உன்னை விடமாட்டேன் – பகுதி 62
ஆக்ரோஷமாக, “அண்ணா உன் நண்பன் மலையரசன் மிகவும் நல்லவன் என்றாயே? ஏற்கனவே அவன் பணத்தாசை பிடித்து கைவினைப்பொருட்களை மிக அதிக விலைக்கு விற்றுக்கொண்டிருந்தான். இவன் தான் மலையரசன் என்பதை மறைத்து நாடகமாடி என்னைக் கடத்தி வந்துவிட்டான். இந்த தாத்தா ஏதோ இரண்டு நாட்களாய் மலையரசனுடன் இருந்ததாய்க் கூறி நம் சொத்துக்கு ஆசைப்பட்டு சீக்கிரமாய் நீ வரும் முன்பு திருமணத்தை முடித்துவிட்டார். விசாரிக்கக்கூட இல்லை. இவர்களுக்கெல்லாம் ஒரு பெண்ணை வைத்து விளையாட என்ன துணிச்சல். கேட்க யாரும் இல்லை என்று தானே! இவர்களையெல்லாம் சும்மா விடாதே! அண்ணா! உன்னிடம் துப்பாக்கி இருக்குமே! இந்த மலையரசனைக் கொன்றுவிடு, கொன்றுவிடு“ கண்களில் நீர் வழிய அதே கண்களில் கோபத்தில் அனல் பறக்கக் கூறினாள் சூர்யகலா. ரிஷிக்கு தன்னையறியாமல் தேனரசி இதேபோல் ஆக்ரோஷமாய் பேசியது நினைவுக்கு வந்தது.
அவள் கைகாட்டிய இடத்தில் கொண்டை, கடுக்கன் வளையம் ஏதுமில்லாமல் மலையரசன் நின்றுகொண்டிருந்தான். ரிஷியைப் பார்த்ததுமே அவன் முகத்தில் மௌனமான புன்னகை நன்கு அரும்பியது. அந்தப் புன்னகை, “பார்த்தாயா உன்னை எப்படி வர வைத்துவிட்டேன்.” என்பதுபோல் இருந்தது. ரிஷியின் உடல் தெம்பாக இருந்தது. ஆனால், மனம் மிக சோர்ந்துவிட்டது. மனம் தளராதவன் உண்மையில் தளர்ந்துவிட்டான். ஆனால், தங்கை அதை உணர்ந்தால் துவண்டுவிடுவாள் என்று எதையும் காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்தான்.. ‘தன் தங்கையின் வாழ்வு இனி என்னாவது? பிறக்கும்போதே மென்மையான பஞ்சணைத் தொட்டில்தான். இன்றுவரை ‘அரண்மனை இளவரசி' பூப்போன்றவள் காட்டில் வாழ முடியுமா?’ மனதுள் பெரிதும் தவித்தான்
மலையரசனுக்கு ரிஷியின் நிலை பரிதாபமாக இருந்தது. எந்த பிரச்சனை என்றாலும் உணாச்சியைக் காட்டாமல் கல் போல் முகத்தை வைத்திருப்பான் ரிஷி. என்ன மனதில் நினைக்கிறான் என நிச்சயம் ஊகிக்கவே முடியாது. தாத்தாவே, “மலையரசா! ரிஷியைப் பார்த்து உணர்ச்சியைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்“ என்பார். அவன் வீரம், கோபம், சிரிப்பு, அட்டகாசம், குறும்பு, உணர்ச்சியைக் காட்டாத கல்முகம் ஒன்றையும் காணவில்லை. தங்கையின் நிலைகண்டு ரிஷி மிகவும் துவண்டுபோனது அப்பட்டமாய் தெரிந்தது.
ஆக்ரோஷமாய் பேசியபடியே தன் மீதியிருந்த சக்தி வடிய மயங்கி விழுந்த தங்கையை தாங்கி, தூக்கி குடிலுக்குள் எடுத்துச் சென்றான் ரிஷி. ‘என் மனைவி அவள். மயங்கி விழுந்தால் நானல்லவோ பார்க்க வேண்டும்.” என்ற எண்ணம் மனதில் எழ மலையரசன் பின்னாடியே உள்ளே சென்றான். “இங்கே காற்றே வரவில்லை. நீயும் வாசலை மறைத்துக்கொண்டால் எப்படி? தயவு செய்து வெளியே நில்” என்று எரிந்து விழுந்தான் ரிஷி. வெளியில் இருந்த மாயவன் காதில், ரிஷி கூறியது கேட்க, “கட்டின பொண்டாட்டிய பார்க்க மாட்டாங்களா.? தன்னோட தங்கை மட்டும்தான் தங்கை. மற்றவர்கள் தங்கையெல்லாம் ...” என ஏதோ கூற ஆரம்பிக்க சிங்கராசா தாத்தா, “மாயவா!” என்றார். அவன் அடங்கிவிட்டான்.
