உன்னை விடமாட்டேன் – பகுதி 61
விறகு அடுக்கி வைத்த இடத்தில் கிடத்திய சூர்யகலா மேனியில் அங்கங்கு திட்டு திட்டாக தடித்து சிவந்தது. ஒரு பக்கம் இரத்தமும் வழிந்தது. என்ன இப்படியும் பூ போல மேனி இருக்குமா எதையும் தாங்க மாட்டாள் போலிருக்கிறது என்று எண்ணியவாறு அவள் மயக்கத்தை தெளிவித்தான். அவள் சோர்வுடன் கண் திறந்தாள். சுற்றுப்புற சூழ்நிலை அவளை பயமுறுத்தியது. ஏன் இவன் நம்மை இங்கு வைத்துள்ளான் என புரியாமல் நடுங்கினாள். நடுக்கம் மேனியில் தெரிந்தது. மலையரசனுக்கு சிரிப்பாக இருந்தது. “ரிஷியின் தங்கை இவ்வளவு கோழையா?” வாய் விட்டு சிரித்தான். அவளோ பயந்து நடுங்கி எங்காவது ஓட முடியுமா? என்று பார்த்தாள். பயத்தால் அவள் கால்கள் கூட ஒத்துழைக்கவில்லை.
“உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்” என்று அவளுடைய பயத்தை தெளிவிக்க முயன்ற போது சிங்கராசா தாத்தாவின் குரல் கேட்டது. “மலையரசா! ஒரே சிரிப்பா இருக்கு. உள்ளே யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டார். ‘இவர் ஏன் இந்நேரத்தில் இங்கு வந்தார் எப்படி வந்தார்‘ என யோசித்தபடி வெளியே வந்தான் மலையரசன். தாத்தா மட்டுமல்ல வெளியே ஒரு கூட்டமே நின்றது. முல்லையரசி உள்ளே சென்று நடுங்கிய சூர்யகலாவை வெளியில் கூட்டிவந்தாள்.. “யார் இந்த பெண்?” கோபத்துடன் கேட்டார் சிங்கராசா தாத்தா. “ரிஷியின் தங்கை. கடத்திக் கொண்டு வந்துவிட்டேன்.”. என்றான் மலையரசன். “பிறகு” என்றார் சிங்கராசா தாத்தா. மலையரசனுக்கு தாத்தா கேட்க வருவது புரியவில்லை
“ரிஷி தங்கையை தேடி வருவானல்லவா?”
“வருவது இருக்கட்டும். நீ கடத்தி வைத்திருப்பது எத்தனை நாட்களாக.”
“தாத்தா இப்போதுதான் கடத்திக்கொண்டுவந்தேன்” என்றான் மலையரசன்.
“பொய் பொய் இரண்டு நாட்களாய் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. 'பெண் பேய்' என நினைத்தோம். வெளியே சொன்னால் பயந்தாங்கொள்ளி என்று சொல்லுவார்கள் என்று இன்று தைரியமாய் மாலுச்சாமியை நினைத்துக் கொண்டு பார்த்தால் மலையரசன் இப்பெண்ணை கட்டியணைத்தவாறு இருந்ததைக் கண்டேன்.” என்றான் மாயவன். தென்னரசும் “ஆமாம்” என்றான். மலையரசன் கோபத்துடன் இருவர் மேலும் பாய முயல மற்றவர்கள் அவனை பிடித்துக் கொண்டார்கள்.
சிங்கராசா தாத்தாவுக்கு கோபம் வந்தது. ‘என்ன செய்யலாம்?’ என கூட்டத்தினரிடம் ஆலோசனைக் கேட்டார். “நம்ம இடத்துல ஒரு பொட்டப்பிள்ள கதி இப்படி ஆகக்கூடாது. மலையரசனுக்கே அவளைக் கட்டிவைத்துவிடலாம்“. துணிந்து சொன்னான் மாயவன். “முடியாது” என்றான் மலையரசன். "நீ வருங்காலத் தலைவன் அப்படின்ற திமிரா? நீ கொண்டையை வெட்டிப் போட்டப்போ அந்த தகுதி போயிடுச்சு. அந்தப் பெண்ணை கடத்தி அவகிட்ட தனியா இந்த அறைக்குள்ள இருக்கிறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும். நீதான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கனும் இன்னைக்கு விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்துல கல்யாணம். சீக்கிரம். வேலைய கவனிங்க” சொல்லிவிட்டார் தாத்தா. “தாத்தா! நான் எந்த தப்பும் பண்ணல” அவன் காற்றோடு தான் பேசிக் கொண்டிருந்தான்.
