதி 60
பிரதீபாவிற்கு ‘இவள் யார்? எங்கிருந்து ரிஷி கூட்டிவந்தான்’ என்பது மர்மமாகவே இருந்தது. ‘இந்தப் பெண் மிகுந்த அழகுதான். ரிஷியை அழகால் மயக்குவது கடினம். அவன் குடும்பப் பராம்பரியத்தில் கட்டுப்பாடுகள் உண்டு. அவன் குடும்பம் திடீர் பணக்காரக் குடும்பம் கிடையாது. ராஜவம்ச பரம்பரையைச் சேர்ந்தது. வம்ச வாரிசு முக்கியம். தங்கள் வித்து வேறெங்கும் தோன்ற கூடாது என நினைப்பவர்கள். எத்தனையோ பெண்களிடம் சிக்காதவன் இந்தப் பெண்ணிடம் எப்படி சிக்கினான். அல்லது இவள் அவனிடம் சிக்கினாளா?’ என வியந்தாள் பிரதீபா. பிரதீபாவுக்கு ஆச்சரியத்துடன், அறிந்து கொள்ள ஆர்வம் மிகுந்தது.
‘யாரையோ தன்னை கவனிக்க அனுப்பியிருக்கிறான்’ என்பதை உணர்ந்த தேனரசி ‘ரிஷி எங்கே தெரியுமா?’ என எப்படி கேட்பது என்று அமைதியாக இருந்தாள். ஆனால் பிரதீபா கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள். தேனரசி கடுப்பாகி தூங்க ஆரம்பித்துவிட்டாள். பிரதீபா ‘ சரியான அழுத்தக்காரிதான். ஒரு வார்த்தை பேசமாட்டேன் என்கிறாளே! தீவிரவாதியைப் போலவே. ரிஷியிடமாவது பேசுவாளா? பேசாமலா பிள்ளையை வயிற்றில் சுமப்பாள். ஆக மொத்தத்தில் திமிர்பிடித்தவள். ரிஷியை விட பணக்காரியாக இருப்பாளோ. அதனால்தான் இவ்வளவு திமிர்..’. என நினைத்து வேறுவழியின்றி தானும் தூங்கினாள்.
திருநெல்வேலியில் போலீஸ் தொந்தரவு இல்லாதது சுனிலுக்கு நிம்மதியைக் கொடுத்தது. மலையரசன் ஆட்டோவை ஓரிடத்தில் நிறுத்தச் சொல்லிவிட்டு கூட சிறிது பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டான். ஏதோ மரங்களுக்கு நடுவே அப்பெண்ணைத் தூக்கியபடி சர்வசாதாரணமாக சென்ற மலையரசனைப் பார்த்தான் சுனில். சுனிலுக்கு ஏமாற்றமாயும், பயமாகவும் இருந்தது. மலையரசன் தன்னை இப்படி கழட்டிவிடுவான் என எதிர்பார்க்கவில்லை. மலையரசனைப் பற்றி போலீஸ் கேட்டாலும் சுனிலுக்கு ஒன்றும் தெரியாது. மீண்டும் சென்னைக்கு சென்றால் நிச்சயம் மாட்டுவோம். இனி தலைமறைவு வாழ்க்கைதான். பணம் நிறைய இருந்தது. அவனிடம் நிம்மதி காணாமல் போய் மனதில் பயம் வந்து அமர்ந்தது.