ரிஷிக்கு தேனரசி தன்னை ஆக்ரோஷமாய் கொல்ல முயன்றது நினைவுக்கு வந்தது.
"உன்மேல் அப்படி பழி சுமத்தியதற்காகவா என்னை கடத்தி வந்தாய்.”
"ஆமாம்"
“புத்திசாலித்தனமும், முட்டாள்தனமும் எப்பொழுதும் ஒரே போல் ஒருவருக்கு இருந்து விடுவதில்லை ஏதோ ஒரு சமய சந்தர்ப்பத்தில் உன் தங்கை முட்டாள் தனத்தினால் யாரையோ தவறாக நினைத்தால் அதனால் அவளுக்கும் இவ்வாறு நடந்து விட்டால் அது உனக்கு சம்மதமா?”
“ஹா ஹா ஹா ஹா நல்ல நகைச்சுவையாக இருக்கிறது என் தங்கை அதிபுத்திசாலி. நானே அவளிடம் மாட்டிக்கொண்டு முழிப்பேன். நடக்காததை பற்றி பேசாதே. வேறு ஏதாவது பேசு.”
“அந்த மாலுச்சாமி தான் உனக்கு பதில் கொடுப்பார்.”
தேனரசியின் சாபம் தான் பழித்து விட்டதோ! தன் அண்ணன் பாலை ஊட்ட குடித்தாள் சூர்யகலா. அவளுக்குக் குடிக்கப் பிடிக்கவில்லைதான். ஆனால் கொடுப்பது அண்ணன். அது மட்டுமல்ல அண்ணனும் தகுதியில்லா இடத்தில் சாப்பிடவும் மாட்டான். சாப்பிடவும் விட மாட்டான். ஏதோ ஒன்று இருக்கிறது என்று குடித்தாள். இது தான் சமயமென சிறிது கஞ்சியையும் கொண்டுவந்து ரிஷியிடம் கொடுத்தாள் முல்லையரசி. அதையும் அவன் ஊட்ட விரைவில் காலியாகிவிட்டது. இன்னும் கொண்டுவரப்பட ஊட்டினான் ரிஷி.
“இவ்வளவு பசிய வச்சிக்கிட்டு ஒரு டம்ளர் தண்ணிகூட குடிக்கலியேம்மா. நல்ல வேளை ரிஷி வந்தான். உன்னய சாப்பிட வைக்க முடியுமான்னு பயந்துகிட்டே இருந்தேன். மாலுச்சாமி காப்பாத்திட்டாரு” என்றாள் முல்லையரசி. ஒவ்வொன்றும் தேனரசியை நினைவு படுத்த, “மாலுச்சாமி என்னை தண்டித்து விட்டாயா? நான் செய்தது குற்றமா? என்ன?” மனதிற்குள் இறைவனைக் கேட்டான் ரிஷி. அடி மனதில் ஒரு பாட்டு ஓடியது.
விளையாட்டா வேண்டிக்கிட்டே
வினையில் நீ மாட்டிக்கிட்டே
என்கிட்ட வந்து நின்னா
சுபமாக ஆக்கித் தாரேன்.
குருவாக இருந்துனக்கு
கர்மத்தைப் புரிய வைப்பேன்.”
என்ன செய்வதென்றே தெரியாமல் பயங்கர மனக்குழப்பத்துடனும், மனச்சோர்வுடனும் இருந்த ரிஷிக்கு ஏதோ கையில் ஒரு நூல் கிடைப்பதுபோல் தோன்றியது. உடனடியாக, சற்று உடல் திடம் பெற்ற தங்கையைக் கூட்டிக்கொண்டு, மெளனமாக மாலுச்சாமி கோயில் இருக்குமிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
Comments
Post a Comment