உன்னை விடமாட்டேன் – பகுதி 65
மலையரசா! என் தங்கையை ஏன் கடத்திவந்தாய்?” கைகட்டியபடி நிதானமாக கேட்டான் ரிஷி. சூர்யகலா குடிலில் இருந்து அங்கிருந்த ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தாள். அவள் மட்டுமா பார்த்தாள். பெண்கள் கூட்டமும் ஆர்வமுடன் தேனரசியைப் பற்றி தெரிந்துகொள்ள குடிலுக்கு வெளியே குழுமியிருந்தது.
“என் தங்கையை நீ கடத்தி போகவில்லையா?” என்றான் மலையரசன்.
“உன் தங்கை என்னிடம் என்ன தவறு செய்தாள் என்று உனக்குத் தெரியாதா? என் தங்கை உன்னிடம் என்ன தவறைச் செய்தாள் என்று கடத்திவந்தாய்?”
நடுவில் பேச முயன்ற அனைவரையும் தடுத்தார் சிங்கராசா தாத்தா. சூர்யகலா மலையரசன் கூறியதையும், அதற்கு அண்ணன் கூறிய பதிலையும் கேட்டு அதிர்ந்தாள். ‘இது உண்மையா? அண்ணனா? அண்ணன் பெண்களிடம் தவறாக நடப்பவன் அல்லவே? என்ன கூத்து இது? ஒரு வேளை, அதனால்தான் அண்ணன் தன்னைக் கடத்தி வந்த மலையரசனை ஒன்றும் செய்யவில்லையா? இப்பொழுதுகூட அண்ணன் சிறிது கூட கோபத்துடன் கேட்கவில்லையே?’ என எண்ணினாள் சூர்யகலா .
“என் தங்கை தப்பு செஞ்சா இங்கேயே தலையை வெட்டிப்போட்டுட்டு போயிருந்தாக் கூட பரவாயில்லை. நீ எப்படி ஒரு பொட்டப்புள்ளய கடத்திட்டு போகலாம். இனி யார் அவளைக் கல்யாணம் பண்ணிப்பா? நீ கடத்திட்டுப்போனது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா?”
“முதலாவது, நான் அவள் தலையை வெட்டுற அளவுக்கு அவள் தப்பு பண்ணல. அவள் புத்தியில்லாமல் நடந்துகொண்டாள். நான் புத்தி புகட்ட கடத்திச்சென்றேன். . கடத்திட்டுப்போனது பெரிய தப்புன்னா அதே வேலையத்தான் நீ ஏன் செய்தாய்? நான் செய்ததுக்கு காரணம் இருக்கிறது. நீ செய்ததுக்கு காரணம் இருக்கிறதா?” ரிஷி மிகவும் நிதானமாக கேட்டான்.
மலையரசன் ‘அடப்பாவி செய்தது தவறே இல்லை என்பது போல் பேசுகிறாயே!’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். மலையரசனுக்கு பேச்சைவிட கைதான் நன்றாக பேசும். அவனை நிற்கவைத்து இப்படி கேள்வி கேட்டால் என்ன செய்வான்? ஆனாலும் தன் மனதில் உள்ளதை அப்படியே பேசினான்.
“என்ன நீ தப்பே பண்ணாதவன்போல பேசுகிறாய். ஆயிரம் இருந்தாலும் ஒரு பொட்டப்பிள்ளையக் கடத்துறது தப்புதான். நான் பண்ணதும் தப்புத்தான். ஆனால் அது உன்னால் தான். முதல்ல நீ தப்பு பண்ணலன்னா இது நடந்திருக்காது. என் தங்கைய நீ காட்டு பங்களாவுல கட்டுக் காவலோட வச்சிருக்க. உன் அம்மாகிட்டயோ, தங்கச்சிகிட்டயோ இவளுக்கு புத்தி புகட்ட கடத்திட்டு வந்தேன்னு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகாம தனியா காட்டு பங்களாவுல வச்சிருக்கிற. நீ வந்தாய் உன் தங்கையை பார்த்தாய். பார்க்கக் கூடாது என கட்டுக்காவலா வைத்திருக்கிறோம். ஆனால் நான் வந்தா நீ என்னை கொல்ல இரும்பு முள்வேலியில் கரண்ட் வைத்திருக்கிறாய்....”
“அடப்பாவி நீ வந்தால் உனக்கு ஒன்றும் ஆகக்கூடாதுன்னு எர்த் வைக்கச் சொன்னேன். நீ வந்த இடம் என்ன தெரியுமா? தீவிரவாதிகளை ரகசியமாக அடைத்து விசாரிக்கும் இடம். அவா்களைக் காப்பாற்ற விடுவிக்க வேறு தீவிரவாதிகள் வந்தால் சாகட்டும் என்று எர்த் வைக்காமல் எப்பொழுதும் கரண்ட் ஓடிக்கொண்டிருக்கும். ஷாக் அடித்து கரண்ட் உன்னை விட்டுவிட்டது. ஏனெனில் நான் எர்த் வைத்திருந்தேன்’ என்று விளக்கிக் கூறினான். மேலும் அவனே தொடர்ந்து பேசினான்.
“உன் தங்கை .காட்டு பங்களாவில் இருப்பதை நீ பார்த்தாயா? அவள் அங்கு இல்லை. என் வீட்டில் அம்மாவிடம் தான் இருக்கிறாள். ரகசியமாக. வேலையாட்கள், தங்கை, அப்பா முதற்கொண்டு வெளியே யாருக்கும் தெரியாது. அவளுக்கு உண்மையில் பாடம் புகட்டிக்கொண்டிருக்கிறோம். பாடம் முடிந்து நல்ல புத்தியுடன் வந்துவிடுவாள். ஆனால் நீ ஏன் என் தங்கையைக் கடத்தினாய்.”
புழுகிக்கொண்டிருக்கும் அண்ணனை கண்சிமிட்டாமல் பார்த்தாள். “அடப்பாவி உண்மையிலேயே ஒரு பெண்ணைக் கடத்தி வைத்திருக்கிறாயா? அம்மாகூடவேதான் நானிருந்தேனே. நீ எந்த பெண்ணையும் அங்கு கூட்டி வரவில்லையே. அந்த பெண்ணை என்ன செய்தாய்? என்ன தைரியம் உனக்கு? வா! வா! அம்மாவிடமே நன்றாக மாட்டிவைக்கிறேன்.” என மனதுள் எண்ணிக் கொண்டாள் சூர்யகலா .
Comments
Post a Comment