மாயவனும், தென்னரசும் வன அதிகாரிக்குக் கூட தெரியாமல் சுற்றிக் கொண்டுவரும் மலையரசனைக் கண்டார்கள். ஒரு பக்கம் மகிழ்ச்சி மற்றொரு பக்கம் பயம். அவனை வரவேற்று விட்டு, “இப்பெண்ணை கடத்தி வந்து விட்டாயே! தாத்தாவிடம் என்ன சொல்லி சமாளிக்கப்போகிறாய்?” என்று கேட்டனர். மலையரசன் ”ஏன்? நான் நன்றாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? இவளை நமது இருப்பிடத்திறகு வெளியில் உள்ள விறகுகட்டைகளை அடுக்கும் இடத்தில் ஒளித்து வைக்கப் போகிறேன். ரிஷி நிச்சயம் தன் தங்கையைத் தேடி வருவான். பிறகு அவனே தாத்தாவிடம் கேட்பானல்லவா? பிரச்சினையை அப்போது பார்த்துக் கொள்ளலாம்‘ என்று கூறி விட்டு விறகை அடுக்கும் இடத்தில் அவளைக் கிடத்தினான்
மெல்லிய மேனியில் எங்கோ கீறி இரத்தம் வெளிப்பட்டது. மயக்கத்தில் இருந்த அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. “இனி இவளுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வாருங்கள். நம் தங்கையை ரிஷி எப்படி வைத்திருக்கிறானோ? ஆனால், அவளது தங்கையைப் பட்டினி போட்ட பாவம் நமக்கு வேண்டாம்“ என்றான் மலையரசன்.
மாயவனும், தென்னரசும் உணவு கொண்டு வர சென்றனர். சிறிது தொலைவு சென்றதும் மாயவன் தென்னரசிடம், “தென்னரசு சற்று யோசி! தாத்தாவுக்கு விஷயம் தெரிந்தால் என்ன ஆகும். மலையரசனை தள்ளிவைப்பது நிச்சயம். அவன் செய்த செயலுக்கு நாமும் துணை என்று தெரிந்தால் நமக்கும் சேர்ந்து தண்டனை கிடைக்கும். . அதுமட்டுமல்ல நம் தங்கையின் வாழ்க்கையும் மலையரசன் வாழ்வும் பாழாகிப் போகும். ரிஷிக்கு என்ன பாதிப்பு ஏற்படும்.? அவன் தன் தங்கையை மீண்டும் கூட்டிச்சென்றுவிடுவான். அவன் நன்றாகத்தான் இருக்கப் போகிறான். நான் சொன்னபடி செய்தால் ரிஷிக்கு பாதிப்பு ஏற்படும். நமக்கு ஒரு நல்லது நடக்க வழி ஏற்படும்.
அது என்னவென்றால் நாம் தாத்தாவிடம் சென்று, “விறகு அடுக்கும் அறையில் ஏதோ சப்தம் கேட்ட மாதிரி இருந்தது. என்னவென்று பார்த்தால் அங்கு மலையரசன் ஒரு பெண்ணுடன் இருக்கிறான். கொண்டை முடி எல்லாவற்றையும் எடுத்துவிட்டதால் சட்டென்று அடையாளமும் தெரியவில்லை. அதை நாங்கள் பார்த்தோம் என்று அவனை மாட்டி விட்டுவிடலாம். பிறகு, பெண்ணின் வாழ்வு என்னாவது? என்று பிரச்சினையை கிளப்பி விடலாம்.. ரிஷியின் தங்கையை மலையரசனை மணக்க செய்துவிட்டால் ரிஷியால் ஒன்றும் கிழிக்க முடியாது. அப்படியே அவங்க ஊர் பழக்கம் என்று கல்யாணம் ஆன தங்கையை வேறொருவனுக்கு மணமுடித்து வைக்கிறானா? என்றும் பார்த்துவிடுவோமே? என்ன சொல்கிறாய் தென்னரசு?” என்று கேட்டான் மாயவன். “நல்ல யோசனை“ என்றான் தென்னரசு.
ரிஷி காரை ஓட்டிக்கொண்டு வந்து விட்டான். வன அதிகாரி தூங்கிக் கொண்டிருந்தார். ‘மலையரசன் வந்த சுவடு காணப்படவில்லையே. சரி இவ்வளவு தூரம் வந்தாயிற்று அங்கு என்ன நிலவரம் என்று பார்த்து விட்டே செல்வோம்.’ என்று தான் கொண்டுவந்த கயிறு, கொக்கி, பாதாள கரண்டி போன்றவைகள் மூலமாய் இருட்டிலும் மலையில் வெகுவேகமாக கவனமாக ஏறி இறங்கி காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
Comments
Post a Comment