உன்னை விடமாட்டேன் – பகுதி 63

 தென்னரசுக்கு சந்தேகம். ரிஷி தந்திரமானவன். தேனரசியை கொண்டு வந்துவிடாமல் நைசாக தன் தங்கையைக் கூட்டிச் சென்றுவிட்டால், கிடைத்த ஒரு வாய்ப்பும் போய்விடுமே. அவனுக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு அங்கு சந்தேகம் வர ரிஷியைத் தடுக்க முயன்றனர். சிங்கராசா தாத்தா, “ ம்... அவங்க போகட்டும். மலையரசா! நீயும், மாயவனும் அவங்களுக்குத் துணையா போயிட்டு வாங்க.” என்றார். மலையரசன் கண் அசைவில் சிலர் தொலைவில் காவலாய் நின்றனர். பலத்த காவல் அங்கு உருவாகியது.

சிறு அசைவையும் விடாது கவனிக்கும் ரிஷி, சுற்றுப்புறத்தையே மறந்தான். இப்பொழுது ஒருமுகமாய் மாலுச்சாமியை நினைத்துக்கொண்டு நடந்தான். கோயிலினுள் நுழைந்த அவன் “ஸ்வாமி! செய்த வினைக்கு பலன் உண்டு என நான் கேட்டது போலவே உடனடியாக என் உச்சந்தலையில் ஆணி அடித்தார்போல் காட்டி விட்டாய் ஸ்வாமி! என்னால் தாங்க முடியவில்லையே! என் தங்கையின் வாழ்வு என்னாவது? அம்மாவுக்கு எப்படியும் விஷயம் தெரிந்துவிடும். வேறு கல்யாணத்தை நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். தந்தையார் வேறு திருமணம் நடத்த வேண்டும் என்று நடத்தியே தீருவார். குடும்பத்தில் குழப்பம்தான் மிஞ்சும். இனி மகிழ்வுக்கு இடமில்லையா? தேனரசி என்னை விரும்பாவிட்டாலும் ஸ்வாமி நான் அவளை நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறேன். அது போல் மலையரசன் என் தங்கையை பார்த்துக் கொண்டாலும் அவளால் இங்கு வாழ முடியுமா? இந்த இடம் அவளுக்கு பிடிக்குமா? மலையரசன் சூர்யகலாவிற்கு ஏற்றவன் தானா? சுபமாக ஆக்கித்தாரேன்னு சொன்னியே' ஆக்கித் தா!” கண்களில் நீர் வழிய இறைவனிடம் கையேந்திய அண்ணனை ஆச்சரியமாக பார்த்தாள் சூர்யகலா.

“என்ன ஆச்சின்னா உனக்கு? நானே தைரியமா இருக்கிறேன். நீ ஏன் இப்படி இருக்கிறாய்?”

தங்கையின் துணிந்த குரலைக் கேட்டு சற்று தெளிவு பெற்ற ரிஷி, தன்னைச் சீர்செய்துகொண்டு, தங்கையின் தலையை தட்டி, “சரி! என்ன செய்யலாம்? சூர்யா குட்டி! சொல்.” என்று அவளிடம் கம்பீரமாக கேட்டான். மலையரசனும் அவள் என்ன சொல்லப் போகிறாள் என ஆவலுடன் பார்த்தான். சூர்யகலாவும், “நான் முதலிலேயே சொல்லி விட்டேனே, அண்ணா! பணத்தாசை பிடித்த இந்த கும்பலை ஒழிக்க வேண்டும். என்னை எப்படிக் கடத்தலாம்? பணத்திற்காக கடத்தல் வேலை செய்தால் நீ எப்படி விடலாம்.? நீ பயப்படுபவன் அல்லவே!

அவன் என் கழுத்தில் தாலி கட்டிவிட்டான் என்று நினைக்காதே இம்மாதிரி அயோக்கியனுடன் நிச்சயம் வாழ மாட்டேன்” அவன் உயிரோடும் இருக்க கூடாது. அவன் இறந்த பின் இந்தத் தாலியைத் தூக்கி எறிவேன். பிறகு, அம்மாவாலும் என்னை ஒன்றும் கூறமுடியாது.” என்றாள் உறுதியோடு. மலையரசனை நேருக்கு நேர் அஞ்சாமல் பார்த்தபடி தன் தங்கை கூறுவதை ரிஷி கவனித்தான்.

விறகு அடுக்கும் இடத்தில் தனியே இருக்கும்போது அவளின் தளிர் உடல் நடுங்கியதும், அவளின் பயத்தை, தான் போக்க முயன்றதும் தன்னை மீறி மலையரசனுக்கு நினைவு வந்தது. வராதா பின்னே? “தன் கண்களைக்கூட சிமிட்டாமல் நேருக்கு நேர் என்னை ஆக்ரோஷத்துடன் பார்த்தபடி பேசுகிறாளே!! என்னைக் கண்டு பயந்தவளா இவள்?” என வியப்புடன் பார்த்தான் மலையரசன்.

ஏதோ பேச முயன்ற மாயவனைத் தடுத்த மலையரசன் அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி இருந்தான். ரிஷி மலையரசனிடம், நான் என் தங்கையிடம் தனியாக பேசவேண்டும். நீ வேண்டுமானால் உன் ஆட்களை கோயிலைச் சுற்றி நிற்க வைத்துக்கொள்.” என்றான். ‘ரிஷி தன் பழையநிலைக்குத் திரும்பி விட்டான். ஏனெனில் ஆட்கள் சற்று தொலைவில் மறைவில் இருப்பதை கவனித்துவிட்டு கூறுகிறானே!’ என எண்ணிவிட்டு ரிஷி சொன்னபடியே காவலுக்கு ஆட்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நகர்ந்தான். ஆனால் கோயிலின் வேறு ஒருவழியாக வந்து பகலிலும் இருளாக இருக்கும் ஓரிடத்தில் பதுங்கி நின்று என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று உளவு பார்த்தான்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31