உன்னை விடமாட்டேன் – பகுதி 64
தன்னை பற்றி ரிஷி அவனுடைய தங்கையிடம் மிக உயர்வாகக் கூறி கொண்டிருந்ததை தன் காதால் கேட்டு ஆச்சரியப்பட்டு விட்டான் மலையரசன். 'ஒருவேளை தான் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்துவிட்டானோ? அதனால் அப்படி பேசுகிறானோ?’ என சந்தேகப்பட்டான் மலையரசன்.
“அண்ணா! நீ காட்டுக்குள் தங்கியிருந்த போது தினமும் இரவு ரகசியமாக என்னிடம் பேசினாயே! அதே போல்தான் இப்போதும் உயர்வாக பேசுகிறாய். அம்மாதிரி நீ முன்பு பேசும் போது நான் என்ன தெரியுமா நினைத்தேன். அங்கு பிறந்திருக்கலாமோ? மிகவும் சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம் என நினைத்தேன். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வாயில் மற்றொன்றை பேசுபவர்களோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்காது எனத் தோன்றியது. ஆனால், பொய் சொல்லி என்னைக் கடத்தியவனை நீ ஏன் நல்லவன் என்று கூறி வக்காலத்து வாங்குகிறாய். எனக்குப் புரியவில்லை.”
ரிஷி ஒரு நிமிடம் மௌனமானான். பிறகு, “சூர்யா குட்டி நான் அவனைப் பற்றி சொன்னதெல்லாம் உண்மை என வைத்துக்கொண்டால் உன் முடிவு என்னவாக இருக்கும்.” என்று கேட்டான் ரிஷி.
“என்னண்ணா? இது கற்பனை?...”
“நான் கேட்டதற்கு பதில் சொல்லும்மா”
“நிச்சயம் சந்தோஷமாக வாழ்ந்திருப்பேன். அப்பாவோடு அங்கு ஒவ்வொருவர் மனதில் இருப்பதையெல்லாம் ஆராய்ந்து நிர்வாக முடிவெடுக்கத் தேவையில்லை. எனக்குப் பிடித்த கைவினைப்பொருட்கள், இயற்கையான சூழல் இங்கு உள்ளதே. ஆனால் உண்மைநிலை வேறாயிற்றே. அண்ணா! இங்கு உள்ளவா்கள் நீ கூறியதுபோல் கள்ளம் கபடமற்றவர்களாகவும் பணத்தாசை இல்லாதவர்களாகவும் இல்லையே” என்று வருத்தத்துடன் வெளிப்படையாக பேசினாள் சூர்யகலா.
“நீ கூறுவது உண்மையா? சூர்யா! இவர் நல்லவர்களாக இருந்தால்கூட இங்கு நவீன வசதிகள் இல்லை” என்று அங்குள்ள குறைகளை விளக்கினான். அனைத்திற்கும் பதில் சொன்னாள். கடைசியில் “ஏன் அண்ணா இல்லாத கற்பனையை பற்றி கேட்கிறாய். உண்மையில் எனக்கு இங்கு எல்லாம் பிடித்திருக்கிறது என்பதற்காக இந்த அயோக்கியக கூட்டத்தோடு வாழ முடியாது. வேண்டுமானால் ஒன்று செய். இந்தக் கூட்டத்தை ஒழித்து கட்டி விடு. இந்த இடத்தை ஆக்ரமித்து விடு. அடிக்கடி வந்து போகும் அளவுக்கு பாதையை சீர்செய்து விடு. இது நம் இடமாகிவிடும் அல்லவா? நான் இங்கேயே இருக்கிறேன்.“ என்றாள்.
ரிஷிக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெளிவு ஏற்பட்டு விட்டது. தன் தங்கையிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் குடிலுக்கு நடந்தான். சூர்யகலா கேட்டாள் “அண்ணா! மலையரசனைக் கொன்றுவிடுவாய் தானே!” என்று. மலையரசன் அவ்வார்த்தையைக் கேட்டபடி பின்னால் அமைதியாக நடந்துவந்தான். ஆனால் பதில்கூறாமல் அமைதியாக இறுகிய முகத்துடன் நடந்த அண்ணனுடன் புரியாமல் அவளும் அமைதியாக நடக்க ஆரம்பித்தாள்.
மலையரசனுக்கு வேடிக்கையாக இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. வேடிக்கை என்னவென்றால் ரிஷி, தேனரசியைக் கடத்தியதைப் பற்றி தன் தங்கையிடம் ஒரு வார்த்தைக் கூட கூறாதது. மகிழ்ச்சி என்னவென்றால், சூர்யகலா தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் பணத்திற்காக என்னவோ செய்கிறார்கள். அதனாலே கொன்று விடு, வாழ மாட்டேன் என்கிறாள். உண்மை நிலை தெரிந்தால் அவள் தன்னுடன் நிச்சயம் வாழ்வாள் என்பது. ரிஷி என்னதான் செய்வான் பார்க்கலாம் என ஆவலுடன் காத்திருந்தான்.
XxxxxxxxxXxxxxxxXxxxxxxx
காலைக்கடன்களை முடித்து ரிஷி சமைக்கும்போது கூட இருந்து கற்றுக் கொண்ட சப்பாத்தி, குருமாவை வைத்துவிட்டு பிரதீபாவை சாப்பிடச் சொன்னாள் தேனரசி. நல்ல பெண்தான் மனதில் நினைத்துக்கொண்டாள் பிரதீபா. அப்படியே பேச முயன்றாள் ஆனால், தேனரசி மேற்கொண்டு பேசினால்தானே! தேனரசியை புரிந்துகொள்ள முடியாமல் குழம்பினாள் பிரதீபா டிபனை சாப்பிட்டு முடித்த தேனரசி ஆறாம் வகுப்பு பாடங்களை படிப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தாள் பிரதீபா. 'அடப்பாவமே எழுத படிக்கத் தெரியாத பெண்ணா? இவன் எங்கிருந்து இவளைப் பிடித்தான்.’ ஒன்றும் புரியாமல் ஒரே குழப்பமா இருந்தது அவளுக்கு. விஷயம் தெரியவில்லை எனில் மண்டை வெடித்து விடும் போல் இருந்தது. ரிஷி முக்கிய வேலையின்போது தேவையின்றி போன் செய்தால் ஒரு வழி செய்து விடுவான். அதனால் அமைதியாக இருந்தாள் பிரதீபா.
XxxxxxxxxXxxxxxxXxxxxxxx
குடிலை அடைந்த ரிஷி உள்ளே சென்று முல்லையரசியிடம், “இவளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என தன் தங்கையை ஒப்படைத்துவிட்டு வெளியே வந்தான். சென்னையில் தங்கையைத் தேடும் ஒரு போலீஸ் நண்பனைத் தொடர்புகொண்டான். “சூர்யகலா பத்திரமாக இருக்கிறாள் வந்து விபரம் சொல்கிறேன். தாயாரிடமும்’ தந்தையிடமும் தகவல் சொல்லிவிடுங்கள்” என்றான். சூர்யகலா அண்ணனின் செயலைப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். வெளியே வந்து தன்னிடம் பேச முயன்ற தங்கையை குடிலுக்குள் போய் இருக்கும்படி சொல்லி, உள்ளே அனுப்பிவிட்டு நேரே தனக்காக காத்திருக்கும் தாத்தாவிடம் மற்றும் மலையரசனிடமும் சென்றான் ரிஷி.
Comments
Post a Comment