கல்யாண வேலைகள் மட மடவென்று நடந்தன. சூர்யகலாவின் நடுக்கம் நிற்கவே இல்லை. அவளுக்கு தைரியமூட்ட, பாலை ஊட்ட, முல்லையரசி முயன்றாள். முடியவில்லை. சூர்யகலா முன் யாரும் அதிர்ந்து கூட பேசமாட்டார்கள். சண்டை, கலாட்டா எல்லாம் ஊடகங்களில் பார்த்திருக்கிறாளே தவிர நேரில் பார்த்ததில்லை. அண்ணன் சொல்லிக் கேட்டிருக்கிறாள். எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் அவள் பழகிய வட்டாரத்தில் அமைதியாக தன் தரப்பு நியாயத்தை ஒருவர் பின் ஒருவராக கூறுவார்கள். அடித்துக் கொள்வது போல் பேசவே மாட்டார்கள். சூர்யகலாவை நடுக்கத்துடனே குளிப்பாட்டி புதுச்சேலை உடுத்தி மணப்பெண்ணாய் அமர்த்தினார்கள். “தாத்தா எல்லாத்தையும் கண்டுபிடிப்பீங்களே! நான் தப்பு பண்ணலன்னு கண்டுபிடிக்கலியா?” என்று கூறி மலையரசன் தாலிக்கட்ட மறுக்க மலையரசனின் தந்தை முல்லைக் கொடியை வெட்டுவேன் என்று அரிவாளைத் தூக்க வேறு வழியின்றி தாயாரைக் காக்க தாலி கட்டினான் மலையரசன்.
முல்லையரசி சூர்யகலாவைத் தேற்றப் பார்த்தாள். ஆனால் அவளோ தன்னைச் சுற்றி நிமிடத்தில் நடக்கும் நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்பட்டாள். தாத்தா ரிஷியின் தங்கைக்கு ஏதாவது குடிக்கக் கொடுக்கும்படி சொல்ல சிற்றரசின் குரல் எங்கோ ஓங்கி ஒலித்தது. “ரிஷி வந்துட்டான்” என்று.
மலையரசன் அசந்துவிட்டான் “என்ன ஒரு வேகம்!” என்று. அவன் மட்டுமா அசந்தான் மாயவன், தென்னரசும் கூடத்தான் தாத்தா மட்டும் அசரவில்லை. நிம்மதிப்பெருமூச்சு விட்டார். ‘ரிஷி கண்டிப்பாய் விரைந்து வருவான் அதற்கு முன் திருமணத்தை முடிக்க விடியற்காலையிலே பிரம்ம முகூர்த்தம் என்று கூறி மணமுடித்து விட்டோம். நல்லவேளை! ரிஷியும் கெட்டவன் கிடையாது. அவன் உடம்பில் கண்டிப்பாய் நல்ல குடும்பத்து இரத்தம் ஓடுகிறது. பார்க்கலாம். தேனரசி எங்கே? என்று கேட்டு அவனுக்கே மணமுடித்துவிட வேண்டும். நடக்குமா? தெரியவில்லை. மாலுச்சாமி துணை புரி’ என்று மனதில் வேண்டிக்கொண்டார்.
இதற்கிடையில் தன் அண்ணன் பெயரைக் கேட்டதுமே சூர்யகலாவின் கண்கள் அண்ணனைத் தேடின. கால்கள் அவனைக் கண்டதும் அவனை நோக்கி ஓடின. ரிஷி தன் தங்கை மிகுந்த சோர்வுடன் இருப்பதையும், கழுத்தில் தாலி இருப்பதையும் பார்த்து தன்னிடம் ஓடி வருபவளைத் தாங்கி பிடித்தான். அவ்வளவு நேரம் கோழிக்குஞ்சுபோல் பயந்து நடுங்கி இருந்த சூர்யகலா வீரத்துடன் சண்டைச்சேவலாய் சிலிர்த்து நின்றாள். ‘பயப்படாதே’ என்று கூறியும் பயத்தில் நடுங்கியவள் அண்ணனைக் கண்டதும் இவ்வளவு தைரியமா? என முல்லையரசி முதற்கொண்டு அங்கிருந்த பெண்கள் கூட்டம் மட்டுமின்றி ஆண்கள் தரப்பும் வியந்தது.
Comments
Post a Comment